Wednesday, March 8, 2023

மகா விஷ்ணுவின் நான்காம் அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இதில் திருமால் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நரசிம்மராக அவதாரம் எடுத்தார்.

_நரசிம்ஹ அவதாரம்
மகா விஷ்ணுவின்  நான்காம் அவதாரம்  நரசிம்ம அவதாரமாகும். இதில் திருமால்   சிங்கத்தின்  தலையையும், மனித உடலையும் கொண்ட நரசிம்மராக   அவதாரம் எடுத்தார்.  இதில் நரசிம்மர்   சிங்க முகத்துடனும், நகங்களோடும், மனித உடலோடும் தோற்றமளிக்கிறார்.  
                
தன் பரமபக்தனான
பிரகலாதனைக் காத்து, இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். காசியப முனிவருக்கும், தி்திக்கும்  #இரணியகசிபு மற்றும் #இரணியாட்சன்   என  இருவர்  பிறந்தனர்.
          
வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாட்சன்  கொல்லப்பட்ட பின்னர்,  வெகுண்ட #இரணியன்,   விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்து, வரம் பெற்றான்.  தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ   எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது!  என்று மிகப் புத்திசாலித்தனமாக வரம் கேட்கப் பிரம்மாவும்   அவ்வாறே   வரத்தை அளித்தார். 
          சகா வரத்தைப் பெற்றுவிட்டோம்!   என்றெண்ணிய இரணியன், தேவர்கள்,  மனிதர்கள் என அனைவரையும்  மிகவும் கொடுமைப்படுத்தினான்; அவனை அடக்க யாராலும் முடியவில்லை. இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். 
            தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும்! என்றும், இறைவனின் பெயரை உச்சரிக்கக்கூடாது!   என்றும்,  'இரணியாயநமஹ' என என்னையே வணங்கவேண்டும்!   என்றும்   அனைவரையும் கொடுமைப்படுத்தினான்  இரணியன்.
             இரணியன் தவம்  செய்யப்போன வேளையில்,  இரணியனின் மனைவியைக் கொன்றுவிட முயன்றான்  இந்திரன்.  கொடியவனான இரணியனுக்கு ஒரு வாரிசு வந்துவிட்டால்,  அவனும் கொடியவனாகவே இருப்பான் என்றெண்ணிய இந்திரன்,  இரணியனின் மனைவியான  கயாது, கர்ப்பிணியாக இருக்கும்போதே அவளைக் கொன்றுவிட முயன்றான். அதைத் தடுத்த நாரதர், கயாதுவிற்கு திருமாலின் மகிமைகளைக் கதையாகச் சொல்லி வந்தார்.
              கர்ப்பவதியாக இருந்த கயாதுவின் வயிற்றில் இருந்தச் சிசுவான பிரகலாதன், தாயின் வயிற்றில் இருந்தவாறே ஹரிநாமங்களைக் கேட்டு விஷ்ணு பக்தனாக உருவானான். நாரத மாமுனிவர்,   தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தைப்   பிரகலாதனுக்கு "ஹரிஸ்ரீமன் நாராயணன்"  தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.
         எனவே பிறவியிலேயே  திருமாலின் பக்தனாக இருந்தான் பிரகலாதன். அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார்,  இரணியன் தான் கடவுள் என்று போதிக்கப்  பிரகலாதன் ,  ஹரிஸ்ரீமன் நாராயணன் தான்  அனைவருக்கும்  கடவுள் என்று சாதித்தான்.
              தன்  நாட்டிலுள்ளோரை, கடவுளை வழிபடாதே! எனக்கூறிய   இராட்சதனால்,  தனது வீட்டிலேயே இருக்கும் பக்தனின் மனதையோ, இறை நம்பிக்கையையோ, மாற்ற முடியவில்லை. இறைவனின் லீலையை என்னவென்பது?  இன்றைக்கும் இவ்வாறான நிலையே நாட்டில்  உலவுவது வேடிக்கையானது. 
             #நாராயணாய_நமஹ  எனச் சொன்ன பக்தர்களை எல்லாம் கொன்ற இரணியன்,  தன் மகனின் மனதை மாற்ற படாதபாடுபட்டான்.  பிரகலாதனின்  மனதை மாற்ற சாம, பேத, தான,  தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான்  அரக்கன். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.
                ஆத்திரமடைந்த இரணியன், தன் மகன் என்றும் பாராமல், அவனை கொல்ல முயற்சி செய்தான்; ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடற  செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடு முயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால், விஷ்ணுவின் உதவியால் ஒவ்வொரு  முறையும்  காப்பாற்றப்பட்டான்  பிரகலாதன்.
             இரணியனின் சகோதரி 'ஹோலிகா"  என்பவள்   நெருப்பு தீண்டாத வரத்தைப்  பெற்றிருந்தாள். அவள், தன் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்டிட ,  நெருப்பு பிரகலாதனை ஒன்றும்  செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் #ஹோலிப்_பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
          பிரகலாதனைக் கொல்லும் முயற்சிகளில்   எல்லாம் தோற்றுப்போன இரணியன், தானே பிரகலாதனைக் கொல்லப் போன போதும்,  பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார்! என்றான். அதைக்  கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன், விஷ்ணுவைத், தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுள்  எங்கே  இருக்கிறார் காட்டு!  என்றான்.  பிரகலாதனோ,   தன் கடவுள் ஹரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார்!   எதிலும் இருப்பார்  என்றான்.   இந்த தூணில் உன் ஹரி இருக்கிறினா? எனக்   கோபத்தோடு இரணியன்  கேட்க,  ஏன் தூணிலும் இருப்பார்!  எந்தத் துரும்பிலும் இருப்பார்! என்று கூறினான்  பிரகலாதன். 
           இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளானா?  என்று கேட்க, பிரகலாதனோ,   இருக்கிறார்  தந்தையே! என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரமாக,  இடுப்பிற்கு மேலே சிங்கம், கீழே மனிதன் என,   சிங்கக் கர்ஜனையோடு   தூணைப் பிளந்துக்கோண்டு வெளிவந்து, இரணியனைத்  தூக்கி, தன் மடியில் கிடத்தியவாறு  வாயிற்படியில் அமர்ந்து அந்திசாயும் வேளையில்  தன் விரல் நகங்களாலேயே இரணியனின் குடலைக்  கிழித்துக் கொன்றார். 
                   இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளோயோ, வெளியேயோ, விலங்காலோ, மனிதனாலோ, தேவர்களாலோ,  எந்த ஆயுதங்களின் மூலமோ தனக்கு மரணம் வரக்கூடாது! என்று இரணியன் பெற்ற வரம் மாறாதவாறு,  அவனைக் கொன்று,  தன்னை நம்பிய பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றி அருளினார்  ஶ்ரீமன் நாராயணர். எனவே தான்  'நாளை என்பது நரசிங்கருக்கு இல்லை'  என்பார்கள்;  அதாவது நரசிங்கரை வழிபட்டால், மறுகணமே நமது துயரங்களைத் தீர்ப்பார் ! என்பது இதன் பொருள்.
             இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவபெருமான் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதானல் அவர்கள் விஷ்ணுவின் தேவியான இலட்சுமியை. நாடினர். ஆனால் இலட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை,  நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும்,  வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது.
               நரசிங்கர், பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார். ஆயினும் தந்தை அமர்ந்த ஆசனத்தில் அமர்ந்து அரசாட்சிச் செய்யவே பயந்தான் பிரகலாதன்; எங்கே தனக்கும் தந்தையின் கொடிய குணமும், ஆணவமும் வந்துவிடுமோ, எனப்  பயந்தான். எனவே நரசிங்கரே அந்த ஆசனத்தில் அமர்ந்து, பிரகலாதனை அருகே அழைத்து, அவனது தலையில் கையை வைத்து நீ என்றும் எனது பக்தனாகவே இருப்பாய்! என ஆசீர்வதித்தார் நரசிங்கர்.  நரசிங்கர் அமர்ந்த ஆசனம் என்பதால்,  அதுமுதல், மன்னர்கள் அமரும் ஆசனத்தை,  #அரியாசனம்,   #சிம்மாசனம்  என அழைத்தனர்  மக்கள். 
                பின்னர் பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க, இனி உனது வம்சத்தில் யாராவது  ஆணவத்தால் அதர்மங்களைச் செய்தாலும்,  கொடுமையான முறையில் தண்டிக்கமாட்டேன்! எனப் பிரகலாதனுக்கு வாக்களித்தார் நரசிங்கர். இதனாலேயே பிரகலாதனின் பேரனான மகாபலியைத் தண்டிக்காமல்,   தனது  திருவடியை  #மகாபலியின் தலையில் வைத்து,  பாதாள உலகை ஆண்டு வரும்படி ஆசி வழங்கினார்  வாமனர்.
          நரசிம்மரின் அவதாரம், இறைவன் எங்கும் உள்ளார்!  என்பதையும்,  உறுதியான பக்தியுடைய  பக்தர்களின்  துயரை இறைவன் எப்படியும்  தீர்ப்பார்!  என்பதையும்   உணர்த்துவதாகும். நரசிம்மரின்  பக்தர்கள், எப்பேர்பட்ட சிக்கலான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களை  உடனே  காப்பாற்றி அருளுவார் நரசிங்கர்.  தூய்மையான பக்தி என்பது அவர்களது பிற்ப்பு சம்பந்தபட்டது அல்ல, அவர்களது குணம் சமபந்தபட்டது! என்பதைப் பிரகலாதனின் பக்தி, உணர்த்துகிறது.
        #பிரகலாதான்   அசுரனாக பிறந்தாலும்,    இறைவன் மீது இருக்கும் சிறந்தப் பக்திக்கு உதாரணமாக விளங்குகிறார்.  எத்தகைய    இன்னல்கள், ,அவமானங்கள் வந்தாலும்,   தந்தையே,  தன்னைக்  கொல்ல   முயன்ற போதும்,  இறை நம்பிக்கையை விடவில்லை  பிரகலாதன்;   விஷ்ணுவே  சரணாகதி!   என  உறுதியோடு  இருந்தார். 
               திருமாலின் திருவடிகளே சரணம்! எனச் சிக்கெனப் பிடித்தப் பிரகலாதனின் வரலாறு,  உறுதியான தெய்வநம்பிக்கைக்கு என்றைக்கும்  வெற்றியே கிடைக்கும்! என்பதை உணர்த்துவதாகும்.  அனைவரும் நாட்டிலுள்ள தீமைகள், அதர்மங்கள் அழிய நரசிங்கரை வேண்டுவோம்.

*ஓம்நரசிங்கரே சரணம்*

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...