Tuesday, February 7, 2023

சிதம்பரம் (தில்லைவனம்)#திருமூலநாதர்( நடராஜர்)#உமையம்மை (சிவகாம சுந்தரி)

#சிதம்பரம் (தில்லைவனம்)
#திருமூலநாதர்( நடராஜர்)
#உமையம்மை 
(சிவகாம சுந்தரி)
இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.

#புராண பெயர்(கள்):
தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்

#பெயர்: சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
#ஊர்: சிதம்பரம்
#மாவட்டம்: கடலூர்
#மாநிலம்: தமிழ்நாடு
#நாடு: இந்தியா
#மூலவர்: திருமூலநாதர் (மூலட்டனேஸ்வரா்)

#உற்சவர்: நடராஜா் (கனகசபைநாதா்)
#தாயார்: உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)
#தல விருட்சம்: தில்லைமரம்
#தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்

பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

கல்வெட்டுகள்: உண்டு

தொன்மை: 3000-4000 வருடங்களுக்கு முன்
கட்டப்பட்ட நாள்:அறியவில்லை
அமைத்தவர்:
சோழ மன்னர்கள்
இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

#பெரும்பற்றப்புலியூர் 

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.

#பொன்னம்பலம் 

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

ஆனந்த தாண்டவம் 

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். 1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். 2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. 3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. 4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு 

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது

சிதம்பர ரகசியம் 

இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.

வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!

12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின் மிகப்பிரபலமான கோயில் நகரம். நான்கு திசைகளிலுமே நன்கு துல்லியமாக கட்டப்பட்ட அழகியலை விவரிக்க முடியா பேரழகு கொண்ட மிகப்பெரிய கோபுரங்களையும், அதில் அற்புதமான வடிவங்களையும் கொண்ட ஒரு கோயில் இதுவாகும். இந்த கோயிலைச் சுற்றி அமைந்த நகரமே சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரத்தின் வரலாற்றையும், சுற்றுலா அமைப்பையும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

பழமையும் ஆட்சியும்

உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு இன்றளவும் இயங்கும் பழமையான நகரங்களைக் கொண்டது, இந்தியா மட்டும்தான். அதிலும் தமிழகத்தின் புகழ் பாரெங்கும் பரவி நிற்கிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு இடத்தையும் தற்போது தமிழகம் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என அவரவர் ஆட்சிகாலங்களில் இந்த கோயில் மிக அழகாக கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டதுடன், நிறைய நன்கொடையும் அளித்தது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பது தில்லை நடராசர். இவருக்கு கூத்தன் எனும் பெயரும் உண்டு.

மானிட உடலில் சிவபெருமான்

உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவ பெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு. சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான். அவருக்கு உமையாளாக பார்வதி தேவியும், அவருடன் விநாயகர், முருகர், பெருமாள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர்.

பரதநாட்டியத்தை தோற்றுவித்த கலைக் கடவுள்

பொதுவாகவே பரதநாட்டியம் ஆடுபவர்கள் தில்லை நடராசரை வணங்கியே ஆடுவார்கள்,. அவரே இந்த கலையின் கடவுளாக போற்றப்படுகிறார். இவரது நடன அசைவுகளிலிருந்தே பரதநாட்டியம் எனும் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு சென்று பாருங்கள். இந்த கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் பரத கலையின் முத்திரைகளை வைத்துள்ளதுபோலிருக்கும்.

மதுரைக்கு அடுத்து சிறப்புடையது

இந்த கோயில் நூல்கள் இயற்றுவதில் மதுரைக்கு அடுத்து சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மதுரையில் தமிழின் முதுபெரும் நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளது. திருக்குறள் கூட மதுரையில் இயற்றப்பட்டதுவே ஆகும். அதுமாதிரி இந்த கோயிலில் திருமூலர் முனிவர் தனது திருமந்திரம் எனும் நூலில் இக்கோயிலைப் புகழ்ந்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை நட ராசர் கோயிலில் இருந்துதான் எழுதியுள்ளார். இங்குள்ள ஆயிரம் கால் மண்டபத்திலேயே இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது

பெயர்க்காரணம்

தில்லை நடராசர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகருக்கு புராண காலத்தில் நிறைய பெயர்கள் இருந்துள்ளன. அவற்றில் தில்லை, பெரும்பற்ற புலியூர், தில்லை வனம் என்பவை பலரால் அழைக்கப்பட்டு வந்த பெயராகும். தில்லை மரங்கள் நிறைந்து வளர்ந்த இடங்கள் ஆதலால் இதற்கு தில்லை எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது திருச்சிற்றம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிற்றம்பலம் என்பது மருவியே சிதம்பரம் ஆகியிருக்கிறது.

தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்

இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.

சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பிராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது

மாயம் செய்யும் மரகதக் கல்

புதுக்கோட்டை பேரரசர் சேதுபதி அவர்களால் இந்த கோயிலுக்கு ஒரு மரகதக் கல் தானமாக அளிக்கப்பட்டது. இந்த மரகதக் கல் செய்யும் மாயம் இங்கு வரும் பக்தர்களை புத்துணர்வு அடையச் செய்கிறது. கோயிலின் வெளிப்புறத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள்ளாகவே கலைப்படைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் சிதம்பரம் நடராசரை பார்த்ததும் புத்துணர்வு பெறுகின்றனர். இதற்கு காரணம் அந்த மரகத கல்தான் என்று நம்பப்படுகிறது.

அறிவியலுக்கு ஈடு கொடுக்கும் அற்புத கணக்குகள்

தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது,. காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது.

மனித இனத்தின் அருமை சொல்லும் கணக்குகள்

இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த 9 எனும் எண் குறிப்பது நம் உடலில் இருக்கும் ஒன்பது நவத் துவாரங்களையும் ஆகும். மேலும் கருவறையில் 21 ஆயிரத்து 600 தங்கத் தகடுகள் இருக்கின்றன. 72 ஆயிரத்து ஆணிகளைக் கொண்டு பதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் சுவாசிக்கும் கணக்கு. எழுபத்தி இரண்டாயிரம் என்பது மனித உடலில் இருக்கும் நரம்புகள் என்பது நிச்சயம் அறிவியலை ஆச்சர்யம் கொள்ளச் செய்யும் கணக்குதானே.

மேலும் இங்கு சித்ர சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை, தேவ சபை என்று அழைக்கப்படும் ஐந்து சபைகள் இருந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் புனித குளம் சிவ கங்கை என்று அழைக்கப்படுகிறது

பிக் பாங்க் தியரி சொல்லும் வரலாறு

பலர் பிக் பாங்க் தியரி உருவாவதற்கு முன்னரே உலகம் எப்படி தோன்றியது என்ற தத்துவத்தை தில்லை நடராசர் கூறியுள்ளதாக நம்புகின்றனர். அதாவது இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியது. ஒரு பெரிய வெடிப்புதான் இந்த உலகம் தோன்றியதற்கு காரணம். அதன்படி, இந்த கோயிலின் மூலவரான ஒரே இடத்தில் நில்லாமல், ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புறத்தில் ஒரு கையில் உடுக்கையும், இடது புறத்தின் ஒரு கையில் தீயையும் வைத்துள்ளார் நடராசர்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன்படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. சிவன் என்பது வேறு யாரும் இல்லை ஆற்றல்தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

உலக அறிவியலை தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

வரலாற்றில் அதிக ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முக்கால் சதவிகித கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்கள் தான்.அதிலும் கோயில்கள் என்றாலே அது தில்லைதான் என்று பல பாடல்களில் பார்க்க முடிகிறது

சைவ திருத்தலங்களில் முதல் தலம் தில்லை நடராஜர் தலம் தான். இறைவனே மாணிக்கவாசகர் பாடல்களை எழுதிய வரலாறு கொண்டது இந்த திருத்தலம்.

மாணிக்கவாசகர் எனும் சிவபக்தனின் பாடல்களை மாணிக்க வாசகர் பாடப்பாட இறைவனே வந்து எழுதிக் கொடுத்த மிக முக்கியமான தலம் சிதம்பரம். மாணிக்கவாசகரின் இடைவிடாத பக்தி இறைவனை அசைக்க அவரே வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரின் திருவாசகத்தை தனது இறைவிரல்களால் எழுதிக் கொடுத்து திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு விட்டு மறைந்து விட்டார். அதன் பின்னர்தான் வந்து எழுதியவர் இறைவன் என்பதையே மாணிக்கவாசகர் உணர்ந்தார்.

மாணிக்கவாசகரின் வரிகள் இறைவன் இதயத்தை தொட்டதாலோ என்னவோ அவர் கைப்பட எழுதிய திருவாசகம் நம் அத்தனை நெஞ்சங்களையும் அவரைப் போலவே அன்பிற்கு உருக செய்கிறது .

அறிவியலின் படி இந்த கோயில் 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய திருமூலரின் பாடல்களில் இந்த தில்லை கோயில் இருக்கிறது என்றால் அது ஆய்வுகளை பற்றிய நமது பார்வைகளை கேள்விக்குறியாக்குகிறது என்றால் மிகையில்லை.

பொதுவாக சிதம்பரம் கோயில் (chidambaram temple) அதிசயமாக அறியப்படுவது.. மனித உடலை குறிப்பிடும்படி இந்த கோயில் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். ஒன்பது வாயில்கள் ஒன்பது துவாரங்களை குறிப்பிடுகின்றன. ஒரு மனிதனின் சராசரி சுவாசக் கணக்கு 21600முறை. இதனை குறிப்பிடும் வகையில் சிதம்பரம் பொற்கூரையில் 21600 ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மனித உடலின் மொத்த நாடிகள் 72000. இவை ஆணிகளாக அந்தக் கூரையில் அடிக்கப்பட்டிருக்கின்றன.

நம் உடலில் இதயம் இடப்பக்கம் இருக்கிறது. இறைவிக்கு தனது இடபாகம் தந்த இறைவனின் கருவறையும் கோயிலின் இடப்புறம் இருக்கிறது. நமசிவய எனும் ஐந்து படிகள் ஏறினால் பொன்னம்பலம் கொண்ட சிதம்பரத்தாரை தரிசிக்கலாம். இதயத்தின் நான்கு சுவர்களை போலவே அங்கே நான்கு தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இரண்டு விதமாக நாம் இங்கே யோசிக்கலாம். வரலாற்று படியே பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த தொழில்நுட்பங்களும் செயல்படாத ஒரு காலத்தில் ஒரு மனிதனின் உடல் இப்படித்தான் இருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தார்கள்.. இதயத்தின் நான்கு சுவர்கள் வரை detailing செய்து எப்படி இந்த கோயிலை வடிவமைத்தார்கள்.. இது எப்படி சாத்தியமானது? இப்படி யோசித்தால் இந்த கோயிலே உலக அதிசயங்களில் முதலாவதான கோயிலாக இருக்க முடியும்.

இரண்டாவது முறையாக இந்த கோயிலின் அமைப்பிலேயே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். நமது உடலை கோயிலுடன் ஒப்பிடுங்கள் .. கோயிலை போலவே சற்று இடது புறம் இருக்கும் இதயமும் அதன் சுவர்களையும் கவனியுங்கள். நமசிவய எனும் ஐந்தெழுத்து படி ஏறினால் பொன்னம்பலத்தானை தரிசிக்கலாம் என்பது போல.. நமது ஐம்புலன்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து காலடியில் படிகளாக மாற்றிக் கொண்டால் சதாஷிவம் எனும் அந்த இறைவன் நம் இதயத்துக்குள்ளே ஆனந்த நடனம் ஆடியபடி இருப்பதை அவரது தாளங்களே இதயத்தின் துடிப்பாக மாறி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றால்.. இனி நம் வாழ்வை அந்த சதாஷிவன் சந்தோஷமாக பார்த்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.

சரி. கோயிலின் வரலாற்றிற்கு வருவோம்.. உலகெங்கும் ஒரு சாதாரண வழக்கு சொல் ஒன்று உண்டு.. அப்படி என்ன சிதம்பர ரகசியம் (secrets of chidambaram) பேசுகிறாய் என்று யாரையாவது யாராவது கேட்பதை நாம் கவனித்திருப்போம். அப்படி அந்த சிதம்பரத்தில் என்ன ரகசியம் இருக்கிறது...

பெரியவர்கள் சித்தர்கள் முனிவர்கள் இறைவன் எல்லோரும் சில விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ரகசியமாக இருக்கும்வரைதான் அதிசயமாக இருக்கும் என்பதாலும் ரகசியம் அறிந்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தி ஆன்மிகத்தை வியாபாரம் செய்வார்கள் என்பதாலும் அவர்கள் அதற்கு தகுதியான ஆட்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மறைபொருளாகவே வைத்திருப்பார்கள்.

அந்த ரகசியங்கள் எல்லாம் தகுதியான யுகத்தில் தகுதியான காலத்தில் அதனை அறிய வேண்டியவர்கள் அறியும் வண்ணம் தாமாகவே வெளிப்படும் ஒருவிதமான டைமர் (timer) செட் செய்யப்பட்டவை என்பது நிச்சயமான உண்மை. இந்த காலம் இந்த நேரம் இவை வெளிப்பட வேண்டும் என்பது இறை சித்தமாக இருப்பதால் இப்போது இதனை வெளிப்படுத்துவதில் மனம் நிறைகிறது.

பொதுவான ரகசியம் என்பது திருச்சிற்றம்பலம் எனும் கருவறையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு ஆரத்தி காட்டியபின்னர் எந்த உருவமும் இல்லாத இடத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டிருக்கும். அங்கும் ஆரத்தி காட்டுவார்கள். இதன் தாத்பர்யம் இறைவன் வெட்டவெளியான ஆகாயவடிவிலும் இருக்கிறான் என்பதுதான்.

ஆனால் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட விஷயம் என்பது இறைவன் நடராஜர் இடது காலை தூக்கி ஆடுகிறார். அவரது வலது கால் முயலகன் எனும் அசுரனை எழும்ப விடாமல் அழுத்தி இருக்கிறது. வலது கால் கட்டை விரல் முயலகனை அழுத்தும் அதே இடத்தில்தான் பூமியின் மிக சரியான மையம் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் மிக சரியான மையப்புள்ளி சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் வலது பெருவிரலுக்கு நேர் கீழே அமைந்திருக்கிறது.

துல்லியமான தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலத்தில் இப்படி இடத்தை எப்படி கோயிலாக்க முடிந்தது.. எப்படி மிக சரியாக இறைவனின் வலது பெருவிரல் பாதம் பூமியின் மையத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் பாக்கியவான்கள். இதனை பல கோடி டாலர்கள் செலவழித்த பின்னர் உலக ஆன்மிக மையம் இந்த அதிசயத்தை கண்டுபிடித்து அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது!

அறிவியல் என்பதே ஏற்கனவே இருக்கும் ஒன்றில் இருந்து எதையாவது கண்டுபிடிக்கும் வரையில்தான் அதன் வேலை நடந்து கொண்டிருக்கிறது எனும்போது உலக அறிவியலாளர்கள் வியக்கும் வண்ணம் அமையப்பெற்ற சதாஷிவம் தனது ஆனந்த நடனத்தை எப்போதும் ஆட்டியபடியே இருக்கிறது. இதனை உலக அறிவியலாளர்கள் காஸ்மிக் நடனம் பிரபஞ்ச நடனம் என்கின்றனர்.

முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.

இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.

தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.

இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.

இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.

பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.

வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.

1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.

முற்காலத்தில் இத்தலத்தில் சிவபெருமான் வணங்கி தவமியற்றி வந்தார் மாத்யந்தினர் எனும் முனிவர். தினந்தோறும் இந்த தலத்திற்கு அருகிலுள்ள வனங்களில் உள்ள பூக்களை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சித்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு முறை பூக்களை பறிக்கும் போதும் அதில் பெரும்பாலானவை தேனீக்களால் அம்மலரில் உள்ள தேன் உறிஞ்சப்படுவதால், அத்தகைய பூக்கள் சிவபூஜைக்கு பயன்படாமல் போவதை எண்ணி வருந்தினார். தேனீக்கள் மலர்களை மொய்ப்பதற்கு முன்பாக இருட்டில் சென்று பூக்களை பறிக்கவும் தன்னால் இயலிவில்லை என்று சிவபெருமானிடம் வருந்தினார்.

viyakirapadhar

அப்போது அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான் மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்கு வசதியாக சிறுத்தை புலியின் கால்களையும், இருட்டில் நன்கு பார்க்கும் சக்தி கொண்ட அந்த சிறுத்தையின் கண்பார்வை திறனையும் மத்யந்தினருக்கு அருளினார் ஈஸ்வரன். இதன் காரணமாக மத்யந்தினர் வேங்கை என பொருள் கொண்ட வியாக்கிரம் என பெயர் கொண்டு அன்று முதல் “வியாக்கிரபாதர்” முனிவர் என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வியாக்கிர பாத முனிவருக்கும், “யோகக்கலையின்” பிதாமகரான “பதஞ்சலி” முனிவருக்கும் ஒரே நேரத்தில் தனது திருநாட்டிய நடன தரிசனத்தை தந்து அருள் புரிந்தார் சிவபெருமான்.

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...