Tuesday, April 4, 2023

சிவபெருமானின் வாகனமானநந்திதேவர் என்ற நந்திகேஸ்வரர் வரலாறு:

ஹரிஓம் தத்சத்

சிவபெருமானின் வாகனமான
நந்திதேவர் என்ற நந்திகேஸ்வரர் வரலாறு:

நந்திகேசுவரனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.

சிவபெருமான் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை-பாதுகாக்கும் தெய்வம் ஆகும். இவர் வழக்கமாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கருதப்படுகிறார்; அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.

 ஏறக்குறைய அனைத்து சிவாலயங்களிலும், சிவன் சன்னதிக்கு முன்பு நந்தியின் சிலை இருக்கும். நந்தி வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது.
நந்தி ஷிலாதா முனிவரின் மகன். சிவபெருமான் மீது கடும் தவம் செய்து நந்தியை தனது மகனாகப் பெற்றார் ஷிலாதா. சிவபெருமானின் அருளால், ஷிலாதா செய்த யாகத்தில் நந்தி பிறந்தார். நந்தி சிவபெருமானின் தீவிர பக்தர் மற்றும் அவர் கடுமையான தவம் செய்தார், மேலும் அவரது மலை மற்றும் கைலாசத்தின் தெய்வீக வாயில் காவலராக ஆனார்.

நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...’ என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும்.

செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்”
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தான் என்பது தெளிவாகின்றது.

சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

சிவபெருமான் நாட்டியக் கலையை பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க.. அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்ததாக அபிநய தர்ப்பணம் என்ற பரத நாட்டிய நூல் கூறுகிறது.

திருமூலருக்கு குருவாக இருந்த நந்தி பெருமான்தான், ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தர்மதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறினாள். அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் – ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால், நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார்.

சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்பவே அவ்வாறு உள்ளது.

சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.

சிவபெருமான் நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.

சிவன் கோயில்களில் உள்ள ஐந்து நந்திகள்:

சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் ஐந்து நந்திகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அவை பின்வருமாறு...

#கைலாய_நந்தி: 

இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.

அவதார நந்தி: 

அவதார நந்தி என்பது சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி: 

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக காணலாம். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

சாதாரண நந்தி: 

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

மஹா (பெரிய) நந்தி: 

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும் காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

புராண வரலாறு:

சிவன் மற்றும் நந்தியின் வழிபாட்டை சிந்து பள்ளத்தாக்கு நாகரிக காலத்தில் கூட காணமுடிகிறது. இங்கு புகழ்பெற்ற 'பசுபதி நாதர்' அமர்ந்திருக்கும் உருவ முத்திரை உள்ளது. இது பொதுவாக சிவன் என்று அடையாளம் காணப்படுகிறது. மேலும் மொகெஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் பல காளை முத்திரைகள் காணப்பட்டன. இதனால் நந்தி வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகள்
 நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்களின் முடிவுக்கு வழிவகுத்தது.

நந்தி ஷிலதா முனிவரின் மகன் என்று வருணிக்கப்படுகிறார். ஷிலாதா ஒரு வரம் பெற கடுமையான தவத்திற்கு உள்ளானார். அதனால், அழியாத மற்றும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கொண்ட ஒரு குழந்தை நந்தியை அவரது மகனாகப் பெற்றார். நந்தி, ஷிலதா செய்த வேள்வி மூலமாகவும் தோன்றினார் என்றும் கருதப்படுகிறது. அவர் பிறந்த போது அவரது உடலில், வைரங்களால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்திருந்தார் என்ற கருத்து நிலவுகிறது.
நந்தி தேவர், சிவபெருமானின் தீவிர பக்தராக வளர்ந்தார். அவர் கடுமையாக தவம் செய்து, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள திரிப்பூர் தீர்த்த க்ஷேத்ரா அருகே நர்மதா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இன்றைய நந்திகேஸ்வர் கோவிலில் நுழைவாயில் காவலராகவும், சிவ பெருமானின் முக்கிய சீடராகவும் இருக்கும்படியான நிலையை அடைந்தார் என்பது வரலாறாக உள்ளது.

சிவன் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். அவர்கள் சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோக முனி போன்றோர் ஆவார்கள். இந்த அறிவைப் பரப்புவதற்காக இந்த எட்டு சீடர்களும் நந்தி தேவரால், உலகின் எட்டு வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

#பிரதோஷம்:

பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

#அதிகார_நந்தி:

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்
தொகு
கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, விஷ்ணு, கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

தன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு, சிவனிடம் வேண்ட, நந்தியிடம், கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார் என்பது வரலாறாக உள்ளது.

ஐந்து மிகப்பெரிய நந்திகள்:

பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன.

இந்தியாவில், புகழ்பெற்ற நந்திகள் ஏராளம் குறிப்பாக, தென்னிந்தியாவில் நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு. சிவபெருமான் ஆலயங்கள் என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும்.

இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய நந்தி சிலைகளைப் பற்றி இங்கு காண்போம்.

1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.

2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி.

ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகவும் இது அறியப்படுகிறது. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.

3. சாமுண்டி மலை, மைசூர்

மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.

4. பசவனகுடி பெங்களூர்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் நந்தி சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.

5.ஹோய்சாலேஸ்வரர் கோவில்

ஹலேபீடு ஹோய்சாலேஸ்வரர் கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. இந்தக் கோயிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.

#நந்தி_பற்றிய சில தகவல்கள்:

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
மதுரை ஆவணி மூல வீதியில் “மாக்காளை” எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை “நந்திமுக தரிசனம்” என்கிறார்கள்.
மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு நான்கு மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்று பிரார்த்திக்க வேண்டும்.
நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
தர்மம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது.

சிவ தரிசனத்திற்காக விலகிய நந்திகள்:

நந்தனாருக்காக விலகிய நந்தி - திருப்புன்கூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் நந்தனாரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் அவர் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். நந்தனார் சிவபெருமானை வேண்டிட, தாம் இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தாராம் நந்திகேஸ்வரன். இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி, சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.

ஞானசம்பந்தருக்காக விலகியிருக்கும் நந்திகள் - பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி சிவாலயங்களில் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் நந்தி சற்று நகர்ந்தே இருக்கும்.

நந்திகேஸ்வரரின் 
வேறு பெயர்கள்: 

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் என பல்வேறு பெயர்கள் உண்டு.

நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

மூன்று முறை பிரதட்சணம் செய்தால் - இஷ்டசித்தி
ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் - ஜெயம்
ஏழு முறை பிரதட்சணம் செய்தால் - சற்குணங்கள்
ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் - புத்திரப் பிராப்தம்
பதினோரு முறை பிரதட்சணம் செய்தால் - ஆயுள் விருத்தி
பதிமூன்று முறை பிரதட்சணம் செய்தால் - பிரார்த்தனை சித்தி
பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் - தனப்பிராப்தி
பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் - தன விருத்தி
நூற்றெட்டு முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாக பலன்

நந்தி காயத்ரி மந்திரம்:

ஓம் தத் புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்

பொருள்:
பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை நித்தமும் வணங்குவதன் பலனாக என்னை காத்து என் மனதை தூய்மை படுத்த வேண்டுகிறேன்.

நந்திகேஸ்வரர் துதி:

நந்திஎம் பெருமான் தன்னை நாள் தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும் புகழ் கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!

நந்தி பகவானை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார். சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்.

நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து வழிபட்டால் நோய்கள் மற்றும் வறுமை நீங்கும். பிள்ளை பேரில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகள் பெறுவார்கள்.

கோயில்களில் நந்தியை தரிசிக்காமல் சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும். அதேபோல பரமேஸ்வரனிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திகேஸ்வரரிடம் வைத்தால் போதும். அவர் அதை சிவபெருமானிடம் சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்திகேசுவரனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

ஆத்ம நமஸ்கார்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...