மரண பயத்தை நீக்கும் ரமண மகரிஷி தவமிருந்த பாதாள லிங்கம்...!
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும்.
ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த தலத்திற்கு உள்ளதால் இந்த தலம் உள்ள மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள். சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற திருத்தலமாகும்.
ஜோதி வடிவமாக சிவபெருமான் திருவண்ணாமலையில் எழுந்தருளியதால் ஆண்டுதோறும் ஜோதி 'உரு’ மலையாக எழுந்தருளிய திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, தீபத்திருவிழா போன்ற முக்கிய நாட்களில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஞானிகளும் துறவிகளும்:
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார். அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலானோரை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.
இப்புகழ்மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்திருக்கிறது பாதாள லிங்கம். இந்த சன்னதியில் பாதாள லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சிறிய அளவிலான படியிறங்கி சென்று பாதாள லிங்கேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.
ஞானதேடலுடன் திருவண்ணாமலை வந்தார் ரமணர் மகரிஷி. மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது கோயிலில் உள்ள பாதாள லிங்கம் சன்னதிக்கு சென்றார்.
அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட்டார். பின்னர் சிவன் அருளால் முக்தி பெற்றார்.
கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. திருநேர் அண்ணாமலையாரையும், பாதாள லிங்கேஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால் மரண பயத்தை நீக்கி, மன நிறைவை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment