உ
சிவமயம்
திருநாவுக்கரசர் பெருமை
திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் சைவ வேளாளர் குலத்தில், குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் தோன்றியவர். திலகவதியார்க்குப் பின் வந்தவர். `மருள் நீக்கியார் என்ற பெயரினார். கலை பலவும் நிரம்பக் கற்றவர். இருவரும் பெற்றோரை இழந்தனர்.
திலகவதியாரை மணக்க இசைந்த கலிப்பகையார் சோழ மன்னன் படைத் தலைவர். அவர் சென்று வடநாட்டு மன்னரொடு நெடுநாள் போர் புரிந்து துறக்கம் உற்றார். அதை அறிந்த திலகவதியார் தாமும் இறக்கத் துணிந்தபோது, மருள்நீக்கியார் விழுந்து வணங்கி, `அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உம்மை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன். இனி என்னைத் தனியாகக் கைவிட்டு ஏகுவீர் எனில், யானும் உமக்கு முன்னம் உயிர் நீப்பன்` என்று மொழிந்து இடருள் முழுகினார். திலகவதியாரும் `தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா`, இறப்பை விலக்க, உயிர் தாங்கி, அம் பொன் மணி நூல் தாங்காது, அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி, மனைத்தவம் புரிந்திருந்தார். சிவபெருமான் திருவடிக்கண் அன்பு பூண்டு, திருவருள் நெறி ஒழுகி வாழ்ந்தார். மருள்நீக்கியார் சமண் சமய நூல்களைக் கற்றார். அச் சமயத்தைச் சார்ந்தார். சமணர்க்குத் தலைவராய்த் தருமசேனர் எனப் புகழ் பெற்று விளங்கினார்.
திருவதிகையில் திருத்தொண்டு புரிந்துறையும் திலகவதியார், தம் தம்பியார் பர சமயமான படுகுழியில் வீழ்ந்து கெடுவதை ஆற்றாராய், திருவீரட்டானேசுவரரை நாள்தொறும் வேண்டி, அக் குழியினின்றும் சைவ சமயப் பேரின்பக் கரையில் ஏற்றியருளப் போற்றினார். `சூலை நோய் தந்து ஆட்கொள்வோம் கவலாதே` என்று கனவில் அருளினார் அதிகைப்பிரானார். அவ்வாறே அவர்க்குச் சூலை நோய் உண்டாயிற்று. மந்திரம் முதலியவற்றால் நீக்க முயன்றனர். நோய் மேன்மேல் மிகுந்ததே அன்றிக் குறைந்திலது. மிக வருந்தித் தமக்கையார்க்குச் சொல்லி அழைத்துவர ஆள்விட்டார். அவர் அங்கு வாரேம் என்றார். மருள்நீக்கியாரே தமக்கையார்பால் ஏவலன் துணைக்கொண்டு வந்தார்; கண்டார்; வணங்கினார்.
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப், பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று உருஆர அணிந்து. உற்ற இடத்து உய்யும் நெறி தரும் அவர், முன் செல்லப் பின்சென்று, திருவீரட்டானத்திறைவர் பெருங்கோயிலைத் தொழுது வலங் கொண்டு இறைஞ்சி நிலமிசை விழுந்தார். தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள் சார்த்தும் உணர்வுற்றார். குருவருள் கிடைக்கப் பெற்றார்.
`கூற்றாயினவாறு விலக்ககிலீர்` எனத் தொடங்கும் திருப் பதிகம் பாடினார். சூலை அகன்றது. திருவருள் பெறத் துணை யாயிருந்த சூலைக்குச் செய்யும் நன்றியை நாடினார். சிவபிரான், செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடை பாடியதற்குத் திருவுளம் மகிழ்ந்ததால், `நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குக` என்று வானிலே உடலிலியொலியாக ஒரு வாய்மை எழுந்தது. அந்நாள் முதல், முப்பொறித் தூய்மையொடும் திருப்பணி செய்பவராய், சிவ சின்னம் பூண்டு, தியானம் ஞானம் திருவாசகம் உழவாரம் எல்லாம் கொண்டு கசிந்துருகி வழிபட்டு இன்புற்றிருந்தார்.
சமணர் துன்புறுத்த முயன்று, நீற்றறையில் இட்டனர். `ஈசன் அடியார்க்கு ஈண்டு வருந்துயர் உளவோ`? `வீங்கிள வேனிற் பொழுது; தைவருதண் தென்றல்; தண்கழுநீர்க்குளம்போன்று; மொய் ஒளி வெண்ணிலவு அலர்ந்து; மாசில் வீணை யொலியினதாகி; ஈசன் எந்தை இணையடி நீழல் அருளாகிக் குளிர்ந்தது அந்நீற்றறை. மாசிலாமதியும் மங்கையாம் கங்கைப் புனலும் மன்னி வளர் சென்னியன் எனப் பேச இனியானை வணங்கி இனிதிருந்தார் நாவரசர். ஏழுநாள் கழித்து, பல்லவனும் சமணர் பல்லவரும் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். வியந்தனர். இன்ப வெள்ளத்தில் முழுகி அம்பலவாணர் மலர்த் தாளமுதுண்டு தெளிந்து உவந்திருந்த நாவரசரைத் தீய நஞ்சு கலந்த பாலடிசில் உண்ணப் பண்ணினர். எந் நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு, இந் நஞ்சும் அமுதாயிற்று. ஆனது அற்புதமோ? ஆளுடைய அரசரை மிதிக்க யானையை ஏவினர். அது பாகனையும் சமணரையும் சுண்ணம் ஆக்கி, நம் அண்ணலை வணங்கிப் போயிற்று. மந்தரகிரி போலும் அது மன்னனையும் வருத்திற்று.
கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினர் சமணர். சொற்றுணை வேதியன் பொற்றுணைத் திருந்தடி தொழுது நீலக்குடியரன் நல்ல நமச் சிவாய நாமத்தை நவிற்றி நன்றே உய்ந்தார் நாவரசர். மும்மலமான கல்லில் இருவினையான கயிற்றால் ஆர்த்துப் பாவக்கடலிற் பாய்ச்சப் படும் மாக்களை முத்திக் கரையில் ஏற்றியருளும் அத் திருவைந் தெழுத்து, நாவரசை இவ்வுவர்க்கடலின் ஆழாது ஒரு கல் மேல் ஏற்றுதல் வியப்போ? திருப்பாதிரிப்புலியூரை அடுத்த கரையேற விட்ட குப்பமே அவ்வுண்மையைத் தேற்றி நிற்குஞ் சான்றாகும். அத் `தோன்றாத் துணை` யைத் தொழுது உண்மையை உணர்வார் உணர்க.
சொல்வேந்தர் திருவதிகையிற்சென்று வழிபட்டு வாழ்ந்திருந் தார். பல்லவ மன்னன் பல்லவமும் நீங்கி நல்லவனாகி, நாயனாரை வணங்கித் தூயனும் சைவனும் ஆனான். சமணருடைய மடம் கோயில் முதலியவற்றைச் சிவாலயம் ஆக்கினான்.
``பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச் சரம்எடுத்தான்``
நாவரசர் சிவதலம் பலவ்ற்றை அடைந்து வழிபட்டுப் பாடி னார். சமண்சார்பு தீர நினைந்து வேண்டித் திருத்தூங்கானை மாடத்தில் `வடியேறு திரிசூலக் குறி` `இடபம்` ஆகிய இலச்சினை திருத்தோளிற் பொறிக்கப்பெற்றார். தில்லைச்சிதம்பரத்தை வணங்கி எல்லையில்லா இன்புற்றார். திருக்காழியில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, `அப்பர்` எனப் பெயர் உற்றார். ஆனந்தவுருவானார். அளவில்லாச் சிவதலங்களை வழிபட்டுத் திருச்சத்திமுற்றத்தில் திருவடி சூட்ட வேண்டினார். திருநல்லூரில் நனைந்தனைய திருவடி தலைமேல் வைத்தருளப் பெற்று நம்மையும் வாழ்வித்தார். திங்களூரில் தம்மை மறவாது தம் திருவடியையே என்றும் அன்பால் செப்பும் ஊதியம் கைக்கொண்ட அப்பூதியடிகளாரின் பிள்ளையான மூத்த திருநாவுக்கரசு, நச்சராத் தீண்டி இறக்க, திருவருளைத் துணைக் கொண்டு உயிர்ப்பித்தருளினார்.
திருவாரூர் முதலிய தலங்களைப் போற்றினார். திருஞான சம்பந்தர், முருக நாயனார் முதலோரொடும் திருப்புகலூர் முதலிய வற்றை வழிபட்டார். திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்த்து மக்களை வாழ்வித்தார். திருமறைக்காட்டில் விண்ணோர் பூசித்துச் சார்த்திய திருக்கதவு திறக்கப், பண்ணினேர் மொழியாளுமை பங்கரைப் பாடினார். சோணாடு, நடுநாடு, தொண்டைநாடு முதலிய வற்றில் உள்ள பல சிவதலங்களைப் பணிந்தார். திருக்கயிலையை வணங்கப் பெருமுயற்சிகொண்டு பேரிடர்ப்பட்டார். பந்தணவும் மெல்விரலாள் பங்கன் திங்களணி செஞ்சடையன் அந்தணன் ஆகிப் போந்து, உரையாடி, பழுதிலாத் திருமேனியாக்கி, அழுதுருகிநிற்கும் ஐயரை ஐயாற்றிற் சென்று பொய்கையிற் கயிலையைக் காண்க என்று ஏவி, அவ்வாறே காட்டக் கண்டு களித்துப் பாடினார். அங்கு அது திருக்கோயிலாகி இன்றும் இலங்குகின்றது.
திருப்பூந்துருத்தியிற் சென்று வழிபட்டுத் தங்கியிருந்தார். காழிவேந்தர் பூழிவேந்தனை வாழ்வித்து மீண்டு அங்குற்றநாளில், சிவிகை தாங்கிப் புவியில் ஓங்கினார். அவ்வூர்த் திருமடத்தில் வாழ்ந்தனர் இருவரும் சிலகாலம். பாவேந்தர் பாண்டிநாடடைந்தார். திருவாலவாய், திரு விராமேச்சுரம் முதலியவற்றை வழிபட்டார். சோணாட்டை மீண்டும் உற்றார். திருப்புகலூரிலே வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, உழவாரப்படையால் செதுக்கும் இடங்களில், பொற்குவையும் நவமணிக்குவையும் தோன்ற அவற்றை ஓடும் கல்லுமாக மதித்து வீசி யெறிந்தார் குறைவிலாத நிறைவினார். வானர மகளிர் வந்து வானரச் செயல் பல புரிந்தனர். வாகீசர் மயங்காத மனத்தீசருமாய் விளங்கி னார். மயக்கவலியின்றித் தியக்கம் எய்தி மீண்டனர் அம் மகளிர். திருப்புகலூரிலே இடையறாது வழிபட்டு மன்னிய அன்புறுபத்தி வடிவான வாகீசர் பல பாடி, சிவாநந்த ஞானவடிவேயாகி, அண்ண லார் சேவடிக் கீழ் அமர்ந்துள்ளார். அந்நாள் சித்திரைச் சதயத் திருநாள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடி வாழ்க!
🙏💐 Thevaaram.org 🙏💐
தருமை ஆதீனப் புலவர், பல்கலைக்கல்லூரி முதல்வர்,
சித்தாந்த சிரோமணி, சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி, முதுபெரும்புலவர்.
வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்.
No comments:
Post a Comment