Monday, April 7, 2025

கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம்?


51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமான "#குமரிசக்திபீடம்" என்று அழைக்கப்படும்,
இந்தியாவின் 
கடை கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் ,
பாணாசுரனை வதம் செய்து 
கன்னி தெய்வமாக நின்ற கோலத்தில் தவமிருக்கும் 
இடமான 
தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள 
உலகப் புகழ்பெற்ற 
#கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 


அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இந்தியாவின் தென் எல்லையில் அமைந்துள்ள இத்தலத்தில், சில பவுர்ணமி தினங்களில் மாலை நேரத்தில் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும், முழுமதி கீழைக் கடலில் எழுவதையும் ஒரே சமயத்தில் காணலாம். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

#அன்னையின் தோற்றம்

தவக்கோலம் பூண்டு விளங்கும் குமரி தெய்வத்தின் கோயில் கடலோரமாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் கன்னியாகுமரி அம்மன். இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக அருள்பாலிக்கிறார். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது. காரிருளை அழிக்கும் வல்லமை தனக்கு உண்டு என்பதை குமரியன்னை, தன் பிறைமதியின் ஒளி மூலமாக அறிவித்தபடி இருப்பதாக நம்பிக்கை.

உயர்ந்த லட்சியத்துக்காக தவம் மேற்கொள்ளும்போது, அளவில்லாத வலிமைகள் தானாக வந்தடையும் என்பதற்கு ஏற்ப, தன் தவப்பயனால் வலிமை பெற்ற அன்னை, உலகம் முழுமைக்கும் தன் வலிமையை உணர்த்துபவராக இருக்கிறார்.

#தல வரலாறு:

கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். புராண காலங்களில், கடும் தவத்தை மேற்கொள்வதன் மூலம் அசுரர்கள் கூட வரங்களை சுலபமாக பெற்று விடுவார்கள். கடும் தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை அளித்து விடுவார்கள். இப்படித்தான் பாணாசுரன் எனும் அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து ‘தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும்’, ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக் கூடாது’ என்றும் வரத்தினை பெற்று விட்டான். அந்த அரக்கன் நினைத்துள்ளான் ‘மென்மையான தேகத்தையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப்பெண் மூலம் எப்படி மரணம் நிகழ முடியும்’ என்று இப்படி ஒரு வரத்தை வாங்கி விட்டான்.

வரத்தினை பெற்றுக்கொண்ட பாணாசுரனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முனிவர்களையும், தேவர்களையும் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் விஷ்ணுவோ பாணாசுரனின் மரணத்தில் இருக்கும் ‘கன்னிப் பெண்ணால் தான் மரணம்’ என்ற ரகசியத்தை அவர்களுக்கு கூறினார்.

விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிவபெருமான் இதற்கு தீர்வு வழங்கினார். அந்த அசுரனை அழிப்பதற்கு, அம்பாளான சக்தி தேவியினால் தான் முடியும் என்ற ஆலோசனையை தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கூறினார். தேவர்களும், முனிவர்களும் சக்தி தேவியை நினைத்து தவம் மேற்கொண்டனர்.

தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில்  அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாக பிறந்த சக்திதேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு, ஈசனை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள்.

அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகினை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் ஈசன்.

இதனை அறிந்த தேவர்களுக்கு பயம் வந்துவிட்டது. சக்தி தேவிக்கு திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது என்று தான். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த அந்த நாரத முனிக்கு மட்டும் இது அந்த ஈசனின் திருவிளையாடல் தான் என்பது புரிந்தது.

சக்தி தேவிக்கும், ஈசனுக்கும் நடக்கப்போகும் திருமண பேச்சானது சபைக்கு வந்தது. ஆனால் இந்தத் திருமணமானது எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமும், நாரதரின் எண்ணமுமாக இருந்தது. திருமணத்தை நிறுத்துவதற்கு  நாரதர் கலகத்தை தொடங்கிவிட்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே போய் முடியும்.

நாரதர் சிவபெருமானை பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார் ‘சூரியன் உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விடவேண்டும்’ என்பதுதான் அது. தேவியிடமும் இந்த கோரிக்கையானது கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்திற்கு முன்பு வரவில்லை என்றால் இந்தத் திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

திருமணம் நடைபெறும் நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து சிவபெருமான் குமரி நோக்கி புறப்பட்டார். விடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவலாக உருவம் எடுத்து கூவி விட்டார். சேவலின் சத்தத்தை கேட்ட சிவபெருமான் சூரியன் உதித்து விட்டது இனி சென்றாலும் திருமணம் நடக்காது என்று நினைத்து கொண்டு திரும்பவும் சுசீந்திரத்திற்க்கே சென்றுவிட்டார்.

குமரிமுனையில் திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை எட்டியது. சூரியன் உதித்து விட்டார். ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்காக ஈசன் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு அதிகமாகியது. திருமணத்திற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும் எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினாள். இதனால் தான் கன்னியாகுமாரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாக காட்சி தருகிறது என்று கூறப்படுகிறது. இந்த சமயம் பார்த்து பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தேவியை மணந்து கொள்வதற்காக வருகை தந்தான். தேவி இப்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கின்றாள். தனது விருப்பத்தைக் கூறிய பாணாசுரனிடம் ‘உன்னை மணப்பது எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி சக்திதேவியிடம் மணமுடிக்க வற்புறுத்தினான்.

தேவியை நெருங்க நினைத்த பாணாசுரனால் அருகில் கூட நெருங்க முடியவில்லை. அவளது கோபம் தீப்பிழம்பு எடுத்தது ஓங்கி உயர்ந்து, வானளாவிய உருவத்தைக் கொண்ட பராசக்தி தேவி பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள். தேவர்கள் அனைவரும் தேவியை பூக்கள் தூவி சாந்தம் அடையச் செய்தனர். தங்களைக் காப்பாற்றிய தேவிக்கு நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.

கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.

#அன்னையின் மூக்குத்தி:

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது. அம்மனின் மூக்குத்தி ஒளியை கலங்கரை ஒளிவிளக்காக எண்ணி இரு கப்பல்கள் மோதிக் கொண்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

#கன்னியாகுமரி அம்மன் தனக்கு கேட்டு வாங்கிய மூக்குத்தியும், புல்லாக்கும்:

திருவிதாங்கூர் மகாராஜாவின்  ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி பகுதியில் பனையேறி ஒருவன் இருந்தான். அவன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள்.  இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். 

இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும், நாம்  உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம். 

ஆனால் அம்மனின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது. அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே அரண்மனைக்கு  கொண்டு சென்றான். அதை  மகாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான். 

அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் வந்து மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே!  அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது. 

நம்பூதிரிகள் கூறியதை கேட்ட    மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால், கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும். 

கோயில் அமைப்பு

கன்னியாகுமரி அம்மனின் கோயில் பிரகாரத்து தென்மேற்கு கோடியில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. அருகே, ஆறு தூண்களால் அமையப்பெற்ற மணி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் முன்னே சபா மண்டபம் உள்ளது. இரண்டாவது பிரகாரத்தில், குமரி அன்னை தினமும் பவனி வரும் வைபவம் நடைபெறும். இந்தப் பிரகாரத்தில் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. ‘குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை’ என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

தென்கோடியில் காவல் அரணாக குமரியன்னை திகழ்கிறார் என்பதற்கு சான்றாக இந்த கன்னித் தீர்த்தம் விளங்குகிறது. கன்னித் தீர்த்தத்தில் நீராடி பிறைமதி சூடி தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் அன்னையை வழிபட்டால் வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றுவார் அன்னை என்பது நம்பிக்கை. அன்னையின் கருணை, அல்லல்படுவோரை அரவணைத்து காக்கும் வல்லமை கொண்டது.

தலச் சிறப்பு

முக்கடல்கள் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த இடமாக இருப்பதால், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், பவுர்ணமி நாட்களில் ஒரே நேரத்தில் மேற்கே சூரிய அஸ்தமனம் கிழக்கே முழுமதி எழுதல் ஆகிய சிறப்புகளைக் கொண்டது. முனிவர் பரசுராமரால் இக்கோயில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேதகாலம் முதலே தேவி வழிபாடு இருந்து வந்துள்ளது. மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன் ஆகிய பெயர்களைத் தாங்கி மூலவராக வீற்றிருக்கும் அன்னை, தியாக சவுந்தரி, பால சவுந்தரி ஆகிய பெயர்களுடன் உற்சவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. பக்தர்கள் கடற்கரையில் தங்கள் மூதாதையருக்கு பித்ருகடன் செலுத்துவதும் உண்டு. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தல், அம்மனுக்கு விளக்கிடுதல், புடவை சாற்றுதல், மக்களுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவற்றை செய்து பக்தர்கள், தங்கள் வேண்டுதல் பலிக்க நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

“நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி” என்று பாரதியார் அன்னையைப் போற்றுகிறார். அரபிக் கடல், இந்து மாக்கடல், வங்காளக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமமாகி ஓர் உருவாக நின்று அன்னை பகவதியை தினம்தோறும் ஆராதிப்பதாகக் கூறப்படுகிறது. அன்னையின் திருவடியில் பாதபூஜைகளை செய்வது போன்று இந்த முக்கடல்களின் சங்கமத்துடன் கூடிய அலைகள், அன்னையை நோக்கி பணிந்து வருகின்றன. ‘தென்திசை குமரியோடியே வருவாள்’ என்று மணிமேகலை காப்பியம் குமரி தெய்வத்தைப் போற்றுகிறது.

இமய பொருப்பகத் தீரான் குறைத்தபின்

குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்

தரும யாத்திரை யெனத் தக்கினம் போற்துழி’ என்று பெருங்கதை இலக்கியமும் கன்னியாகுமரியைப் போற்றி உரைக்கிறது.

‘கங்கை யாடி லென் காவிரி யாடி லென்

பொங்கு நீர் குமரித்துறை யாடிலென்’ என்று அப்பர் பெருமான் தனது தேவாரத்தில் குமரிமுனையைப் போற்றுகிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பவானி (திரு நணா) சங்கமேஸ்வரர் திருக்கோயில்

*⚜️ பவானி*  (திரு நணா)   *சங்கமேஸ்வரர் திருக்கோயில்*.               *வழிபட்டவர்கள்*  :   அரி அயன் சரஸ்வதி காயத்திரி சாவித்திரி ப...