திருச்செந்தூர் செந்திலாண்டவர் மகிமைகள்...
திருச்செந்தூர் போர் நடந்த இடம் ஆதலால், செந்திலாண்டவன் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது. மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணிகலன்கள் அணிவிக்கப்படுகின்றன.
மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.
இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.
தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.
கி.பி. 1670-ஆம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.
'இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!' என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.
பிரிட்டிஷ்- கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.
ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைர வேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர்.
மாசித் திருவிழாவின் 8-ஆம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.
இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.
திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, 'செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!' என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ''சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!'' என்றார் சாஸ்திரியார்.
பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது
No comments:
Post a Comment