அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – கைலாசநாதர்
அம்மன் – சிவகாமி
தீர்த்தம் – தெட்சிணகங்கை
ஆகமம் – சிவாகமம்
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – கோவில்பத்து
ஊர் – முறப்பநாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மாநிலம் – தமிழ்நாடு
சோழமன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்தது. இந்த முகம் மாற வேண்டி சிவபெருமானை எண்ணி பிரார்த்தித்தான் அரசன். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். சோழனும் இங்கு வந்து நீராடினான். மன்னனின் மகள் முகம் மனித முகமாக மாறியது. பின்னர் சோழ மன்னன் சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். இக்கோயிலை வல்லாள மகாராஜா என்பவர் கட்டியதாகவும் ஒரு வரலாறு உண்டு.
நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில், நவக்கிரகங்களில் குருவிற்குரிய ஸ்தானத்தை பெறுகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை “தெட்சிணகங்கை” என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.
அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக்கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை காலபைரவர் என்றும், வாகனம் இல்லாதவரை வீரபைரவர் என்றும் கூறுகின்றனர்.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பற்றாக்குறையாக இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதனே இல்லை. ஆசையே அதற்கு காரணம். கையிலே நாலு காசு இருந்தால் தான் உலகம் மதிக்கிறது. ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.
இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “நடுக்கைலாயம்” என்கின்றனர். இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் ஆடை சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விநாயகருக்கு சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.
சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் “முறப்பநாடு” என்ற பெயர் வந்ததாம்.
பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.
திருவிழா:
திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment