Monday, September 9, 2024

திருமால் பூசித்த சிவத்தலங்கள்...

திருமால் பூசித்த சிவத்தலங்கள் (அரிய தேவாரத் திருப்பதிகக் குறிப்புகள்):
திருமகள் கேள்வராகிய ஸ்ரீமகாவிஷ்ணு எண்ணிறந்த சிவத்தலங்களில் சிவமாம் பரம்பொருளை பூசித்தும்  போற்றியும் பேரருள் பெற்றுள்ளார் ('திருவின் நாயகனாகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை' என்பது சுந்தரர் திருவாக்கு). இனி இக்கூற்றிற்கான அகச்சான்றுகளைப் பின்வரும் 9 தலங்களுக்கான தேவாரத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்துணர்வோம், 
*
(1)
(திருமழபாடி - 'காலையார் வண்டினம்' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 6)
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழபாடியே
*
(2)
(திருமாற்பேறு - 'ஊறியார் தரு' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலமார் கண்ட நின்னையே
*
(3)
(திருவையாறு - 'தானலாதுலகம்' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 3)
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்றலில்லை
சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கையில்லை
தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளுமில்லை
அரிபுரி மலர்கொடேத்தும் ஐயன் ஐயாறனார்க்கே
*
(4)
(திருக்கச்சி ஏகம்பம் - 'கரவாடும் வன்னெஞ்சர்க்கு' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 6)
தேசனைத், தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப், பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளி ஆகாசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே
*
(5)
(திருக்கழுக்குன்றம் - 'கொன்று செய்த' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 8 )
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
சந்தம் நாறும் புறவில் தண் கழுக்குன்றமே
*
(6)
(திருமுதுகுன்றம் - 'பொன்செய்த மேனியினீர்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படியாரும் இயலாள் பரவைஇவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே
*
(7)
(திருநின்றியூர் - 'அற்றவனார் அடியார்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 9)
காலமும் ஞாயிறுமாகி நின்றார், கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்பார், அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சுண்டவருக்கிடம் திருநின்றியூரே
*
(8 )
(திருவீழிமிழலை - 'நம்பினார்க்கருள் செய்யும்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 4)
பந்தம் வீடிவை பண்ணினீர், படிறீர், மதிப்பிதிர்க் கண்ணியீர் என்று
சிந்தைசெய்திருக்கும் செங்கையாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்ஆட, மால்அயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
*
(9)
(திருவாரூர் - 'கரையும் கடலும்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 9)
நமர்பிறர் என்பதறியேன், நான்கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன் தக்கவாறு ஒன்றுமிலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...