*அனைத்து தோஷங்களையும் போக்கும் தலம்.... மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளபவானி சங்கமேஸ்வரர் கோயில்.*
அமைவிடம் :
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் வடகரையில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார்.
மாவட்டம் :
பவானி, ஈரோடு மாவட்டம்.
எப்படி செல்வது?
சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் சிறப்பு :
தமிழகத்தின் சிறந்த பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று.
பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.
இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)". எனவே இத்தலத்திற்கு 'திருநணா" என்ற புராணப்பெயரும் உண்டு.
சிவனுக்கும், அம்மனுக்கும் இடையே முருகன் தனி சன்னதியில் உள்ளார். இது சோமாஸ்கந்த அமைப்பு கோவிலாகும்.
கோவில் திருவிழா :
சித்திரையில் 13 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், விஜய தசமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன.
வேண்டுதல் :
மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.
இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும், தொழில் விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும்.
இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
நேர்த்திக்கடன் :
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
கோவில் பிரசாதம் :
இக்கோவிலில் நல்ல வெண் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
.
No comments:
Post a Comment