Saturday, January 3, 2026

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்,மாந்துறை,லால்குடி வட்டம்,திருச்சி மாவட்டம் - 621703.

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்,
மாந்துறை,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621703.                    

*மூலவர்:
ஆம்ரவனேஸ்வரர்/மிருகண்டீஸ்வரர்

*தாயார்:
வாலாம்பிகை/அழகம்மை

*தல விருட்சம்:
மாமரம்

*தீர்த்தம்:
காவேரி, காயத்ரி தீர்த்தம்     

*தேவாரப்பாடல் பெற்ற தலம். 
பாடியவர்:திருஞானசம்பந்தர்.  

*நாம் காணும் இத்தலம் திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியிலுள்ள பாடல் பெற்ற வடகரை மாந்துறை. (தென்கரை மாந்துறை, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில்  உள்ள ஒரு தேவார வைப்புத் தலமாகும்.)                 
*தல வரலாறு
முனிவர் ஒருவர் தாம் சிவனுக்குச் செய்த தவறால், இத்தலத்தில் மான்களாகப் பிறந்து வந்த ஒரு அசுர தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். ஒரு முறை இரை தேடச் சென்ற மான்கள் தமக்கு சாப விமோசனம் வேண்டவே, சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி முக்தி அளித்தார். தாய் தந்தையரைக் காணாத பிஞ்சு மான் கலங்கி நிற்க, அம்மையப்பனே தாய்-தந்தை மான்களாக வடிவெடுத்து சிறு மானை ஆற்றுப்படுத்த, அன்னையின் பாலாம் அமுதுண்ட பிஞ்சு மான் ஞானம் அடைந்தது.  

*மான்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்றும், முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது. 

*இக்கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் எனப்படுகிறார் (ஆம்- என்பது வடமொழியில் மாங்கனியைக் குறிப்பது). 

*மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் மூலவருக்குவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. 

*அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை) 

*சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளி,வெப்பம் ஆகியவற்றை அவனது மனைவி சமிக்ஞையால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனால்  சமிக்ஞை தனது நிழலுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதற்கு சாயாதேவி எனப்பெயரிட்டாள். தனக்குப் பதிலாக சூரியனுக்குப் பணிவிடை செய்யுமாறு கூறிவிட்டு, சமிக்ஞை வேறு இடம் சென்றாள்.  ஆள்மாறாட்டம் குறித்த உண்மையை அறிந்த சூரியன்,
சமிக்ஞை  பெண் குதிரை வடிவெடுத்து, ஆம்ரவனப் பகுதியில் சிவவழிபாடு செய்வதாக அறிந்து   தானும் குதிரை வடிவம் பூண்டு சமிக்ஞையை சந்தித்து அவளை
ஏற்று, ஆம்ரவன நாதரைப் பூஜித்தான்.  
உக்கிரம் குறைந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பத்தைத்தாங்கும் சக்தியை சமிக்ஞைக்கு ஆம்ரவனேசுவரர் வழங்கினார். 

*பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களில் சூரிய ஒளி சுவாமி மீது படும் அரிய நிகழ்வு சூரியபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.    

*நவக்கிரகங்களிலுள்ள சூரியன்,  சமுக்ஞை (சமுக்யாதேவி), சாயா தேவியுடன் தம்பதி சமேதராய் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன. 

 *திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய்கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட தலமிது.       

*மிருகண்டு முனிவர் தவமிருந்து மார்க்கண்டேயனைப் பெற்றது இங்குதான்.  

*முனிவர் ககோளரின் மகன் மருதாந்தகன் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவன். அவனுக்குத் அந்நாட்டு அரசன்  தனது அவையில் மந்திரி பதவி அளித்தார் . அப்போது மன்னிக்க முடியாத தோஷத்தை செய்த மருதாந்தகன் தனது தவறுக்குப் பரிகாரம் செய்ய முற்பட்டான்.  
இரும்பால் உருவான கருப்பு மணிகளை மாலையாக கோர்த்து,  கழுத்தில் கட்டியவாறு பல திருத்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரையாகச் சென்று, 
எந்த இடத்தில்  இரும்பு மணிகள் இரத்தினக் கற்களாக மாறுகின்றனவோ, அந்தப் பகுதியில் சாமவிமோசனம் கிடைக்கும் என முனிவர்கள் தெரிவித்தனர்.  
அவன் ஆம்ரவனம் சென்ற போது இரும்புமணிகள் இரத்தினங்களாக மாறின.
இங்கு அவனக்கு சாபவிமோசனம் கிடைத்தது.      

*நெறி தவறித் தவறான வழியில் சென்ற ககோளரின் மனைவி லீலாவதியைக் கருப்பு ஆடை தரித்து, தலங்களில் புனித நீராடிவழிபடுமாறு தவசிகள் அறிவுரை வழங்கினர். முடிவில் ஆம்ரவனத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நீராடி, ஈசனை வழிபட்டாள் லீலாவதி. 
அங்காரக சதுர்த்தி நாளில் ஜைமினி என்ற முனிவர் தனது கரத்திலுள்ள கலசத்தில் பிரம்மதீர்த்ததிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்ய முற்பட்ட போது, லீலாவதியின்  கருப்பு ஆடை வெண்பட்டாக மாறியது. இங்கு
லீலாவதி  சாப விமோசனம் அடைந்தாள். 

*கௌதமர் வடிவில் அகலிகையை இந்திரன் தீண்டியதால் கௌதமர் விட்ட சாபதோஷம் நீங்கியது இங்குதான். 

*ஆதிசங்கரர் வழிபட்டது இந்தத்தலமாகும்.    

*புத்திரபாக்கியம் அருளும் கோயில்:
ஸ்வேதகேது என்ற அரசன் சிறந்த சிவபக்தன் ஆவான்.  அவனுக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படவில்லை. அரசனின் கனவில் இறைவன் காட்சியளித்து ஆம்ரவனத்தில் பெரிய திருக்கோயிலை உருவாக்குமாறு  கட்டளையிட்டார். அவ்வாறே ஸ்வேதகேதுவும்   பிரம்மாண்டமான கோயிலை எழுப்பி குடமுழுக்கு விழாவையும் நடத்தினான். இறையருளால் அவனக்கு ஒரு புத்திரன் பிறந்தான். எனவே குழந்தைபேறு இல்லாதவர்கள்  இக்கோயிலில் வணங்க குழந்தை பேறு ஏற்படும்.                   

*இது மூலம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலமாதலால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இத்திருக்கோயிலில்  ஆம்ரவனேசுவரரை வணங்கியும்,  மூலம் நட்சத்திரத்தன்று பரிகார ஹோமம் செய்வதும் உரிய பலன்களைப் பெறலாம்.

 *குழந்தைகளுக்கான பாலதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது. பாலதோஷத்தில் கஷ்டப்படும் குழந்தைகள் இக்கோயிலில் பாலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை பருகி வர பாலதோஷம் விலகும். 

*இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் காவல் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது.    

*மாந்துறை திருச்சிராப்பள்ளி - லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது.                

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப ஜீவ சமாதி

ஸ்ரீஅமிர்தவல்லி  சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் . திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர்.  ...