Friday, July 14, 2023

சிவனை அறிவோம்...!வரகுண பாண்டியனின் உயர்ந்த சிவ பக்தி...!

சிவனை அறிவோம்...!
வரகுண பாண்டியனின் உயர்ந்த சிவ பக்தி...!
அரசரும் அரசியும் வீற்றிருக்க, அந்தக் கோயில் மண்டபத்தில் ஓர் அழகிய, பதியிலார் மனைப் பெண் தேவாரப் பண்ணுக்குப் பதம் படித்து அற்புதமாக நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.  

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசர், ஓர் அருமையான ஜதியில் மெய் சிலிர்த்துப் போய், ‘‘ஹா! ஆஹா! அதி உன்னதம்,’’ என வாய் விட்டுப் பாராட்டி கை தட்டுகிறார்.

அங்கே மண்டபத்தில் கூடியிருந்த பக்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘‘தெய்வ கைங்கர்யத்திற்கே தன்னை அர்ப்பணித்த அடியாளாகிய பதியிலார் மனைப் பெண் பரதம் ஆடினால் இத்தனை ரசிக்கின்ற நீ, உன் மனையாளாகிய அரசியை இதேபோன்று இக்கோயில் ஒன்றிலே ஆட விடுவாயா? அரன் தொண்டே இனி அரசி தொண்டு என்று உன்னால் அறிவிக்க இயலுமா?’’ என ஒலிக்கிறது. கூட்டத்தில் ஒரே பரபரப்பு.

‘‘யார்… யார் இப்படி அநாகரிக  வினாக்கணை தொடுத்தது?’
ஆலய அதிகாரிகள் ஆவேசம் கொள்கின்றனர். பக்தர் கூட்டத்தில் பதற்றம் பரவுகிறது. ‘‘நான் இல்லை… நீ இல்லை… அவர் இல்லை. 

அதோ அந்தப் பக்கம் இருந்துதான் குரல் எழுந்தது. இதோ இப்போதுதான் ஒரு பரதேசி கையில் திருவோட்டுடன் மெல்ல நழுவினான். 

அவனாகத்தான் இருக்கும்…’’ ஆளாளுக்கு ஏதேதோ பேச, ஒவ்வொருவரும் தங்களை நிரபராதி என நிரூபிக்க முயல, ‘பிராகாரம் முழுக்கத் தேடியும் நழுவிய ஆள் அகப்படவில்லை…’ என்று அதற்கு ஒரு மாயா சமாதானம் கற்பிக்க முயல, நொடிக்குள் ஏகப்பட்ட களேபரம்….

‘‘அமைதி… அமைதி…’’ என்ற கம்பீரக் குரல் கேட்டு, அனைவர் தலைகளும் கவனமும் திரும்புகின்றன. அங்கே அரசர் எழுந்து நின்று, ‘‘பக்த மகா ஜனங்களே, அக்குரல் எழுப்பியது யார் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை. 

அதை நான் ஈசன் கட்டளையாக ஏற்கிறேன். இன்று… இக்கணம் முதல் என் மனைவி இத்திருவிடைமருதூர், மகாலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் அடிமை; 

இனி அவள் அரசியல்ல. இந்த ஆலய மண்டபத்திலேயே அவள் பக்தர்களை மகிழ்விக்க ஆடலாம்; தேவாரப்பண் பாடலாம். இதர தேவரடியார் பெண்கள் தங்கியிருக்கும் பதிவிலார் மனை வளாகத்திலேயே அவள் தங்குவாள்.

அதிகாலையில் எழுந்து வந்து, இறைவன்-இறைவி சந்நதிகளை நீர் தெளித்துக் கூட்டிப் பெருக்கிக் கோலமிடுவாள். 
மலர்கள் பறித்து, மாலை கட்டித் தருவாள். ஆலயம் அளிக்கும் நிவேதனம் பட்டை சாதம்தான் இனி அவள் உணவு’’ எனக் கூறிவிட்டு, எதுவுமே நடவாதது போன்று அமைதியாக நடந்து சென்று விட்டார்.

அரசியாரும் இதை ஏற்பது போன்று மௌனம் சாதித்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ குன்றவில்லை. அரசர் செல்லும் திசை நோக்கி, இருகரம் கூப்பித் தொழுதபடி இருந்தார்.

கூட்டத்தினருக்கோ அதிர்ச்சி, ஆச்சர்யம். பிரமிப்பு பிடரி பிடித்து உலுக்கிற்று.
‘‘உலகில் யார் செய்யக்கூடும் இச்செயல்! என்ன அரசர் இவர்… என்ன மனிதர் இவர்! யாரோ ஒரு அநாமதேயம்… எங்கிருந்து பேசுகிறான் என்பதே புலப்படாத உளறல் பேச்சுக்கு இவர் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? கட்டிய மனைவியை அதுவும் பட்டத்தரசியைப் போய் தேவரடியார் பெண்களில் ஒருத்தியாக்குவதா? அநீதி… அடுக்கவே அடுக்காது இச்செயல்…!’’ என்று வாய்விட்டே குமுறினர் பலரும். 

அவர்கள், வரகுண பாண்டியனின் உன்னத உள்ளம், உயரிய சிவபக்தி பற்றி ஏதும் அறியாதவர்கள்.

மணிவாசகப் பெருமானுக்கு அவருடைய அதியற்புத சிவபக்தியை அறியாத நிலையில், தாம் பெருந்தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணி, நெடு நாட்கள் உளம் நலிந்து கிடந்தார்,
பாண்டிய மன்னர் வரகுணர்.

இந்த சமயத்தில்தான் ஒருநாள் அவர், வைகைக் கரை வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பும் அந்தி வேளையில், ஒரு வன்னி மரத்தினடியில் சோர்வுடன் சரிந்து கிடந்த கிழ வேதியன் மீது புரவி ஏறி மிதிக்கக் காரணமாய் இருந்து விட்டார். 

அவர் அறியாது நிகழ்ந்த செயல்தான் அது. புரவியின் கால்கள் அந்த வயது முதிர்ந்த வேதியனின் உடலில் படக் கூடாத இடத்தில் வேகமாகப் பதிந்து விட்டதால், பயங்கர அலறல் எழுப்பி, அரை நொடியில் உயிரை விட்டு விட்டார் அவர்.

புரவியிலிருந்து கீழே குதித்த வரகுண பாண்டியர், நெற்றி, மார்பு, புஜங்களில் விபூதிக் கீற்றுகள் ஒளிர, ஆவி துறந்து கிடந்த அம்முதியவரின் உடல் கண்டு துடித்துப் போனார்.

ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து, அவ்வேதியர் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்க ஆணை பிறப்பித்தார். சகலமும் செய்த பிறகும் அரசரின் உள்ளத்தை வேதனை வாட்டியது.

கண்களை எப்போது மூடினாலும், சிவச் சின்னங்களோடு வாய் பிளந்து மல்லாந்து கிடந்த அம்முதியவரின் முகமும் உடலும்தான் தோன்றின. காதுகளில் அவர் எழுப்பிய இறுதி அலறல், உயிரைப் பிடுங்கியெறிவதுபோல் ஒலித்தது.

‘ஏன்… ஏன் இத்தனை சிவ அபசாரம் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது! நானும் என் முன்னோர்கள் காட்டிய வழியில், குறைவற்ற சிவபக்தியோடுதானே இருக்கிறேன்… இருந்தும் ஈசன் உள்ளம் இளகவில்லையே! எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்த மனச்சோர்வே என்னை மாளச் செய்துவிடும் போலிருக்கிறதே!’ என உளம் வெதும்பினார், வரகுணர்.

அன்றிரவு அவர் கனவில், சோம சுந்தரப் பெருமானைப் பூஜிக்கும் அர்ச்சகர் வடிவில் ஈசன் தோன்றி, ‘‘மன்னா, நீ திருவிடைமருதூர் செல்லப் போகிறாய். அங்கு உனைப் பீடித்த பிரம்மஹத்தி விலகும். 

உன் சிவபக்தியை உலகறியும். ஈசன் உனை அங்கேதான் ஆட்கொள்ளப் போகிறார்…’’ என்று உரைத்தார்.

வரகுண பாண்டியர் இதை எப்படி நம்புவது என்று புரியாமல், சந்தேகமும் குழப்பமும் அடைந்தார். காரணம், திருவிடைமருதூர் இருப்பது சோழ தேசத்தில். அங்கே இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன நேரப் போகிறது?

பல்லவ மன்னன் நிருபதுங்கனுக்குப் பின் காஞ்சியில் அரியணை ஏறிய அபராஜிதன், பாண்டியர் நட்பை மதிக்கவில்லை. 

எல்லைப் பிரச்னைகள் எழுந்தன. கங்க மன்னன் பிரதிவீபதியின் துணையுடன் படை திரட்டுகிறான். பாண்டியரை வெல்ல என்று செய்தி. விஜயாலய சோழன் புதல்வன் ஆதித்தனும் இதில் கூட்டு சேருகிறானாம். 

சோழர் எழுச்சியை ஆரம்பத்திலேயே ஒரு தட்டு தட்டி வைக்க வேண்டும் என்றனர் பாண்டிய நாட்டின் அரசியல் ஆலோசகர்கள்.

துவங்கியது போர். பாண்டிய சைன்யம் சூறாவளியெனத் தாக்கிற்று, சோழ பூமியை.  குடமூக்கை முட மூக்காக்கி, வடகரையின் இடவையில் மையம் கொண்டது போர்ப் புயல்.

வேம்பில் மதிள்களைத் தகர்த்து, வெற்றிப் பதாகையுடன் திருப்புறம்பியத்தில், கங்க மன்னனைக் களத்தில் வென்று, வீழ்த்தியும் ஆயிற்று. 

அப்போது பார்த்தா அப்படியொரு திருப்பம் நிகழ வேண்டும்? பாண்டியர் படை தங்கியிருந்த காவிரிக் கரையில் ஒரு சிவாலயம் தென்பட்டது. மன்னர் அந்த ஊர் பற்றியும் ஆலயம் பற்றியும் விசாரித்தார். 

அதுதான் திருவிடைமருதூர் என்றும் அங்கிருப்பது மத்தியார்ஜுனம் என்று புராணங்கள் போற்றும் மருதவாணர் ஆலயம் என்றும் கூறினர் மக்கள்.

அவ்வளவுதான்… ஈசனின் கனவுக் கட்டளை நினைவில் எழ, பாண்டிய மன்னர் மருத மாணிக்கம் எனப்படும் மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க வந்து அந்த ஆலயத்தில் புகுந்தவர்தான். 

அதன் பிறகு அவரை அந்தத் திருவிடைமருதூரிலிருந்து வெளியேற்ற யாராலும் முடியவில்லை. பாண்டியர் படை மறுநாள் போரில் தோற்றன. திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு விரட்டப்பட்டன.

ஆனால், வரகுண பாண்டியனை என்ன செய்வதென்றுதான் ஆதித்த சோழனுக்குப் புரியவில்லை. அவன் ஒருநாள் பாண்டிய மன்னரை வந்து சந்தித்தான்.

‘‘என்னைச் சிறைப்படுத்த வந்திருக்கிறாயா?’’ என்றார் அவனிடம், வரகுண பாண்டியர்.

ஆதித்த சோழன் நன்றாகவே அறிவான், வரகுணரின் இளவல் பராந்தக பாண்டியன் எவ்வளவு பயங்கரமானவன், பலசாலி என்பதை. மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அண்ணன் இங்கு வந்திருக்கிறான்.

உள்நோக்கம்தான் புரியவில்லை. ‘நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்றெண்ணிக் கொண்டான்.

‘‘தங்களை நான் இப்போது போர்க்களத்திலா சந்திக்கிறேன், அரசியல் பேச? அப்படியும்கூட பாண்டிய மாமன்னரை சிறைப்படுத்துவதாக நான் பகற்கனவு கண்டதில்லை. பக்தியோடு மருதவாணர் ஆலயத்தில் தங்கியிருக்கும் தங்களுக்கு நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்கவே வந்தேன்…’’ என்றான்.

‘‘உதவி! நான் தங்க ஓரிடம் வேண்டும். மதுரையிலிருந்து என் துணைவி இங்கு வந்து தங்க ஒப்புதல் கொடு. மகாலிங்க ஈசனைத் தரிசித்தபடி இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீ தஞ்சையில் கோட்டை கட்டு. உன் ஆட்சியைப் பலப்படுத்து. சோழ தேச அரசியலில் நான் தலையிட மாட்டேன்…’’

ஆதித்த சோழன், அரசியல் நாகரிகம் உணர்ந்தவன். பாண்டிய வேந்தனின் பக்தி உணர்வைப் புரிந்துகொண்டான். வரகுணர் தங்க மாபெரும் மாளிகை ஒன்றினை அளித்தான். பாண்டிமா தேவியாரையும் உரிய மரியாதைகளுடன் அழைத்துவரச் செய்தான்.

பராந்தக பாண்டியன், அண்ணனை மீண்டும் மதுரைக்கு வரவழைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ‘‘தம்பி! இனி நீயே மதுரை மகுடம் சூடி ஆட்சி செய். நான் மருதவாணர் ஆலய சேவையிலேயே நிம்மதி காண்கிறேன்’’ என்று கூறிவிட்டார். 

ஈசன் திருக்கோயிலைப் புதுப்பித்து, பிரமாண்ட மதிற்சுவர் எழுப்பி, புதிய கோபுரமும் அமைத்தார். அது ‘வரகுணபாண்டியன் திருநிலை’ என்றே பெயர் பெற்று விட்டது.

பாண்டியன் தங்கியிருந்த மாளிகையில் புகுந்த திருடன் ஒருவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அவன் நெற்றியில் திருநீறு துலங்குவது கண்ட வரகுணர், தளை நீக்கி அவனை விடுவிக்க உத்தரவிட்டார்,

காவலர்களிடம் வேண்டிய பொருளும் நல்கினார். இரவில் கேட்ட நரிகளின் ஊளை, திருக்குளத்தில் கத்தும் தவளைகளின் ஒலி அனைத்தும் சிவநாம ஜபமாகவே அவருக்குத் தோன்றியதாம். 

வேப்பம்பழம் ஒவ்வொன்றும் சிவலிங்கம்போல் தோன்றியதால் அவை மண்ணில் விழா வண்ணம் பட்டு விதானம் அமைத்தார். தெருவில் திரியும் நாய்கள் நிழலில் படுக்கச்  சில மண்டபங்களை எழுப்பிய கருணாமூர்த்தி அவர்.

பாண்டிமாதேவியையே மருதவாணர் ஆலயப் பணிப்பெண்ணாக்கி, தனிச்சேரிப் பெண்டிருடன் தங்க அனுமதித்தது வரகுணரின் சிவபக்திக்கு உயரிய அத்தாட்சி.

அப்பாண்டிமாதேவியின் சிலை இன்றளவும் திருவிடைமருதூர் மகாலிங்க ஈசன் ஆலயத்தில் உள்ளது

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், ...