சுந்தரமூர்த்தி நாயனார்
♦பெயர்: #சுந்தரமூர்த்தி_நாயனார்
♦பூசை நாள்: #ஆடிச்சுவாதி
♦அவதாரத் தலம்: #திருநாவலூர்
♦முக்தித் தலம்: #திருநாவலூர்
♦#வரலாறுசுருக்கம்:
||=====||=====||=====||
திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவர்.
அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர்.
ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர் தம் அழகில் ஈடுபட்டு ஆசை கொண்டனர்.
மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.
எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து "நீ மாதர்மேல் மனம் வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் மணந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக" என்று பணித்தார்.
சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து "எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்" என வேண்டிக்கொண்டார்.
சிவ பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் பிறந்தார்.
*♦ பிறப்பு மற்றும் வளர்ப்பு *:
திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருஅவதாரம் செய்தருளினார்.
சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர். நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார்.
நம்பியாரூரர் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.
அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.
சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணினார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார்.
முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடையனாருக்குத் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.
* தடுத்தாட் கொள்வது:
மன்னன் நரசிங்கமுனையரையர், சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோர் நம்பியாரூரர் திருமணம் ஏற்பாடு சிறப்பாக செய்தனர். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவம் கொண்டு வந்த சிவபெருமான். சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு வந்தார்.
முதியராய் வந்தவர் அங்குள்ளவர்களைப் பார்த்து "வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்" என்றார்.
அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் "தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்" என்றனர்.
அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக" எனக் கூறினார்.
நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து "உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறும்" என்றார்.
முதியவர் அவையோரை நோக்கி "நான் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வருகிறேன்;
நம்பியாரூரர் எனக்கு வழி வழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு" என்றார்.
சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்...
"அக்காலத்தில் நம்பியாரூரர் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார் முதியராய் வந்த சிவபெருமான்.
"ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்" என்றார் நம்பியாரூரர்.
"நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை அவையோர் முன்னிலையில்காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்" என்றார் அந்தணர்.
அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து ஓலையோ பிடுங்கி "பித்தனே
அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை" என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.
அதை கண்ட அந்தணர் "நம்பியாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்" என்றார்.
இதை கேட்ட நம்பியாரூரர் முதியவரை நோக்கி "நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்" என்றார்.
முதியவர் "நீ திருவெண்ணெய் நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்" என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார்.அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார்.
* திருவெண்ணெய்நல்லூர் அவையில்:
திருவெண்ணெய்நல்லூர் சபையில் நடந்த சம்பவத்தை நம்பியாரூரர் மற்றும் முதியவர் வேடம் தரித்த சிவபெருமான் இருவரும் கூறினார்கள். அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் மூலஓலை சுவடியே அளித்தார் முதியவர்.
அதை படித்த திருவெண்ணெய் நல்லூர் சபையின் அந்தணர்கள் ஓலை சுவடியில் இருக்கும் கையொழுத்தை ஒப்பிட்டு பார்த்து நம்பியாரூரர் அந்தணருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர். நம்பியாரூரரும் அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டார்.
அதன்பின் அவையினர் அந்தணரை நோக்கி "நும் முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தையும் எங்களுக்குக் காட்டுக" என்றனர்.
அதை கேட்ட அந்தணர் வேடம் தரித்த சிவபெருமான் "உங்களில் ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக" என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தார்.
பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்து நின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் "என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ" என்று வியப்புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார்.
* சிவபெருமான் காட்சியளித்தல்:
மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெருமான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து "நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ்வுலகியல் வாழ்வு உன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட் கொண்டோம்" என்று உண்மை உணர்த்தியருளினார்.
நம்பியாரூரர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் மெய்சிலிர்க்க சிவபெருமானை வணங்கினார். "நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக" எனப் பணித்தருளினார் பரமேஸ்வரன்.
அவ்அருளுரையைச் செவிமடுத்த நம்பியாரூரர் "என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்" என்று கூறி உளங்கசிந்து நின்றார்.
அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் "பித்தன் என்றே பாடுக" என்று இறைவன் அருளிச்செய்தார்.
நம்பியாரூரர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் "பித்தா பிறைசூடீ" என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
இத்திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த "இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக" என்று கூறி மறைந்தருளினார்.
திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல்:
ஒரு முறை சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார்.உடன் வந்த அடியார்களோடு அதிகை
வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார்.
உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து "அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் ஏன் வைத்தனையே" என்று கேட்டார்.
"நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை" என்றார் அந்தணர்.
நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அந்தணர் நம்பியாரூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார்.
நம்பியாரூரர் எழுந்து "இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார்?" என்று சினந்து கேட்டார்.
உடனே அந்தணர் "என்னை நீ இன்னும் அறிந்திலையோ" என்று கூறியவாறு மறைந்தருளினார்.
அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் "அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே" என்று வருந்தித் 'தம்மானை அறியாத சாதியார் உளரே' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார்.
* தம்பிரான் தோழராதல்:
திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் அடியார்கள் கனவில் தோன்றி "நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக" எனக் கட்டளையிட்டார்.
தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கல வாத்தியங்களுடன் சென்று வன்றொண்டரை எதிர் கொண்டழைத்தார்கள்.
நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார்களைத் தொழுது, "எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்ற கருத்துக்கொண்ட :கரையும் கடலும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார்.
அப்பொழுது யாவரும் கேட்க வானில் "நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக" என்ற அருள்வாக்குத் தோன்றிற்று.
அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் "தம்பிரான் தோழர்" என்று அழைத்தனர்.
இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.
* பரவையார் திருமணம்:
திருக்கயிலாய மலையில் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து திருமணபருவம் எய்தினார்.
பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பி வரும் போது ஊழ்வினை பரவையாரைக் கண்டார்.இருவரும் அன்பு கொண்டனர்.
இருவரும் வன்மீகநாதரிடம் தங்கள் விருப்பத்தை வேண்டினார்கள்.நடப்பவை ஈசன் செயல் அல்லவா! சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார்.
பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் பரவையார்க்கும் வேத நியமனபடித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.சுந்தரர் பரவையாருடன் சிவாலயம் சென்று செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி மகிழ்ந்திருந்தார்.
* திருத்தொண்டத்தொகை பாடியருளியது:
ஒருமுறை தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். "இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ?" என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார்.
தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து அவர் முன் காட்சி வழங்கி அடியார்களின் பெருமையை அவர்க்கு உணர்த்த விரும்பிச் சுந்தரரை நோக்கி "அடியார் பெருமையை எடுத்துக்கூறி பாடல் பாடி இத்தகைய அடியார்கள் கூட்டத்தை நீ அடைவாயாக" என்றருளிச் செய்தார்.
நம்பியாரூரர் "அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்" என்று வேண்டினார்.
சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார்.
நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
* குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:
குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத்தில் ஒருசமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய படித்தரங்களில்லாமைக்கு மனம் வருந்தி உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார்.
சிவபெருமான் அவர் கனவில் தோன்றி "ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம்" என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது.
குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் "இறைவன் கருணையை கூறி; அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும்" என்று வேண்டினார்.
அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து "நீளநினைந் தடியேன்" என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார்.
"இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும்" என்று அசரீரி சிவபெருமானருளால் எழுந்தது.
அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டுவந்து திருவாரூரில் பரவையார் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பின, காலையில் நெற்குவியலைக் கண்டு வியந்து மகிழ்ந்த மக்களனைவரும் சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்தார்.
* மன்னன் அளித்த பரிசுகளை பறித்துக் கொள்வது:
இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.
திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் "கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்" எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
♦சுந்தரமூர்த்தி நாயனார் அற்புதங்கள் :
* ♦செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
*♦ பரவையார் சினம் தீர சிவபெருமான் தூது சென்று சினம் தீர்த்தது.
* ♦சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை
விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
* ♦காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
* ♦அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
* ♦வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.என பலவற்றை கூறிக்கொண்டே செல்லலாம்.
* ♦#திருப்பாட்டு :
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.
சிவபெருமான் மேல் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டு கயிலை அடைந்தார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment