Monday, February 6, 2023

வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இந்தியாவில் உள்ள பிரபலமான 16 சிவன் கோவில்கள்

வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இந்தியாவில் உள்ள பிரபலமான 16 சிவன் கோவில்கள்
இந்தியாவில் ஏராளமான சிவபெருமானுடைய கோவில்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோவில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் அழகானதும் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதுமாக இருக்கிறது. பல கோவில்கள் மிகச் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதில் ஒரு சில முக்கியமான 16 கோவில்களை பற்றி பார்ப்போம்.
1. அமர்நாத் கோவில், காஷ்மீர்
இந்தியாவின் மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்று அமர்நாத் கோயில். இந்த கோயிலில் நடைபெறக்கூடிய அமர்நாத் யாத்திரை எல்லா பக்தர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. வாழ்க்கையில் ஒருமுறையாவது வர வேண்டும் என எல்லா சிவ பக்தர்களும் நினைக்கும் ஒரு இடம். இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு குகையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரின் பாதல் காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மே முதல் ஆகஸ்ட் வரை பனி லிங்கமானது தானாகவே உருவாகின்றது. இந்த கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை என புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்
கேதார்நாத் 12 ஜோதிர்லிங்கசிவ ஸ்தலங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சிவன் கோயில் இது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள சிவாலிக் மலைத்தொடரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு நிலவக்கூடிய மிகவும் கடுமையான குளிர் காரணமாக இந்த கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த கோவிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் கடைசி வரை செல்வதற்கு சாலை வசதிகள் இல்லை. கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோ மீட்டர்கள் வரை மலை ஏறியே இந்த கோயிலுக்கு செல்ல முடியும். இந்த கோவிலுக்கு ஏப்ரல் முதல் நவம்பர் வரை செல்லலாம்.
3. காசி விஸ்வநாத் கோவில், உத்தர பிரதேசம்
காசி விஸ்வநாத் கோவில் மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த சிவபெருமான் கோவில். இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது. தற்போது இது வாரணாசி என அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் இது காசி என அழைக்கப்பட்டதால் இது காசி விஸ்வநாத் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை செல்வது சிறப்பாக இருக்கும்.
4. கைலாஸ்நாத் கோவில் மகாராஷ்டிரா
இந்தியாவின் மிகச் சிறந்த சிவன் கோவில்களில் ஒன்றான கைலாஸ்நாத் கோவில் எல்லோராவில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராவில் அமைந்துள்ள இந்த குகைக்கோயில் மிகப்பெரிய ஒரு மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மலை உச்சியில் இருந்து செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றைக்கல் கோயிலை உருவாக்க பல நூறு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 4 லட்சம் டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 250 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவில் 148 அடி நீளமும், 62 அடி அகலமும் 100 அடி உயரமும் கொண்டது.
5. சோம்நாத் கோவில், குஜராத்
குஜராத்திலுள்ள சோம்நாத் சிவன் கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இது கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இது கடற்கரையின் அருகில் பரந்து விரிந்து காணப்படுவதால் பக்தர்கள் அதன் அழகைக் காண அதிக அளவில் வருகிறார்கள். அக்டோபரில் இருந்து மார்ச் வரை இந்த கோவிலுக்கு செல்வது இன்னும் சிறப்பாக இருக்கும். குஜராத்தில் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலாத்தலம் இது.
6. தஞ்சை பெரிய கோவில், தமிழ்நாடு
தஞ்சாவூரில் இருக்கக்கூடிய தஞ்சை பெரிய கோயில், பிரகதீஸ்வரர் கோவில் என்ற பெயரில் வடமாநிலங்களில் சொல்லப்படுகிறது. இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இந்தக் கோயில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில். தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் இந்த கோவில் ஒன்று. இந்த கோவிலில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட நந்தியானது 20 டன் எடையும் 2 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும் இரண்டரை மீட்டர் அகலம் கொண்டதாகவும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தியாகவும் உள்ளது.
7. ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஆந்திர பிரதேசம்
ஸ்ரீகாளகஸ்தி கோவில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்று. இந்த சிவன் கோயில் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஒன்றான இந்தத்தலம் வாயுத்தலம் ஆகும்.
8. வடக்குநாதன் கோவில், கேரளா
கேரளாவிலுள்ள திருச்சூரில் இந்த வடக்குநாதன் கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. கற்கள் மற்றும் மரங்களை பயன்படுத்தி பொதுவான கேரள பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் தினத்தன்று மிகப்பெரிய வாணவேடிக்கைகளோடு இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
9. முருதேஸ்வரர் கோவில், கர்நாடகா
முருதேஸ்வரர் கோவில் கர்நாடகாவில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிவன் கோயில்களில் ஒன்றான இது 20 மாடிகளை கொண்டுள்ளது. சிவபெருமானின் இரண்டாவது மிக உயரமான சிலை இந்தக் கோவிலில் காணப்படுகிறது. இந்த சிலையின் உயரம் 123 அடிகள். அழகான கடலின் பின்புலத்தோடு காணப்படக்கூடிய இந்த கோவில் பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தருகிறது.
10. தாரகேஸ்வர் கோவில், மேற்குவங்கம்
தாரகேஸ்வர் கோவில் பாபா தரக்நாத் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தின் ஹூக்லியில் உள்ள தாரகேஸ்வரில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக திங்கள் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
11. சிதம்பரம் நடராஜர் கோவில், தமிழ்நாடு
சிதம்பரம் நடராஜர் கோவில் தென்னிந்தியாவிலுள்ள மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்று. இந்தக் கோவில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் உள்ளது. இந்தக் கோவில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் எனவும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலை பூலோக கைலாசம் என்றும் கயிலாயம் எனவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
12. கோடி லிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா
கர்நாடக மாநிலத்தின் கோலாரின் கம்மசந்திராவில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோயில் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றாகும். பெயரைப் போலவே இங்கு ஒரு கோடி சிவலிங்கங்கள் காணப்படுகிறது. 108 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட சிவலிங்கமும் இங்கு உள்ளது. சிவ லிங்கத்திற்கு எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மொத்தம் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கோவில் 1980ஆம் ஆண்டில் சுவாமி சாம்பசிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டது.
13. லிங்கராஜ் கோவில், ஓடிஸா
லிங்கராஜ் கோவில் ஒடிசாவின் கோவில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. புவனேஸ்வரில் உள்ள மிகப்பெரிய கோவிலான இதன் மைய கோபுரம் 150 அடி உயரம் கொண்டது. இந்த கோயில் கலிங்க கட்டிடக்கலையில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. சோம வம்சி வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் என்று சொல்லப் படுகிறது.
14. பைதியநாத் கோவில் ஜார்கண்ட்
பைதியநாத் கோவில் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனாஸில் உள்ள தியோகரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இந்தக் கோவிலில் இராவணன் சிவபெருமானை வணங்கி வரங்களைப் பெற்றான் என்பது ஐதீகம். இராவணன் தன்னுடைய பத்து தலைகளையும் சிவபெருமானுக்காக ஒவ்வொன்றாக வெட்ட தொடங்கினான். அவனுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் ராவணன் காயத்தை ஆற்றுவதற்காக வைத்தியராக அங்கு வந்து அவனை காப்பாற்றி உள்ளார். அவர் வைத்தியராக இங்க தோன்றியதால் வைத்தியநாதர் கோயில் என அழைக்கப்பட்டுள்ளது.
15. திரிம்பகேஸ்வரர் கோவில், மகாராஷ்டிரா
திரிம்பகேஸ்வரர் கோவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பாக் என்ற இடத்தில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த கோவில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மிகவும் அழகிய கட்டிடக்கலை கொண்ட இந்த கோவில் பிரம்மகிரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லிங்கம் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று கடவுளரின் முகங்களுடன் காணப்படுவது சிறப்பம்சம்.
16. மகாகாலேஸ்வரர் கோவில் மத்திய பிரதேசம்
மகாகாலேஸ்வரர் கோவில் மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் என்னுமிடத்தில் சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சிவபெருமானைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ்பெற்ற சிவன் கோயில் இது. இங்கு உள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...