சிவலிங்கமும் மகா சிவராத்திரி விரதமும் அதன் சிறப்பும்
சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன? "காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார். திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம் கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). தமிழில் – இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன. இதனுடைய விளக்கம் இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல் என்பதாக அமைகிறது. இலிங்கம் – ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது எனலாம்.
இலிங்கம் என்றால் உயிர், அணு. ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு. இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு. இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம்.
இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள். இலிங்கம் எனும் சொல் வடமொழியிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளல் ஆகாது. கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது எனலாம்
இதனயே சேக்கிழார் பெருமான்: “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”. என்கிறார் பரம்பொருளான சிவ பெருமான் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா சீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருட்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விட்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விட்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை நாம் உணரலாம். இந்தப் பிரமாண்டமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. இதனையே அன்பே சிவம் என்கிறார் திருமூலர்,
“அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே”
இப்பாடலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றிருக்கிறது ……. திருமூலர் அன்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார், நாம் அனைவரும் இவ் அன்பானது ஒருவர் பிறர் மீது செலுத்தும் அன்பு என்று தான் நினைத்திருக்கிறோம் அல்லவா ஆனால் இப் பாடலை ஊன்றிக் கவனித்தால் அதனுடைய பொருள் விளங்க்கும் …….இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல……. நமது உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ அதை தான் திருமூலர் சிவம் என்று சொல்கிறார்.
இதைத்தான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார். சரி உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது? இதனை நாம் நங்கு கவனிப்போமேயானால் நம்மில் சில நண்பர்கள், அல்லது சில யோகிகள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள். நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் ‘அவர் சிறு வயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ கோபம் கொள்ளமாட்டார் என்று. சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அதெல்லாம் பிறப்பிலே அமையவேண்டும் அல்லது யோகத்தினால் அமையவேண்டும்” என்று சொல்வார்கள். அது என்ன பிறப்பிலே அமைவது? அது வேறொன்றுமில்லை….. உயிரிலே அமைய வேண்டும் என்பதைத்தான் புரியாமல் சொல்கிறார்கள்.
ஆம் நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும். அது என்ன உயிர் தன்மை? நம் உயிரின் தன்மைதான். அதை எவ்வாறு அடைவது? நாம் செய்யும் தவம் நம் உயிர் தன்மையை தொட வேண்டும். அவ்வாறு உயிர் தன்மையை தொட்டு தவம் செய்தோமேயானால் அப்பொழுது உள்ளூர ஒன்று நடந்தேறும். அது என்ன? அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார்,
“நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து – அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச என்னுரிமை நாயகனே என்ற வனைந்து வனைந்து ஏத்ததும நாம் வம்மின் உலகியலீர மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” அது என்ன நம் உயிர் தன்மையை தொட்டு செய்யும் தவம் , நம் உயிர் எங்கு இருக்கிறது அதை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று தெரிந்து தவம் செய்வதே ஆகும். அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விடயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது.
இதை ஞானிகள் உணர்ந்ததால்தான். இயேசு ‘அயலானையும் நேசி’ என்றார். வள்ளல் பெருமான் சீவ காருண்யமே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார். உயிர் எங்கு இருக்கிறது? உயிர் பற்றி திருமூலர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று பாப்போம்? இந்த பாடலில் திருமூலர் உயிர் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிவலிங்கம் என்பது என்ன என்பதை பற்றியும் சொல்கிறார், இதன் மூலம் காலம் காலமாக சிவலிங்கம் பற்றிய சிலரது தவறான கண்ணோட்டத்தை சம்மட்டியால் அடித்து எறிகிறார்
அந்தப் பாடல்
உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல்
தெள்ள தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே”
நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம். இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா… சொல்லிவிட்டார் ஊனுடம்பு ஆலயம் என்று…நம் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்? ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்” என்றும் சொல்லி விட்டார், இப்பொழுது ஒன்றை உணரவேண்டும் ஏன் நாம் செய்யும் தவம் நமது உயிர்த் தன்மையை தொட வேண்டும் என்று, நாம் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் மட்டும் இல்லை, ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் இருக்கிறார்,
இதைத்தான் “உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” -என்று அவ்வை பிராட்டியும் சொல்கிறார், “திடம்பட ஈசனை தேடு” –அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது? உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள் இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா? என்றால் திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார் “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார் இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்.
ஆம், சிவம் என்றால் ஒளி என்றே பொருள்படும். சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல, இவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’மிக தீர்க்கமாக நம்பியதால்தான் இப்படி பாடினார்:- “சாதியும் மதமும் சமயமும் பொய் எனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி” சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார் என்பதாகும்.
அபபடி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். அன்பே உருவாக சிவத்தை நினைந்திடுவோம்.
சிவ வழிபாடுகளில் முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததும் மகாசிவராத்திரி விரதமாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.
வேடன்
சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி முதலில் தெரிந்துக்கொள்வோம்.
குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவி ஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள்.
நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.
முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது. வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது.
“என்னை கொல்வதற்கு முன் ஒரு உதவி செய். நான் என்னுடைய வீட்டுக்கு சென்று என் குழந்தைகளை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்.” என்றது. மிருகங்களின் மொழி அறிந்த வேடனும், “நீ திரும்பி வருவாய் என்று உன்னை நம்புகிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்றினால், உன் குட்டிகளையும் சேர்த்தே கொன்றுவிடுவேன்.” என்று எச்சரித்து அனுப்பினான்.
மான் பேசும் மொழியை வேடன் எப்படி புரிந்துக் கொண்டான்? என்று சிலருக்கு கேள்வி எழலாம். பல யுகங்களுக்கு முன்பு எத்தனையோ அற்புதங்கள் ஆற்றல்கள் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் மிருகங்களின் சப்தத்தை ஒரு மொழியாக புரிந்துக்கொள்வதும்.
சரி நாம் கதைக்கு வருவோம். அந்த பெண் மான், வேடனிடம் “திரும்ப வருவேன் என்னை நம்பு” என்ற கூறிவிட்டு சென்றது. வேடனும் அந்த பெண்மானுக்காக காத்திருந்தான். அந்த மான் கிடைத்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று ருசியாக சாப்பிடுவார்கள் என்று ஆனந்த கனவில் இருந்தான்.
இரண்டாவது ஜாமம் வந்தது. அந்த பெண்மான் வருவது போல தெரியவில்லை. இதனால் கோபமாக தூங்காமல் மரத்தின் மேல் அசைந்து அசைந்து உட்பார்ந்தான் வேடன். அப்போதும் வேடனின் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் மீண்டும் வில்லமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்லஇலையும் அந்த சிவலிங்கத்தில் பட்டது.
அந்த நேரத்தில் ஒரு ஆண் மான் வருவதை கண்ட வேடன், அந்த மானை குறி வைத்தான். இதை பார்த்த அந்த ஆண் மானும் தப்பி ஓடி முயற்சிக்காமல் வேடனிடம் பேச ஆரம்பித்தது.
“வேடனே எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.” என்றது. இதை கேட்ட வேடன் படுகோபமாக வில்லை எடுத்தான். அந்த நேரம் மூன்றாம் ஜாமம். மீண்டும் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டு, வில்ல இலையும் லிங்கத்தின் மேல் பட்டது.
மானை பார்த்த வேடன் கோபமாக, “நான் ஏற்கனவே ஒரு பெண் மானிடம் ஏமாந்தேன். மீண்டும் ஏமாற மாட்டேன். உன்னை கொல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.” என்றான் வேடன்.
ஸ்ரீ ராமருக்கு உதவியவன்
“இரு இரு. சற்று பொறு. என்னை நம்பு. நான் சிவபக்தன். அதுவும் இன்று சிவராத்திரி. நீ இருக்கும் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வழிபடவே வந்தேன். சிவ பக்தன் ஆகிய நான் பொய் சொல்ல மாட்டேன்.” என்றது ஆண் மான். இதை கேட்ட வேடன், பரிதாபபட்டு, “சரி போ. ஆனால் சீக்கிரம் வந்துவிட வேண்டும்.” என்ற நிபந்தனையுடன் ஆண் மானை அனுப்பினான்.
நான்காவது ஜாமத்திலும் வேடன் நித்திரை இல்லாமல் தண்ணீர் குடிக்கலாம் என்று அருகில் இருந்த பாத்திரத்தை எடுக்கும் போது, அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. மீண்டும் வில்லஇலையும் மரத்தில் இருந்து உதிர்ந்து சிவலிங்க திருமேனில் விழுந்தது.
அப்போது, ஆண்மானும் பெண்மானும் சொன்னதுபோல் வேடன் முன்னே வந்து நின்றது.
“வேடனே…நாங்கள் சொன்னது போல வந்துவிட்டோம். நீங்கள் எங்களை கொன்று சாப்பிடுங்கள்.” என்றது மான்கள்.
மான் கூறியதை கேட்ட வேடன், “சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டீர்கள். மிருகங்களான உங்களுக்கே நேர்மை இருக்கும்போது, நான் மனிதன் என்பதை நானும் நிரூபிக்க வேண்டும். அதனால் உங்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பத்திரமாக திருப்பி செல்லுங்கள்.” என்றான் வேடன்.
வேடன் சொன்னதை கேட்ட ஆண் மானும் பெண் மானும் துள்ளிக் குதித்தபடி வில்வமரத்தை மகிழ்ச்சியுடன் சுற்றி வந்து ஓடி மறைந்தது. அந்த மான்களின் மகிழ்ச்சியை கண்டு வேடன் மிகவும் மகிழ்ந்தான்.
பிறகு, “ஈஸ்வரா…” என்று வாய் திறந்து சொல்லி மரத்தில் இருந்து இறங்கினான் வேடன். அந்த சமயம், சிவபெருமான் தோன்றினார். இறைவனை நேரில் கண்ட வேடன் அதிர்ந்து போனான்.“குருத்ருஹன். உன்னை அறியாமல் நீ சிவபூஜை செய்தாய். அத்துடன் என் நாமத்தையும் உச்சரித்தாய். உன் பாவ கர்மாக்கள் தீர்ந்தது. இனி வறுமை இல்லாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வாய். அடுத்த பிறவில் நீ குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமரை தரிசித்து, பிறவி இல்லா பெருவாழ்வை பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் ஈசன். இதை, நைமிசாரணியவாசிகளிடம் சொன்னார் சூத முனிவர்.
வேடன், ஒரு மகாசிவராத்திரி அன்று தன்னை அறியாமல் பூஜை செய்ததற்கே நல்ல பலன் பெற்றான். ஆனால் பல வருடங்கள் மகாசிவராத்திரி பூஜை செய்கிறோம் எங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
வங்கியில் லோன் போட்டு வீட்டை வாங்குகிறீர்கள். சில கடன் ஐந்து வருடங்கள் இருக்கும். சில கடன்கள் பத்து-பதினைந்து வருடங்கள் இருக்கும். நீங்கள் தவனையை சரியாக கட்ட கட்ட
கடன் சுமை குறைவதை போல, நாம் மகாசிவராத்திரி வழிபாடு செய்ய செய்ய நம் நீண்ட கால கர்மவினை படிபடியாக குறையும். கடன் தீர்ந்தால் சொத்து திரும்ப கிடைப்பதை போல, கர்மவினைகள் தீர்ந்தால் தலைமுறை தலைமுறையாக இராஜயோக வாழ்க்கை அமையும்.
வீட்டில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பவர்கள், சிவலிங்கத்தின் நான்கு ஜாமத்திலும் மலர்கள், பன்னீர், வில்வ இலைகளால் பூஜிக்க வேண்டும். நான்கு ஜாமத்திலும் பூஜிக்க முடியாதவர்கள், இரவு பண்ணிரெண்டு மணிக்கு சிவபூஜை செய்தாலு்ம் பலன் கிடைக்கும். மறுநாள் சிவாலயம் சென்று வழிபடுபவது இன்னும் நல்லது.
முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.
ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார்.
சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, “ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.
No comments:
Post a Comment