Wednesday, September 11, 2024

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_

'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னகத்தே கொண்ட லிங்கம் சில கோயில்களில் காணமுடிகிறது. 

மும்மூர்த்திகள் அரசமரத்திலும் இருக்கின்றனர். அதே போல் குத்துவிளக்கிலும் உறைகின்றனர்; கோமாதாவிலும் இருக்கின்றனர். 

வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது 

சைவத்தில் இருப்பது போலவே வைணவத்திலும் இந்த வில்வம் திருமகளுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. இலக்குமி விஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கிறாள். ஆகையால் திருவஹீந்திரபுர தாயாருக்கு வில்வ இலை அர்ச்சனை நடக்கிறது. கும்பகோண சக்ரபாணி கோயிலிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை நடக்கிறது. 

வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது. நாம் ஒருமுறைப் பூஜித்த பூக்களைத் திரும்பவும் உபயோகப்படுத்துவதில்லை. அவைகளை எடுத்துக்களைந்து விடுகிறோம். ஆனால் ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம். ஆனால் அதற்குரிய காலவரை ஒரு ஆறுமாதம் தானாம். 

ஆனால் இவைகள் சுத்தமான சூழ்நிலையில் வளர்ந்த மரங்களாக இருக்கவேண்டும். சுடுகாட்டின் அருகில் இருந்தாலும் சேர்க்கக்கூடாது. 

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது. 

அதுவும் ஞாயிறு அன்று வில்வத்தினால் அர்ச்சிக்க மிகச்சிறப்பாம். சோமவாரம் என்றுச்சொல்லப்படும் திங்கள் அன்று சிவனுக்குத் துளசியால் அர்ச்சிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வில்வமரத்தின் எல்லா பாகமுமே பூஜைக்கு உரியது ஆகிறது. 

வில்வ இலை அர்ச்சனைக்கும், வில்வப்பழம் அபிஷேகத்திற்கும், மரத்தின் கட்டை ஹோமம் யாகத்திற்கும், வேர் மருந்துக்கும் உபயோகப்படுகிறது வில்வபழத்தின் சதுப்பை நீக்கி உபயோகித்தப்பின், அதன் குடுப்பையைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணததையும், திறுநீற்றையும் ஒரு டப்பாப்போல் வைத்துக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதனால் மருத்துவக்குணம் அதில் கலக்கிறது என்றும் நம்பப்படுகிறது. 

சிவன் என்பது நெருப்பு. நாம் நெருப்பாக சிவன் இருக்கும் அண்ணாமலை க்ஷேத்ரத்தைப் பார்க்கிறோம். இந்த நெருப்பாய் சுடும் இடத்தில் சூட்டைத்தணிக்க வில்வ இலை உதவுகிறது. 

அரச மரத்தைப்பூஜிப்பது போலவே வில்வ மரத்தையும் பூஜிப்பது வழக்கம். வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில்....



🌊 காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும் சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். 
🌊 இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தத்தையும் பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது. இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு அருள்பாலிக்கிறார். 

🌊 இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு, கருப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.

🌊 எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை. ஆனால் குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள். குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம். 

🌊 ஆகையால் நீர் கறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்க முடியும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, September 10, 2024

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள்

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் என்ன அதன் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..*
*1:ஞானசக்திதரர்*

*முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்பெருமானின் வடிவத்திற்கு ‘ஞானசக்திதரர்’ என்று பெயர். இவரை வழிபடுவதால் நல்ல ஞானமும், நினைத்த காரியங்களுக்கு வெற்றியைத் தருவார்.*

*2:கந்தசாமி*

*பழனி மலை மீது நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவதை ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த வடிவத்தை வழிபடுவதால் சகல காரியங்கள் சித்தியாகும்.*

*3:ஆறுமுக தேவசேனாபதி*

*ஈரோடு சென்னிமலையில் முருகன் கோயிலில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ என்ற வடிவத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்த முருகனை வழிபடுவதால் மங்களங்கள் உண்டாகும்.*

*4:சுப்பிரமணியர்*

*நாகப்பட்டினம் திருவிடைகழியில் அருள்பவர் ‘சுப்பிரமணியர்’ திரு உருவில் அருள்கிறார். சுப்பிரமணியனை வணங்கினால் வினைகள் விலகி, ஆனந்தத்தை அருள்வார்.*

*5:கஜவாகனர்*

*மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில் கோபுரத்தில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர் முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டு வர துன்பங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.*

*6:சரவணபவர்*

*சென்னிமலை, திருப்போரூர் உள்ளிட்ட திருத்தலங்களில் ‘சரவணபவர்’ திருவடிவை நாம் தரிசிக்க முடியும். இவரை தரிசித்து வர மங்கலங்களை அருள்வார். கொடை, ஒலி, சாத்வீகம், வீரம் உள்ளிட்ட நற்குணங்களை அருளக்கூடியவர்.*

*7:கார்த்திகேயன்*

*கார்த்திகேயரை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள் பெறலாம். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபட்டால் மேலும் விசேஷமானது. இவரை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும் தரிசனம் செய்ய முடியும்.*

*8:குமாரசாமி*

*குமாரசாமி முருகனை வழிபடுவதால் ஒருவரின் ஆணவம் பொடிபடும். கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திரு உருவத்தை பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.*

*9:சண்முகர்*

*திருச்செந்தூர்க் கோயிலில் சண்முகர் திருவுருவில் காட்சி தருகிறார். இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.*

*10:தாரகாரி*

*முருகனுக்கு `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் இந்த திருப்பெயர் வந்தது.இவரை வழிபட்டு வர உலக மாயைகளிலிருந்து விடுதலை தருவார். தாரகாரி உருவத்தை விராலி மலையில் உள்ள முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.*

*11:சேனானி*

*பகை, பகைவர்கள், பொறாமையை அழித்து நல்ல எண்ணத்தை அருளக்கூடியவர் முருகனின் ‘சேனானி’ திருவுருவம். இவரை தேவிகாபுரம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.*

*12:பிரம்மசாஸ்தா*

*முருகனின் பிரம்மசாஸ்தா திருவுருவத்தை வணங்கினால் கல்வி, கேள்வியில் சிறப்படையலாம். பிரம்மசாஸ்தா திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை உள்ளிட்ட இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவை தரிசிக்கலாம்.*

*13:வள்ளிகல்யாணசுந்தரர்*

*திருமணத் தடைகளை அகற்றக்கூடிய வள்ளிகல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் தரிசிக்கலாம்.*

*14:பாலசுவாமி*

*திருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை தரிசித்தால் உடல் அங்கக் குறைபாடுகளை அகற்றுவார். அதே போல் தீராத நோய் விலகும்.*

*15:சிரவுபஞ்சபேதனர்*

*திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும். இந்த இறைவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் நீங்கும்.*

*16: சிகிவாகனர்*

*சிகி என்றால் மயில். மயில் வாகனத்தை கொண்ட தெய்வம் முருகன். மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர். இவரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தருவார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

கல்லணை ஆஞ்சநேயர் நிகழ்த்திய அதிசயம்....

*#கல்லணை_ ஆஞ்சநேயர் #கதையல்ல  #நிஜம்!!*
தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும். சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார். இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது. இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர். இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது. இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர். இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன. ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார். இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர். எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார் அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன். என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன. அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும் படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின. இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது  கனவுகளைப் பற்றி விளக்கினார். அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர். நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய். நானே இந்த அணையைக் காப்பவன். அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன். மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது. இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார். மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார். அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது. அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார். பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் இன்றும் இந்தக் கோவிலின் நித்திய பூஜைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதன் ஆதாரங்களை இன்றும் தஞ்சை மாவட்டத்தின் பொதுப்பணித் துறையின் பழைய ஆவணங்களிலிருந்து பெறலாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளி
வந்த தஞ்சாவூர் மாவட்ட கெஸட் (அரசு இதழ்) என்ற அரசு ஆவணத்திலும் காணலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

நாகலிங்க பூவால் நாம் செய்யக்கூடிய சிவலிங்க பூஜை முழுமை பெறும்...

*சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.* நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.

சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.

சிவலிங்க பூஜைக்கு உதவக்கூடிய பொருட்களில் மிகமுக்கியமானதாக நாகலிங்க பூ பார்க்கப்படுகிறது. இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நாகலிங்க பூ சூட்சமம் :
நாகலிங்க பூவை ஒருவர் தொட வேண்டுமெனில் அவர் சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை உச்சரித்த பின்னரே தொட வேண்டும். அப்படி நாகலிங்க பூவை கையில் எடுத்த பின்னரே அவர் 21 நபருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது அதை 21 மாத்ருக ரிஷிகள் சூட்சமமாக பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

: மகா சிவராத்திரியில் செய்ய வேண்டிய நான்கு ஜாம பூஜைகளும், செய்ய கூடாத முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

நாகலிங்க பூ பூஜைமுறை:
பிறகு தான் நம்முடைய கையில் இருக்கக்கூடிய நாகலிங்க பூவை சிவலிங்கத்தின் மீது வைக்க வேண்டும். அப்படி செய்வதால் மட்டுமே நாகலிங்க பூவால் நாம் செய்யக்கூடிய சிவலிங்க பூஜை முழுமை பெறும், முழு பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்திற்குச் சூட்டிய நாகலிங்க பூ வாடிய பின்னரும் அதை நாம் குளித்துவிட்டு தான் எடுக்க வேண்டும். இறைவனுக்கு சூடப்பட்ட நாகலிங்க பூவை ஓடு ஆறு அல்லது கடலில் போட வேண்டும்.

நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.

சிவலிங்க பூஜையில் சாற்றப்பட்ட நாகலிங்க பூவை நாம் பிரசாதகமாக பெற்றுக் கொண்டு வீட்டின் பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.
நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கும் சுசீந்திரம்....

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்...!
சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இடம் 
குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயஸ்வாமி ஆலயம்” தான்.

ஸ்தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள ஸ்தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.

அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.

பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கெளதம முனியின்  சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.

“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று. ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமாளை வணங்கிச் செல்லுவதாகக் கதை.

கன்னியாகுமரி அம்பிகை ஸ்தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர்.

பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர்.

முன்பே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என ப்ரம்ம தேவர் சாபமிட்டிருந்தார். 

ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். 

திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்பிகை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.

கோயிலின் பரப்பளவு – 5,400 சதுர அடி

அரச கோபுரத்தின் உயரம் – 134.5 அடி

அங்குள்ள கல்வெட்டு ஒன்றினால், இவ்வாலயம் 1881-ல் திருப்பணிகள் துடங்கி 1888-ல் குடமுழுக்கு நடந்ததாக அறிகிறோம். இவ்வாலயம் பாண்டியர் காலக் கலை, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை “விக்னேஸ்வரி” என அழைக்கிறார்கள்.

இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர். இவைகள் வேறெங்கும் காணமுடியாத காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள ஹனுமனின் சிற்பமும் உள்ளது. இந்த ஹனுமன், கேட்போருக்குக் கேட்டதைக் கேட்டபடி தருபவர்.

நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு லிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.

கலைநயம் கூறும் சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.

இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.

திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.

வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.

பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.

குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.

சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, ஸ்ரீராமபிரானின் கருவறைக்கு எதிரில் ஹனுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம். 1929-ல் இப்பொழுது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள லிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார்.

லிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Monday, September 9, 2024

திருமால் பூசித்த சிவத்தலங்கள்...

திருமால் பூசித்த சிவத்தலங்கள் (அரிய தேவாரத் திருப்பதிகக் குறிப்புகள்):
திருமகள் கேள்வராகிய ஸ்ரீமகாவிஷ்ணு எண்ணிறந்த சிவத்தலங்களில் சிவமாம் பரம்பொருளை பூசித்தும்  போற்றியும் பேரருள் பெற்றுள்ளார் ('திருவின் நாயகனாகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை' என்பது சுந்தரர் திருவாக்கு). இனி இக்கூற்றிற்கான அகச்சான்றுகளைப் பின்வரும் 9 தலங்களுக்கான தேவாரத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்துணர்வோம், 
*
(1)
(திருமழபாடி - 'காலையார் வண்டினம்' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 6)
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழபாடியே
*
(2)
(திருமாற்பேறு - 'ஊறியார் தரு' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலமார் கண்ட நின்னையே
*
(3)
(திருவையாறு - 'தானலாதுலகம்' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 3)
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்றலில்லை
சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கையில்லை
தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளுமில்லை
அரிபுரி மலர்கொடேத்தும் ஐயன் ஐயாறனார்க்கே
*
(4)
(திருக்கச்சி ஏகம்பம் - 'கரவாடும் வன்னெஞ்சர்க்கு' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 6)
தேசனைத், தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப், பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளி ஆகாசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே
*
(5)
(திருக்கழுக்குன்றம் - 'கொன்று செய்த' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 8 )
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
சந்தம் நாறும் புறவில் தண் கழுக்குன்றமே
*
(6)
(திருமுதுகுன்றம் - 'பொன்செய்த மேனியினீர்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படியாரும் இயலாள் பரவைஇவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே
*
(7)
(திருநின்றியூர் - 'அற்றவனார் அடியார்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 9)
காலமும் ஞாயிறுமாகி நின்றார், கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்பார், அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சுண்டவருக்கிடம் திருநின்றியூரே
*
(8 )
(திருவீழிமிழலை - 'நம்பினார்க்கருள் செய்யும்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 4)
பந்தம் வீடிவை பண்ணினீர், படிறீர், மதிப்பிதிர்க் கண்ணியீர் என்று
சிந்தைசெய்திருக்கும் செங்கையாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்ஆட, மால்அயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
*
(9)
(திருவாரூர் - 'கரையும் கடலும்' எனும் சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 9)
நமர்பிறர் என்பதறியேன், நான்கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன் தக்கவாறு ஒன்றுமிலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...