Saturday, September 14, 2024

கடலூர் திருக்கழிப்பாலை வேதநாயகி சமேத பால்வண்ணநாதர் ஆலயம்....




கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை என்ற திருத்தலத்தில் வேதநாயகி சமேத பால்வண்ணநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 4-வது தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆலய இறைவனை, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரும், திருப்புகழில் அருணகிரிநாதரும் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

புராண காலத்தில் இந்தத் தலம் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆறு, கடலுடன் கலக்கும் பகுதியில் இருந்துள்ளது. ஒருமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்வாலயம் சிதையுண்டு போனது. இதையடுத்து பக்தர்கள் இத்தல மூர்த்தியை அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது.

தல புராணம்
கபில முனிவர் பூலோகத்தில் உள்ள ஒவ்வொரு தலமாக சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக வில்வ வனமாக இருந்த இத்தலத்திற்கும் வந்தார். பின்னர் அங்கேயே தங்கியிருந்து சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் உள்ள மணல், வெள்ளை வெளேர் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார். அதற்கான காரணத்தை அவர் தேடியபோது, அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் அனைத்தும், மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது, அந்தப் பகுதி மணலின் மீது தாமாக பால் சுரப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. அந்த பால் எங்கும் பரவியதால் அங்குள்ள மணல் வெள்ளையாக இருப்பதை அறிந்து கொண்டார்.

பின்னர் அந்த வெண்ணிற மணலைக் கொண்டே ஒரு சிவலிங்கம் செய்து, அதனை அங்கு பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்து வந்தார். ஒரு முறை அந்த வழியாக சகரன் என்ற மன்னன் குதிரை மீது வந்தான். அப்போது குதிரையின் கால் குளம்பு பட்டு, சிவலிங்கத்தின் மீது பெரிய பள்ளம் விழுந்தது. சிவ பூஜைக்காக வந்த முனிவருக்கு, சிவலிங்கத்தின் மீது இருந்த பள்ளத்தைப் பார்த்ததும் வருத்தம் மேலிட்டது. பிளவுபட்ட அந்த லிங்கத்தை மாற்றி, புதிய லிங்கம் செய்து வழிபட முடிவு செய்தார். அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அம்பாள் சமேதராக சிவபெருமான் கபில முனிவருக்கு காட்சி கொடுத்தார்.

‘முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்யப்பட்ட இந்த லிங்கத்தை, மாற்றாமல் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே வைத்து வழிபடுங்கள். தேவலோகத்து பசுவான காமதேனுவே, பசுவடிவில் இங்கு வந்து பால் சொரிந்தது. பால் கலந்த மண்ணில் செய்யப்பட்ட இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களையும், வாழ்வில் மேன்மையையும் அடைவார்கள்’ என்று சிவபெருமான் கூறினார். இதையடுத்து கபில முனிவர், அந்த சிவலிங்கத்தைக் கொண்டே தனது வழிபாட்டைத் தொடர்ந்தார். பால் கலந்த மணலில் செய்யப்பட்டதால், இந்த இறைவனுக்கு பால்வண்ணநாதர் என்று பெயர் வந்தது. லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதி இன்றளவும் “வெள்ளை மணல்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்திற்கு முன்னதாக பாதி உருவம் மண்ணில் புதைந்த நிலையில், கருங்கல் கொண்டு செய்யப்பட்ட நந்தி சிலை உள்ளது. உட்பிரகார நுழைவு வாசலில் இருபுறமும் அதிகார நந்தியும், அவரது துணைவியாரும் இடம்பெற்றுள்ளனர். பிரகாரத்தில் தென்மேற்கு பகுதியில் மகா விநாயகர் சன்னிதியும், அடுத்ததாக உள்ள மண்டபத்தில் பாலகணபதி, நாகர், ஆத்மலிங்கம் ஜோதிலிங்கம், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, மெய்ப்பொருள் நாயனார் மற்றும் நால்வரும் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து தனி சன்னிதியில் வள்ளி-தெய்வானையுடன் சண்முகரும், கஜலட்சுமி, புவனேஸ்வரியும் எழுந்தருளியுள்ளனர்.

இதையொட்டி வாகன மண்டபமும், கோமுகம், அதன் அருகில் சண்டேஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளது. கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கி ஜெயவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்குநோக்கி லிங்கோத்பவர், வடக்கு நோக்கி பிரம்மா, துர்க்கை, ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தின் வெளிப்புறத்தில் பிரகாரசுற்று முடியும் இடத்தில் மற்றொரு துர்க்கை வீற்றிருக்கிறார். இந்த துர்க்கை சதுரா துர்க்கை என்று அழைக்கப்படுகிறார். நான்கு யுகங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும் இந்த துர்க்கையின் இடது கரம் சேதமடைந்திருக்கும் காரணத்தால், ஆலயத்திற்குள் வைக்காமல் மண்டபத்தின் வெளியில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய உற்சவ காலத்தில் இந்த துர்க்கைக்கு வெள்ளியாலான திருக்கரம் பொருத்தப்படுகிறது. ஆலயத்திற்கு வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் காலபைரவர், நவக் கிரகங்கள், சன்னிதியும் சூரியர் சந்திரர் திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தல இறைவனை கபில முனிவர், அருணகிரிநாதர், திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், வால்மீகி முனிவர் மற்றும் ஏராளமான அடியார்கள் வழிபட்டுள்ளனர். அகத்தியருக்கு, சிவபெருமான் தனது திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. பிரகார தரிசனம் முடித்து பலிபீடம், கொடிமரம், தனி மண்டபத்தில் இருக்கும் நந்தி ஆகியோரை தாண்டி உள்ளே சென்றால் மகாமண்டபத்தின் வட கிழக்கில் பள்ளியறையும், வடமேற்கில் நடராஜர், சிவகாமி அம்பாள் சன்னிதியும் உள்ளது. இங்குள்ள நடராஜர் சடைமுடி அள்ளிமுடித்த கோலத்தில் காட்சியளிப்பதும், சிவகாமி அம்மன் தனது தோழிகளான விஜயா, சரஸ்வதி ஆகியோருடன் சேர்ந்திருப்பதும் எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

அபிஷேக பால் பிரசாதம்

கருவறையில் மூலவர் பால்வண்ணநாதர் கிழக்கு நோக்கி காட்சியளித்து அருள்பாலிக்கிறார். அவருக்குப் பின்னால் சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் இடம்பெற்றுள்ள காட்சி கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. குதிரையின் கால்குளம்பு பட்டு பிளவுபட்ட லிங்கத்திற்கே இன்றளவும் பூஜை நடத்தப்படுகிறது. குதிரைக் குளம்படிபட்ட பள்ளம், இரண்டு லிட்டர் பால் பிடிக்கும் அளவில் உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு பின்னர், இதில் தேங்கி நிற்கும் பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பாலை பருகினால், அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நாள்தோறும் நான்குகால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சிவாலயங்களுக்கே உரித்தான மாதாந்திர உற்சவங்கள் மற்றும் வருடாந்திர உற்சவங்கள் அனைத்தும் நடத்தப்படுகின்றன.

காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இத்தல விருட்சம் வில்வ மரமாகும். தல தீர்த்தம் பஞ்சாக்கர தீர்த்தம் ஆகும்.

சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டபட்டிணம் செல்லும் பேருந்தில் சென்றால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் திருக்கழிப்பாலை திருத்தலத்தை அடையலாம். ஆட்டோ மூலமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இந்த ஆலயத்திற்கு அருகில் சிதம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.

பைரவ தரிசனம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமைப்பெற்ற இத்தலத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. அது இந்தக் கோவிலின் தென் கிழக்கு மண்டபத்தில் தனி சன்னிதியில் அமைந்துள்ள பைரவர். சிவனின் அறுபத்து நான்கு மூர்த்திகளில், ருத்திர ரூபமாக கூறப்படும் கால பைரவர், சிவ ஆலயங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருப்பார்.

இத்தலத்தில் உள்ள பைரவர், காசியில் உள்ள கால பைரவரைப் போல நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். 4 அடி உயரம் கொண்ட பைரவர், 27 மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து சிங்கப் பல்லுடன் வீற்றிருக்கிறார். காசியில் உள்ள எட்டு பைரவர்களையும் வடிவமைத்த சிற்பியே, இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இவரை தரிசித்தால் காசியிலுள்ள பைரவரை தரிசித்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. 

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சஹஸ்ரலட்சுமீஸ்வரர் உத்திரட்டாதி தீயத்தூர் , புதுக்கோட்டை ,

உத்திரட்டாதி நட்சத்திர கோயில்🙏🙏 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். த...