Saturday, September 7, 2024

ஆகம விதிப்படியான நித்திய ஆன்மார்த்த சிவபூசை

சிவபூசையில் இன்றய சவால்களும் தடைகளும், அவற்றிற்கான தீர்வுகளும்.
தட்சிணகைலாச புராணம், 
அர்ச்சனாவிதிச் சருக்கம்
தொகுப்பு
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன்
சைவ சித்தாந்த பீடம், கனடா

நித்திய சிவபூசை செய்யும் சைவ அபிமானிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கு லௌகீகக் காரணங்கள் பல இருந்தாலும், அறிந்தோ அறியாமலோ  சிவபூசை செய்வதற்கு வழி காட்ட என்று இருக்கும் ஒரு சிலரின் பயங் காட்டல் மிக முக்கிய காரணங்களில் ஒன்று.இதனால் தான் ”சிவபூசையில் கரடி புகுந்தது போல” எனும் பேச்சுவழ்க்கு வந்ததோ என்று தோன்றுகின்றது.  சிவபூசைக்கு வழிகாட்டும் நூல்களும், உரைகளும், பேச்சுகளும், பதிவுகளும் ஆகம வழிப்படியான ஆன்மார்த்த சிவ பூசையைச் ”சிதம்பர சக்கரம் பேய் பார்த்தது போல” ஆக்கி விட்டது போலத் தோன்றுகின்றது. 

இனிச் சிவ பூசை செய்கின்றவர்களிலும் இலை மறை காய் போல ஓரிருவர்களைத் தவிர ஏனையோர் அதற்குரிய பாவனையும், விளக்கமும் இன்றிச் செய்வதால் அதன் பயன் குன்றியும் குறுகியும் போகின்றது என்றுதான் சொல்லவேண்டும். அத்தோடு இடம், பொருள், ஏவல் கருதிச் சுருக்கியும் விரித்தும் தமது பூசையைச் செய்யத் திறன் அற்றவர்களாகவும் இருப்பதால் தாம் செய்யும் சிவபூசையைத் தமக்கே ஒரு சுமையாக்கித் தம்மையும் வருத்தி, இதற்காக மற்றவர்களையும் பாடுபடுத்தி விடுகின்றார்கள். இது மற்றவர்களையும் சிவபூசையின்பால் ஈர்த்து ஆட்கொள்வதற்குப் பதிலாக அவர்களைப் பயம் காட்டி விலகி ஓடப்பண்ணிவிடுகின்றது. அத்தோடு தாமும்  தாம் அறியாமலே ஏதோ செயற்கரிய செய்வதுபோலக் கருதியும், பேசியும், எண்ணியும், சிவபூசை செய்யும் பெரியராகத் தம்மைக் காட்டியும் கொள்கின்றார்கள்.  

இதனால் சிவபூசை என்பது ஏதோ செயற்கரிய கடினமான செயல் என்று பலரும் இன்று ஒதுங்கி ஓடுகின்றார்கள். பலர் ஆர்வம் இருந்தாலும் இன்றைய உலகில் இல்லறத்தில் இருந்துகொண்டு நமது தொழில் மற்றும் சமூக முயற்சிகளுடன்  நித்திய சிவபூசை செய்வது என்பது கடினமானது என்று புறக்கணித்து வருகின்றார்கள்.. 

திருமூலர் காலத்துக்கு முன்னிருந்தே சிறப்பாக, உள்ளார்த்தம் செறிந்த மந்திரம், பாவனை, கிரியைகளுடன் கூடிய எளிமையான நித்திய ஆன்மார்த்த சிவபூசை மரபாக வந்த போதிலும் கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளாக ஆகமங்களிலும் பத்ததிகளிலும் தேடித்தேடி ஒவ்வொரு விதிமுறைகளையும் கண்டு தொகுத்து எளிமையான நாளாந்த சிவபூசையை முழுநேரச் சிவப்பணியில் உள்ள சிவாச்சாரியார்களும், துறவிகளும் கூடச் செய்வதற்கு அரிய அல்லது நடைமுறைச்சாத்தியம் இல்லாத ஒரு சிக்கலான நடைமுறையாக்கிவிட்டனர். 

பூசை மட்டுமல்ல; சமய தீட்சை பெற்றவர்கள் செய்யும் நித்திய சைவ அனுட்டானமே இவ்வாறு சிக்கலாக்கப்பட்டுள்ளது. தினசரி  நான்கைந்து நிமிடத்தில் செய்துகொள்ளக்கூடிய சைவ நித்திய அனுட்டானத்தை ஒன்று ஒன்றரை மணி நேரம் நீட்டித்துச் சிக்கலாக்குகின்றனர்.  ஆறுமுக நாவலரின் நித்திய கரும விதியில் உள்ள எளிமையான சைவ அனுட்டான முறையை இன்று வழக்கில் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள சைவ அனுட்டான முறைகளுடன்  ஒத்து நோக்கினால் இது நன்கு புரியும்.

”அனுட்டானத்துக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல் எடுத்தால் எவ்வாறு சிவாச்சாரியார் ஒருவர் ஆறுமுக நாவலர் சைவ வினாவிடை நித்திய கருமவியலில் சொல்லப்பட்டபடி காலையில் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு (இரண்டு மணித்தியாலங்கள்) முன்னர் எழுந்து தனது நித்திய கடன்களை முடித்து, ஸ்நானம் செய்து தனது வைதீக சந்தியாவந்தனத்துடன் கூடிய காயத்திரி ஜபம் செய்து, பின்னர் சைவ அனுட்டானம் செய்து, அதன் பின்னர் ஆன்மார்த்த  சிவபூசையும் செய்து முடித்து உரிய வேளையில் காலைப் பூசைக்கு கோவிலைத் திறக்க முடியும்? 

வெறுமனே புத்தகங்களில் எழுதி வைத்துவிட்டு நடைமுறையில் சிவாச்சாரியார்கள் உட்பட பெரும்பாலோர்  இவற்றைப் பின்பற்றுவதில்லை; பின்பற்ற முடிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் கிறித்தவத்தில் கூட தேவாலயத்தில் பிரார்த்தனையை நடாத்தும் போதகர் அது தொடங்குவதற்கு முன் அதற்கென்றுள்ள தனியறையில் சென்று தனது தனிப்பட்ட ஆத்மார்த்த வழிபாடு செய்த பின்னரே ஆராதனையைத் தொடங்க வேண்டும் என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது கண்கூடு.

இவ்விதமான நடைமுறைச் சாத்தியத்துக்கு கடினமான வழிகாட்டல்களால் சைவம் வெறும் புத்தகத்துடன் நிற்கின்ற சமயமாக நடைமுறையிலிருந்து தூரப்போகின்ற அபாயம் மிக அதிகமாகியுள்ளது. இதேபோல, சாதனைகள் எதுவும் இல்லாமலே பூசனைகளும், போதனைகளும் செய்வோர் பெருகி தாமும் கீழே வீழ்ந்து மற்றவர்களையும் வீழ்த்தும் குருட்டாட்டம் ஆடும் குருமாரின் அபாயமும் முன்பு இல்லாதவாறு ஓங்கி வளர்ந்து வருவதும் உண்மை. 

மறுபுறம், இந்த அனுட்டானம் கிரியைகள் யாவும் அர்த்தமற்றவை; தேவையற்றவை; தடைகளாக உள்ளவை; இவற்றைக் கடந்து ஆன்மீகத்தைக் காணுவோம்; காட்டுவோம் என்று கூறும் நவீன குருமாரின் கூட்டமும் அவர்களைப் பின்பற்றும் மேலோட்டமான ஆன்மீகக் கூட்டமும் பெருகிவருகின்றது என்பதும் உண்மை.

மறுபுறம் தீட்சைகளை தகுந்த குருமாரிடம் பெற்றாலும் அவர்களிடம் பெற்ற விதிவிலக்காலோ, அல்லது தமது உதாசீனத்தாலோ அனுட்டானம் பூசைகளைப் புறக்கணிப்போரும் பலர். இதனால் வைத்தியரிடம் சென்று நோய்க்கு மருந்து எடுத்தாலும் அதைப் பாவிக்காதவர் போலவும், பாவித்தாலும் வைத்தியர் சொல்லும் பத்தியம் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாதவர் போலவும் பிறவிப்பிணி மாளாமல் அல்லலுறுகின்றனர். 

இலங்கையின் பழமையான தல புராணங்களில் ஒன்றாகிய தட்சிண கைலாச புராணம் 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில் பிரம்மன் சிவனைப் பூசை செய்து வழிபட்டதை விளக்கும் அர்ச்சனா விதிச் சருகத்தில் ஆகம விதிப்படியிலான ஆன்மார்த்த சிவபூசை சிறப்பாக எளிமையாகச் செய்யுள் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது இன்று பரிந்துரைக்கப்படுகின்ற  ஆத்மார்த்த சிவ பூஜா பத்ததிகள், சிவபூசா விதிகள் பற்றிய பல நூல்களைவிட மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், ஆர்வமுள்ள பலருக்கும் நடைமுறைச்சாத்தியம் உள்ளதாகவும் உள்ளதைக் காணலாம். இது பாவனையும் சாதனையும் அர்த்தம் செறிந்ததாகவும், அதே சமயம் மிக எளிமையாகவும் உள்ளது குறிப்பித்தக்கது. 

இவற்றை இங்கு விளக்கக் குறிப்புகளுடன் மீள் பதிவு செய்வதன் மூலம் பலருக்கும் சிம்மசொப்பனமாக இன்று விளங்கும் ஆகம வழியிலான நித்திய ஆன்மார்த்த சிவலிங்கபூசையை இல்லறத்தில் உள்ள தொழில்முனைவோருக்கும் கூட இலகுவானதாகவும், எளிமையானதாகவும், அதே சமயம் செறிவும் நோக்கமும் சிதையாத படியும் வழங்குவதே நோக்கம். இதனால் பக்தியும், ஆர்வமும், சமய தீட்சையும் உள்ள சைவ அன்பர்கள் பலரும் விசேட தீட்சையும் எடுத்து சிவலிங்கத்தைப் பெற்று விதிப்படி நாள்தோறும் பூசித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகின்றோம். ஆகம விதிப்படியான நித்திய ஆன்மார்த்த சிவபூசையை இலகு வழியில் அனைவருக்கும் எடுத்துச் செல்வோம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...