கேள்வி; ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம எப்படி கூறலாம் சாமி ?
பதில் - ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள். யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தால பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்குமமாகிவிடுகிறது. பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.
மந்திரம் சூக்குமம் ஆகும் போது மாத்திரை குறைந்து விடுகிறது. உச்சரிப்பதற்கு எளிதாகி விடுகிறது. பிராணாயாமம் பயிலும் போது குரு சாதகனுக்கு ஏற்றவாறு இந்த மந்திரங்களை மாற்றித் தருவார். எந்தெந்த சாதகனுக்கு எத்தகைய பிராணாயாமம், அதற்கேற்ற மந்திரங்கள் எது என்பதை குருவே தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பக்தியில் திளைத்திருப்பவர்கள் ஓம்நமசிவாய என்ற மந்திரத்தை வேண்டியவாறு உச்சரிக்கலாம். ''நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாய'' என்ற வரிகளுக்கிணங்க பஞ்சாட்சரத்தை எவ்வாறு வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். பக்தி என்ற விஷயத்தைப் பொறுத்தவரை இல்லறத்தான் என்றோ, துறவரத்தான் என்றோ பாகுபாடு ஏதும் இல்லை. குருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.
No comments:
Post a Comment