ஸ்ரீ அருள் சோமநாத சுவாமி திருக்கோயில்,
திரு நீடூர் அஞ்சல்,
மயிலாடுதுறை தாலுக்கா,
மயிலாடுதுறை மாவட்டம்,
தமிழ்நாடு - 609203.
*மூலவர்:
அருள்சோமநாதேசுவரர், கானநிருத்த சங்கரர், பாடியாடிய தேவர்
*தாயார்: வேயுறு தோளியம்மை,
வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை,
*தல விருட்சம்:
மகிழமரம்
*தீர்த்தம்:
ஆனந்த, செங்கழுநீரோடை, சூரிய, சந்திர, இந்திர, பத்ரகாளி, முனிவரர், ப்ருதி குண்டம், வருண தீர்த்தங்கள்-ஒன்பது.
*வழிபட்டோர் : இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன், முனையடுவார் நாயனார்.
*பாடல் பெற்ற தலம்.
தேவாரம்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சுந்தரர்
*பிரளயத்தின் முடிவில் கூட இந்த இடம் அழிக்கப்படவில்லை என்பதனால் நீடூர் என்ற பெயர் பெற்றது.
*மூலவர் சோமநாதர் "ப்ருதிவி லிங்கம்" (மணலால் ஆனது) என்பதால், இதற்கு நேரடியாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இது எப்போதும் ஒரு உலோக கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.
*தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவபூஜை செய்ய சிவலிங்கம் ஏதும் தென்படவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து, பாடல்கள் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடன காட்சி அருளினார்.
அதனால் சோமநாதப்பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று.
*மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காணலாம்.
*இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
*தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்ட, அவரும் சோமநாதரைச் சரணடையப் பணித்தார். நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான்.
*நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான "துளை" இன்றும் சிவலிங்கத்தில் காணப்படுகிறது.
*ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு “கற்கடக பூஜை” நடக்கிறது. அதனால் கடக ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.
*சந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் அவனது நோய் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஸ்ரீ சோமநாதர்" என்றும் போற்றப்படுகிறார்.
*சோமநாத சுவாமி சகல பிறவிகளிலும் ஏற்பட்ட சாபங்களை, தோஷங்களை நீக்க வல்லவர்.
*சூரியன், சோமநாதப் பெருமானையும், வேயுறு தோளியம்மனையும் வணங்கிய புகழ் மிக்க தலமிது.
*ஆவணி மாதம் சுவாமி மீது சூரிய ஒளி படுவது சிறப்பு ஆகும்.
*சூரியன் இங்கு பார்வதி தேவியை வழிபட்டதால் "ஸ்ரீ ஆதித்ய வரத அம்பிகை" என்று அம்பாள் போற்றப்படுகிறார்.
*சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.
*அம்மன் சந்நிதி முன்மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சனீசுவரர் உள்ளார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள்.
*இத்தலத்தில் நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, “ஒன்பது தீர்த்தம்” என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது. இதில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
*விநாயகர், "பெரியவர்", "பழையவர்", புனிதமானவர்" என்ற மூன்று நிலைகளில் இங்கு உள்ளார். இந்த வடிவங்கள் சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று சித்தர்களால் அழைக்கப்பட்டனர்.
படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்த பிறகே தம் பணியில் ஈடுபடுகின்றனர். இதனைப் பின்பற்றி செயல்படுவோர், குறைகள் நீங்கி இன்பம் பெறலாம்.
*63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் நாயனார் முக்தித்தலம் இது.
முனையடுவார் நாயனார் போரில் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் அவர்களுக்காகப் போர்செய்து பகைவர்களைப் போர்முனையில் வென்று, பெற்ற பெருநிதியங்களை சிவனடியார்களுக்கு அளித்தும், அவர்களுக்கு அறுசுவை திருவமுது செய்வித்தும் நெடுங்காலம் தொண்டு புரிந்து முக்தி பெற்றார்.
இங்குள்ள முனையடுவார் நாயனாரை வணங்க, செயல்களில் வெற்றியும் பகைவர்களை வெல்லும் வலிமையும் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.
*இது பாம்பாட்டி சித்தர் அருள் பெற்ற திருத்தலம் ஆகும்.
*மண்ணுலக வாழ்வுக்குத் தேவையான சகல செல்வங்களையும் அருளும் தலம் இது.
*பத்ரகாளி சிவனை வழிபாடு செய்த தலம் இது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் ஸ்ரீஆலாலசுந்தரி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.
No comments:
Post a Comment