Thursday, December 18, 2025

திருமூழிக்களம் லட்சுமணப்பெருமாள் எர்ணாகுளம்


திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதியான, இயற்கை எழில் கொஞ்சும் #கேரள மாநிலத்தில் உள்ள
#எர்ணாகுளம் மாவட்டத்தில் #சாலக்குடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
#திருமூழிக்களம் என்ற 
#திருமொழிக்களம்
(திருமூழிக்குளம்) 
#லட்சுமணப்பெருமாள்
என்ற #திருமூழிக்களத்தான் (சுக்திநாதன்,அப்பன்)
#மதுரவேணிநாச்சியார் திவ்யதேச திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 
108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில், 79-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் லட்சுமணரும், பரதனும் வழிபாடு செய்துள்ளனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நம்மாழ்வார் பாசுரம்:

பூந்துழாய் முடியாருக்கு பொன் ஆழிக் கையாருக்கு

ஏந்துநீர் இளம்குருகே திருமூழிக் களத்தாருக்கு

ஏந்துபூண் முலை பயந்து என் இணை மலர்க்கண் நீர் ததும்ப

தாம்தம்மைக் கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே.

மூலவர் : லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன், சுக்திநாதன்) | 
தாயார் : மதுரவேணி நாச்சியார் 

 தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு, பெருங்குளம் 

விமானம் : சௌந்தர்ய விமானம்

புராண 
பெயர்: திருமூழிக்களம் (திருமொழிக்களம்)

ஊர்: திருமூழிக்களம் 

மாவட்டம்: எர்ணாகுளம் 

மாநிலம்: கேரளம்

பாடியவர்கள்:

நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் 

#திருமூழிக்களம் பாசுரங்கள்:

"பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டறோம் பருகும் இன் அமுது ஐய
கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 1553) .

பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட- புகழ்ஆனாய்! இகழ்வாய தொண்டனேன் நான் , 
என்ஆனாய் ? என்ஆனாய் ? என்னல் அல்லால் என்அறிவன் ஏழையேன் ,   உலகம் ஏத்தும்- 
தென்ஆனாய் வடஆனாய் குடபால் ஆனாய் குணபாலமதயானாய் இமையோர்க்கு என்றும்- 
முன்ஆனாய் பின்ஆனார் வணங்கும் சோதி! தி ருமூழிக் களத்து ஆனாய் முதல்ஆனாயே! (2061)

உன்னிய யோகத் துறக்கத்தை , ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை ,
என்னை மனங்கவர்ந்த ஈசனை , - வானவர்த்தம் 
முன்னவனை மூழ்கிக் களத்து விளக்கினை (2776)
     … திருமங்கை ஆழ்வார்

"எம்கானல் அகம்கழிவாய் இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்
செங்கால மடநாராய்! திருமூழிக்களத்து உறையும்
கொங்குஆர் பூந்துழாய்முடி எம்குடக்கூத்தருக்கு எந்தூதாய்
னும்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே. (3739)
        …. நம்மாழ்வார்

*தல வரலாறு: 

கிருஷ்ணாவதாரத்தின்போது, கிருஷ்ணர் துவாரகையில் ராமபிரான், லட்சுமணர், பரதன், சத்ருகனன் விக்கிரகங்களை வழிபட்டு வந்தார். ஒருசமயம் வெள்ளம் ஏற்பட்டு, இப்பகுதி தண்ணீரில் மூழ்கியது. அப்போது வாக்கேல் மைமல் முனிவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தன. அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோர தலங்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் பணித்தார்.

அதன்படி திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா பரதன் கோயில், பாயமல் சத்ருக்னன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில் அமைந்தன.

நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.

*திருமொழிக்களம்: 

முன்பொரு காலத்தில் ஹரித மகரிஷி இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இயற்றினார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், அவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். அதற்கு மகரிஷி, “உலக மக்கள் அனைவரும் தங்களை வந்து அடைவதற்கான எளிய வழியைக் கூற வேண்டும்” என்றார். உடனே திருமால் மகரிஷிக்கு ஸ்ரீசுக்தியை (திருமொழி) இத்தலத்தில் அருள்வதாகக் கூறினார். மேலும் மக்கள் அனைவரும் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு (வர்ணாசிரம தர்மப்படி) ஏற்ப, எளிதில் தன்னை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை இந்த திருமொழி போதிக்கும் என்று அருளினார். அதனால் இத்தலம் திருமொழிக்களம் என்றும் காலப்போக்கில் திருமூழிக்களம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளும் திருமொழிக்களத்தான் என்று அழைக்கப்படுகிறார்.

ராமபிரான் வனவாசம் செல்லும்போது, சித்ரகூடத்தில் தங்கினார். அப்போது ராமபிரானை சந்திக்க பரதன் வந்திருந்தார், இதைக் கண்ட லட்சுமணன், ராமபிரானுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவரைத் தாக்க முற்பட்டார், பிறகு தன் தவறுக்கு மன்னிப்பு கோரி இத்தலத்து பெருமாளை வழிபட்டார். அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத் தழுவி இன்சொல் கூறினார். இதனாலேயே இத்தலம் ‘திருமொழிக்களம்’ என்ற பெயரை பெற்றதாக பெரியோர் கூறுவர்.

தன் குற்றத்துக்குப் பிராயசித்தம் செய்ய விரும்பிய லட்சுமணன், முனிவர் யோசனைப்படி, தனக்கு ‘ஞானோதயம்’ தந்த அந்தத் தலத்தை, திருமொழிக்களத்தான் கோயிலை, புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான்.இப்படி லட்சுமணன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை அதனாலேயே ‘லட்சுமணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள்.

ராமாயண சகோதரர்களுக்கு கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லட்சுமணனுக்கு மட்டுமே உண்டு. தவறை உணர்வதும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுமான மனப்பக்குவத்திற்குதான் எத்தகைய பெரிய வெகுமதி! ஸ்ரீராமனுக்கு திருப்பரையாரிலும், பரதனுக்கு இரிஞாலகுடாவிலும், சத்ருக்னனுக்கு பாயம்மலிலும் தனித்தனி கோயில்கள் விளங்குகின்றன. ஆனால், திருமொழிக்களத்தில் உறையும் இறைவன் லட்சுமணப் பெருமாள் என்று அழைக்கப்படுவது, இந்த பிற கோயில்களினின்றும் தனிப் பெருமையானது.

ராம சகோதரர்களின் இந்தக் கோயில்களில் உறையும் பெருமாள்கள், ஸ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவர்கள். துவாரகை நகரை உருவாக்கி அங்கே வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். அப்போது ஏற்பட்ட பிரளயத்தால் துவாரகையை கடல் விழுங்கியது. அதனால் கிருஷ்ணன் வழிபட்ட ராம சகோதரர் விக்ரகங்களும் கடலில் மூழ்கின. பின்னாளில் ஒரு மீனவர் வலையில் சிக்கிய இந்த விக்ரகங்கள் கேரளத்தில் வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்கிறார்கள்.

*புராணக்கதைகள்:

கேரளாவில் "நாலம்பலங்கள்" என்றும் அழைக்கப்படும் நான்கு கோயில்களில் தோராயமாக ஐந்து தொகுதிகள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானவை திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு கோயில்கள். இந்த நான்கு கோயில்களும் இதிகாச ராமாயணத்துடன் தொடர்புடையவை, அங்கு ராமரும் அவரது சகோதரர்களும் தலா ஒரு கோயில் கட்டியதாக நம்பப்படுகிறது, மேலும் தலைமை தெய்வங்களுக்கும் அவர்களின் பெயரிடப்பட்டுள்ளது. முறையே ராமர், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் வரிசையில் நான்கு கோயில்களுக்கும் செல்வது வழக்கம். புனித கார்க்கிடகம் மாதத்தில் ஒரே நாளில் இந்தக் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொள்வது ஆசீர்வாதங்களைப் பொழிந்து செழிப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

1. ஸ்ரீ ராமரால் திருப்ராயரில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில்,
2. திருமூழிக்குளத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மண பெருமாள் கோவில், ஸ்ரீ லக்ஷ்மணரால்
3. ஸ்ரீ கூடல்மாணிக்யம் கோயில் , இரிஞ்சாலக்குடாவில் ஸ்ரீ பரதன்  
4. ஸ்ரீ சத்ருக்னரால் பாயம்மாள் ஸ்ரீ சத்ருக்ன சுவாமி கோவில்

புராணங்களின்படி, ஹரீத மகரிஷி சாலக்குடி அல்லது பூர்ணா நதிக்கரையில் மகா விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த மகா விஷ்ணு, கலியுகத்தின் தொடக்கத்தில் அவர் முன் தோன்றி, கலியுகத்தின் தடைகளை எவ்வாறு சமாளிப்பது என்று ஹரீத மகரிஷிக்கு அறிவுறுத்தினார். மகா விஷ்ணுவின் புனித வார்த்தைகளின் ஆலோசனை "திருமொழி" ( திருமொழி ) என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த இடம் திருமொழிக்களம் என்ற பெயரைப் பெற்றது, மேலும் மகா விஷ்ணு ஸ்ரீ சூக்திநாதர் என்று அழைக்கப்பட்டார், மேலும் அது திருமூழிக்குளம்/திருமூழிக்களம் என்ற தற்போதைய பெயராக மாற்றப்பட்டுள்ளது.

*தலச் சிறப்பு: 

கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலமாக, ஒருகாலத்தில் திருமூழிக்களம் விளங்கியுள்ளது. ஸ்ரீசுக்தி இங்கு அருளப்பட்டதால், பல நூல்கள் ஆராயப்பட்டன. கற்றறிந்த சான்றோர் பலர் குழுமியதால், இந்நகரம் கல்வி மாநகராகவும், கலை மாநகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. ராமபிரான் வனவாசம் செல்லும்போது, சித்ரகூடத்தில் தங்கினார். அப்போது ராமபிரானை சந்திக்க பரதன் வந்திருந்தார், இதைக் கண்ட லட்சுமணன், ராமபிரானுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவரைத் தாக்க முற்பட்டார், பிறகு தன் தவறுக்கு மன்னிப்பு கோரி இத்தலத்து பெருமாளை வழிபட்டார். அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத் தழுவி இன்சொல் கூறினார். இதனாலேயே இத்தலம் ‘திருமொழிக்களம்’ என்ற பெயரை பெற்றதாக பெரியோர் கூறுவர்.

*கோயில் அமைப்பு: 

திருமூழிக்களம் தலத்தில் கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சௌந்தர்ய விமானத்தில் கீழ் உள்ள கருவறையில் 4 திருக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கிறார். மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ்க்கையில் தாமரை மலருடன் அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது.

கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன்-சீதை-அனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.

லட்சுமணன் தனியே மூலவராக விளங்குவதால் இந்த சந்நதியில் அவர் இடம் பெறவில்லை.

சாலக்குடி ஆறு, கோயிலின் தீர்த்தமாக பெருமையுடன் ஓடுகிறது. கருவறையில் லட்சுமணப் பெருமாள் என்ற திருமூழிக்களத்தான், பேரழகுடன் ஜொலிக்கிறார். இந்தப் பெருமாளை நம்மாழ்வார் ஒளிச்சுடராகவே கண்டு மகிழ்ந்திருக்கிறார்.

கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலமாக, ஒருகாலத்தில் திருமூழிக்களம் விளங்கியுள்ளது.
 

ஸ்ரீசுக்தி இங்கு அருளப்பட்டதால், பல நூல்கள் ஆராயப்பட்டன. கற்றறிந்த சான்றோர் பலர் குழுமியதால், இந்நகரம் கல்வி மாநகராகவும், கலை மாநகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.

திருமூழிக்களத்தான் பேரொளியோடுதான் திகழ்கிறார். நான்கு திருக்கரங்கள். இடது கரம் சங்கு ஏந்தியிருக்க, வலது கரம் பிடித்திருக்கும் சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தனுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. கீழ் வலதுகரம் கதையைப் பற்றியிருக்க, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் அமைந்திருக்கிறது.

*கல்வெட்டுகள்:

நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இந்தக் கோயிலின் ஸ்ரீ திருமூழிக்களத்தன் மீது பாசுரம் பாடியுள்ளதால், இந்தக் கோயில் கி.பி 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம் , இது சேரர்களால் கட்டப்பட்டது. பின்னர், கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், வேணாடு, திருவிதாங்கூர் மன்னர்கள் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் பங்களிப்புகளைப் பெற்றது, மேலும் பாஸ்கர ரவிவர்மனின் ஆட்சிக் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

திப்புவின் படையெடுப்பின் போது, திருவாஞ்சிக்குளம் கோயிலைப் போலவே, இந்தக் கோயிலும் அதிகபட்ச அளவில் சேதமடைந்தது. மூலவரின் உருவமும் சேதமடைந்தது. உருவத்தை மூடுவதற்கு ஒரு வெள்ளி கவசம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சிலையை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேவபிரஸ்னத்திற்குப் பிறகு, மூலவரின் உருவம் மூடப்படாமல் சேதமடைந்த நிலையில் வைக்கப்பட்டது.

*திருவிழாக்கள்: 

சித்திரை திருவோண நட்சத்திரத்தில் ஆராட்டு விழா நடைபெறும். ஒவ்வொரு மாத திருவோண தினத்திலும் சிறப்பு திருமஞ்சனம், வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதமாக கருதப்படுவதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தலத்தில் வழிபாடு செய்தால், சகோதரர்களுக்குள் இருக்கும் பகை நீங்கும் என்பது ஐதீகம்.

வேத பாடங்களை கற்க, இறை பக்தி குறையாமல் இருக்க, செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட, பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேர திருமூழிக்கள பெருமாள் அருள்புரிவார்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்:

ஆலப்புழை-எர்ணாகுளம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூழிக்களம். எர்ணாகுளம்-ஆலப்புழை ரயில் பாதையில் அங்கமாலி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு.

இக்கோயில் அங்கமாலி (காலடி) ரயில் நிலையத்திலிருந்து சுமார் 9 கிமீ தொலைவிலும், காலடியிலிருந்து 17 கிமீ தொலைவிலும், கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலிலிருந்து 21 கிமீ தொலைவிலும், இரிஞ்சாலக்குடாவிலிருந்து 23 கிமீ தொலைவிலும், திருக்காக்கரை மகா விஷ்ணு கோயிலிலிருந்து 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் அங்கமாலி (கலடி) ஆகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்துவது எதற்காக?

அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர். தமிழ்நாடு, கேரளா போன்...