திருநாவுக்கரசர் (திருக்கயிலையில் அருள் பெற்ற நிகழ்வு):
நாவுக்கரசு சுவாமிகள் வாரணாசியினின்றும் தனியே புறப்பட்டுத் திருக்கயிலை நோக்கிச் செல்கின்றார். எவருமே செல்ல அஞ்சும் கானக மார்க்கத்தில் இரவும் பகலும் சிவசிந்தையுடன் முன்னேறிச் செல்கின்றார். ஒரு நிலையில் காய்; கனிகள்; நீர் என்றிவற்றையும் தவிர்த்துச் சரீர சிந்தையொழித்துத் திருவருளை வழுத்தியவாறு பயணிக்கின்றார். பாதங்கள் கணுக்கால் வரையில் தேய்கின்றது, கரங்களின் உதவி கொண்டு முன்னேறிச் செல்கின்றார்.
*
மணிக்கட்டு வரையில் தசைகள் தேய்கின்றன. எனினும் அன்பு குன்றாதவராய் மார்பினால் தேய்த்துச் செல்கின்றார். மார்பின் தசைகளும் அழிந்து பட்டு எலும்புகளும் முறிகின்றன. திருவருளை நினைத்தவாறே புரண்டு செல்லத் துவங்குகின்றார். அதுவும் ஒரு நிலையில் இயலாது போக, அந்நிலையிலேயே அசைவற்று இருக்கின்றார்.
*
கயிலை முதல்வர் 'சுவாமிகளைக் கொண்டு மேலும் சில தேவாரப் பனுவல்களைப் பாடுவிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்த காரணத்தால், அடிகளை இதற்கு மேல் கயிலையை நெருங்க அருளாதவராய்', குளம் ஒன்றினைத் தோற்றுவித்து, முனிஒருவரின் உருவில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றார்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 361)
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்(கு) அருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்றுடன்கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமரோர் முனிவராம் படியால்
*
முனிவரான முதல்வர் 'திருக்கயிலையை அடைவது அரிது' என்று எடுத்துரைத்தும், அப்பர் அடிகள் உளஉறுதியோடு 'திருக்கயிலை நாதரைத் தரிசிக்காமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதிபடப் புகல்கின்றார்.
*
இறைவர் திருவுருவம் மறைத்து அசரீரியாய் 'ஓங்கு நாவுக்கரசனே எழுக' என்றருள் புரிய, தாண்டக வேந்தர் ஒளிமிகு தேகநலம் பெற்றெழுகின்றார்,
-
பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 367)
ஆங்கு மற்றவர் துணிவறிந்(து) அவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திர் என்றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டெழுந்(து) ஒளி திகழ்வார்
*
அடிகள் அகம் குழைந்துருகி, 'அண்ணலே, விண்மிசை மறைந்து அருள் புரிகின்ற முதல்வா, உன் கயிலைக் கோலத்தினை காட்டியருள் புரிவாய் ஐயனே' என்று பணிய, இறைவரும் 'இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாறில் நமது கயிலைக் கோலம் காண்பாய்' என்றருளிச் செய்கின்றார்.
*
சுவாமிகள் கண்ணருவி பாய உச்சி கூப்பிய கையினராய் 'வேற்றாகி விண்ணாகி' என்ற போற்றித் திருத்தாண்டகத்தால் கயிலைப் பரம்பொருளைத் தொழுதேத்திப் பின்னர் திருஐந்தெழுத்தை உள்ளத்து இருத்தியவாறே அப்பொய்கையுள் மூழ்குகின்றார்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 370)
ஏற்றினார்அருள் தலைமிசைக் கொண்டெழுந்(து) இறைஞ்சி
வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்தோதிப்
பால்தடம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்
-
(குறிப்பு: திருக்கயிலைக்கான மற்ற இரு போற்றித் திருத்தாண்டகங்களைத் திருவையாறில் கயிலைக்கோல தரிசன சமயத்தில் சுவாமிகள் பாடியதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார்)
No comments:
Post a Comment