Wednesday, May 19, 2021

பிராணவரதேஸ்வரர்_திருக்கோவில்

பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 

#பிராணவரதேஸ்வரர்_திருக்கோவில்:

இறைவர் திருப்பெயர்:     பிராணவரதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:  மங்கள நாயகி.
தல மரம்:  வெள்ளெருக்கு, கோங்கிலவு, கோங்கு
தீர்த்தம் :  சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் , மங்கல தீர்த்தம்,காவிரி.

தல வரலாறு

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளாள் அவன் உயிர் பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக் காப்பு தந்தருளி ஆட்கொண்டாள். அது முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக அம்பிகை அருளினாள் என்பது வரலாறு.

சிறப்புகள்

இத்தலம் மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று புகழப்படும் சிறப்புடையது.

தல வரலாறு தொடர்பால் - திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். மேலும், இவ்வரலாற்றையொட்டி "பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை" என்னும் மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகிறது.

நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்; அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேஸ்வரரேயாவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு. இன்றும் அவ்வாறு பலர் குணமடைந்து வருகிறார்கள்.

இக்கோயிலில் சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் சென்று இவ்வூரை அடையலாம். தொடர்பு : 0435 - 2470480

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...