Saturday, March 22, 2025

சென்னையிலே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்கள் உள்ளது...

சென்னையிலே பஞ்சபூத ஸ்தலங்கள்!
*நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்சபூதங்கள் சேர்க்கையினால் இந்த பிரபஞ்சமும் மற்றும் ஜீவராசிகளும் உண்டானது.*

நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்சபூதங்களால் தான் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

*‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ என்கிறது தொல்காப்பியம்.*
*இதனை உணர்த்தும் வகையில் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய நூலான புறநானூற்றின் மூலம் அறியலாம்.*

*தென் இந்தியாவில் கீழ்கண்ட பஞ்ச பூத ஸ்தலங்கள் பக்தர்களிடையே பிரசித்தி பெற்று விளங்குகின்றன....*

*நிலம் (ஶ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்)*

*நீர் (ஶ்ரீஜம்புலிங்கேஸ்வரர் கோயில், திருவானைக்காவல்)*

*நெருப்பு (ஶ்ரீஅண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை)*

*காற்று (ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில், காளஹஸ்தி)*

*ஆகாயம் (ஶ்ரீநடராஜர் கோயில், சிதம்பரம்)*

*இந்த பஞ்சபூத ஸ்தலங்களை சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் சென்னையில் பல நூற்றாண்டுகளாக உள்ள கீழ்கண்ட பஞ்சபூத லிங்கங்களை தரிசித்து நற்பலன்களை பெற்று வருகின்றனர்.*

*சென்னையில் பஞ்சபூத தலங்கள்!*
*1. தங்கசாலையில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் (நிலம்)*

*2. புரசைவாக்கத்தில் ஸ்ரீகங்காதீஸ்வரர் (நீர்)*

*3. சௌகார்பேட்டையில் ஶ்ரீஅருணாசலேஸ்வரர் (நெருப்பு)*

*4. பாரிமுனையில் ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் (காற்று)*

*5. சூளையில் ஸ்ரீசிதம்பரேஸ்வர் (ஆகாயம்)*

*அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்!*

சென்னையில் தங்கசாலை என்ற மிண்ட் சாலையில் ப்ரித்வி ஸ்தலமான (நிலம்) அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீகாமாட்சி சமேத ஶ்ரீஏகாம்பரேஸ்வரர் அருள் புரிந்து வருகிறார்.

இக்கோயில் 500 ஆண்டு பழமையானது. இதன் ஸ்தல விருக்ஷம் மாமரம்.

இந்த ஸ்தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் ஸ்தலமாகவும் உள்ளதாக ஐதீகம்.

இந்த கோயில் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பார்க்/பூங்கா மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*அருள்மிகு ஸ்ரீகங்காதீஸ்வரர் திருக்கோயில்!*

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நீர் ஸ்தலம் அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஶ்ரீபங்கஜாம்பாள் சமேத ஶ்ரீகங்காதரேசுவரர் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். இக்கோயில் சுமார் 600 ஆண்டு பழமையானது.

இதன் ஸ்தல விருக்ஷம் புரசு.

பகீரதன் சிவனை இங்கே பிரதிஷ்டை செய்து கங்காஜலம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்ட ஸ்தலம். இங்கே உள்ள கிணற்றில், கங்கையே வாசம் செய்வதாக ஐதீகம்.

இத்திருக்கோயில் திருமணத் தடை, முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், எதிரிகளால் ஏற்படும் தொல்லை ஆகிய இம்மூன்றுக்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கிறது.

இந்தக் கோயில் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் கங்காதீஸ்வரர் தலத்தை வணங்கி, சகல வளங்களும் பெறுவோம்!

*அருள்மிகு ஶ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயில்!*

சென்னை சௌகார்ப்பேட்டை பள்ளியப்பன் தெருவில் உள்ள அக்னி ஸ்தலமாக இருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஶ்ரீஅபிதகுஜாம்பாள் சமேத ஶ்ரீ அருணாசலேசுவரர் அருள்பாலித்து வருகின்றார்.

இக்கோயில் சுமார் 250 வருஷங்களுக்கு முற்பட்டதாகும். கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு உடனே நினைவிற்கு வருவது அண்ணாமலை ஜோதி தரிசனம்தான். கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலை சென்று ஜோதி தரிசனம் பெற்றிட முடியாதவர்களுக்கு அந்த பாக்கியத்தை வழங்குவதற்காகவே அருணாசலேஸ்வரர் இங்கு கோயில் கொண்டுள்ளார்.

ஜீவகாருண்யத்தை போதித்த ராமலிங்க வள்ளலார் அடிக்கடி வந்து வழிபட்ட ஆலயம் இது. அருணாசலேஸ்வரர் கம்பீரமாக பெரிய சிவலிங்கத் திருமேனியாகவும், அம்பாள் ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்திலும் காட்சியளிக்கிறார்கள். காஞ்சி மஹாபெரியவாள் 1967ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 திருவண்ணாமலை சென்று வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும்.

பிராட்வேயிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணித்து யானைக்கவுனி காவல் நிலையம் நிறுத்தத்தில் இறங்கி, வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாபிள்ளை தெரு வழியாக நடந்தால் இந்த ஸ்தலத்தை அடையலாம்.

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்!*

சென்னை பாரிமுனையில் பவளக்காரத்தெருவில் உள்ள வாயு ஸ்தலமாகிய அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ஶ்ரீ ஞானபிரசன்னாம்பிகை சமேத ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர் அருள் புரிந்துகொண்டிருக்கிறார். இந்த கோயில் காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சமமாக கருதப்படுகிறது.

பிராட்வே பேரூந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது. இராயபுரம் இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*அருள்மிகு ஸ்ரீசிதம்பரேஸ்வர் திருக்கோயில்:*

சென்னை சூளை, ஏபி சாலையில் உள்ள ஆகாய ஸ்தலமான அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயிலில் ஶ்ரீசிவகாமி சமேத ஶ்ரீசிதம்பரேசுவரர் அருள் புரிகின்றார்.

இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும். மூலவரின் இன்னொரு பெயர் திருமூலநாதர். நடராஜர், மற்றும் சிவகாமியின் திருமேனி கல்லினால் அமைந்திருப்பது கோயிலின் தனித்துவமான அம்சமாகும். தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் இரண்டு முறை (காலை 08.30 மற்றும் இரவு 08.30 மணி) நடைபெற்று வருகிறது.

இக்கோயில் இருநூறு ஆண்டுகள் பழமையானது. இதன் ஸ்தல விருக்ஷம் வில்வ மரம்.

தெற்கே சிதம்பரம் சென்று ஆகாச லிங்கத்தை தரிசிக்க முடியாதவர்கள், சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக சிதம்பரேசுவரர் கோயிலை தரிசித்து நற்பலன்களை பெறலாம்.

இந்தக் கோயில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே உள்ள சாலையில் அவதானம் பாப்பையா தெருவில் அமைந்திருக்கிறது.

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*வெளியூர்களில் இருக்கும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்குவதன் மூலம் அனைத்து நற்பலன்களை பெற முடியும் என்பது ஐதீகம்.*

*இந்த ஐந்து ஸ்தலங்களும் ஒவ்வொன்றும் வெகு தூரத்தில் இல்லாததால் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் அனைத்து கோயில்களையும் ஒரே நாளில் கூட சென்று தரிசிக்கலாம். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சண்டேச நாயனார்" அவதார தலம் தஞ்சாவூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர்.

சிவபெருமானின் திருக்கரங்களால் தீண்டப்பெற்று  பட்டம் சூட்டப் பெற்ற  ஒரே நாயன்மாரான, சிவபூசைகுரிய பாலை காலால் எட்டி உதைத்து இடையூற...