நவபுலியூரின் ஏழாம் தலம் அத்திபுலியூர், நாகபட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த அத்திபுலியூர், கடுகை ஆற்றின் வடகரையில் நாகபட்டினத்துக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அந்த ஆலயம்
இங்கே சிவபெருமான் சிதம்பரேஸவரர் என அழைக்கபடுகின்றார், இந்த ஆலயம் காலத்தால் மிக மிக மூத்தது, எவ்வளவுக்கு மூத்தது என்றால் அகத்தியர் காலத்துக்கும் பழமையானது
சத்ய யுகத்தில் ரோமசனாம ரிஷி என்றொருவர் இருந்தார் அவருக்கு கேதரர், பேரளர் என இரு மகன்கள் உண்டு
பாடலிபுத்திரம் அருகே பேராளர் தங்கிவிட, கேதரர் சில சாதுக்களோடு தெற்கு நோக்கி வந்தார்
குருந்தமரம் நிரம்பிய இந்த பக்கம் அவர்கள் வந்தபோது கேதரர் அங்கே தவமிருக்க தொடங்கினார், அப்போது அவர் கண்டெடுத்த லிங்கமே இந்த சுயம்புலிங்கம்
இதனால் இந்த தலத்துக்கு கேதாரம் என்றும் பெயர், தென்னக கேதாரம் என அழைப்பாரும் உண்டு, அந்த சிவனுக்கு கேதாரீஸ்வரர் எனும் பெயரும் உண்டு
இப்படி மிக மிக பழமையான ஆலயம் அகத்தியரால் மீண்டும் அடையாளம் காட்டபட்டது, அகத்திய மாமுனி காலத்தால் மிக தொன்மையானவர், அவர தென்னகத்துக்கு வந்து ஏகபட்ட ஆலயங்களுக்கு அடிதளமிட்டார், பல ஆலயங்களை அடையாளம் காட்டினார்
சுமார் 170க்கும் மேற்பட்ட ஆலயங்கள் அவரால் ஸ்தாபிக்கபட்டன அதற்கு மேல் அடையாளமிட்டு காட்டபட்டன
கேதர முனிவர் கண்டெடுத்து பிரதிர்ஷ்டை செய்த லிங்கத்தை பலகாலம் கழித்து உலகறிய செய்தவர் அகத்திய பெருமான்
அந்த ஆலயத்தில்தான் சிவபெருமான் அகத்தியருக்கு மணக்கோலகாட்சியுடன் சிவன் காட்சியளித்தார், அந்த கல்யாணசுந்தர கோலத்தில்தான் அந்த ஆலயம் இன்றும் விளங்குகின்றது
அப்படி அகத்திய பெருமானால் அடையாளம் பெற்ற இந்த ஆலயம் , மாண்டவிய முனிவரால் இன்னும் பிரசித்தியாயிற்று
மாண்டவிய முனிவர் பிரசித்தியான முனிவர்களில் ஒருவர், அந்த முனிவர் தன்னை அவமானபடுத்திய கேசேரித்துவஜ பாண்டியன் எனும் மன்னனை யானையாக போகும்படி சபித்தார், அப்படியே அவன் யானை வடிவம் அடைந்தான்
அவன் சாபம் தீர இந்த சிவனை வணங்க சொல்லி அனுப்பினார் முனிவர், அந்த யானையும் இந்த தலத்துக்கு வந்து கடுகை ஆற்றின் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து தன் சாபம் தீர்த்தது, சாபம் நீங்கிய மன்னன் மீண்டும் ராஜ்ஜியத்தை அடைந்தான்
அப்படி சாபம் தீர்த்து வைத்த தலம் அது, எவ்வகை சாபம் என்றாலும் இங்கு தீரும்
அத்தி அல்லது ஹஸ்தி என்றால் யானை என்றொரு பொருள் உண்டு, யானை வடிவ பாண்டிய மன்னன் வணங்கிய ஆலயம் என்பதால் இது அத்தி வணங்கிய ஆலயமானது
பின்னாளில் புலிக்கால் முனிவர் வணங்கியதால் புலியூர் என்றானது , அதுவே அத்தி புலியூர் என்றானது
இப்படி தொடங்குகின்றது இந்த ஆலயத்தின் வரலாறு
இன்னும் விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற தவமிருந்த இடம் என்றும், அமிர்த குடத்தின் துளி விழுந்த இடம் என்றும் பெரும் வரலாறு இத்தலத்துக்கு உண்டு
மிக மிக தொன்மையும் மாபெரும் பழமையும் "தட்சன கேதாரம்", "தட்சன கயிலாயம்" என்றெல்லாம் கொண்டாடபடும் அந்த ஆலயமும் அந்த கல்யாணசுந்தரர் கோல சிவனும், சிதம்பரேஸ்வரர் எனும் சுயம்பு லிங்கமும் பெரும் பிரசித்தி
சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை கொண்டாடினார்கள், சம்பந்தபெருமான் இங்கே வந்து வழிபட்டிருக்கின்றார்
இது தேவார வைப்பு தலமாகவும் இருந்திருக்கின்றது, அப்படி வெகு சிறப்பான ஆலயம் இது
இந்த ஆலயம், இந்த தட்சன கேதார ஆலயம்தான் வியாக்ரபாதரரால் வணங்கபட்டது, சிவன் உத்தரவுபடி பதஞ்சலியும் அவரும் வந்து வணங்கினார்கள்
ஆலயத்தின் தீர்த்தம் இன்றும் வியாகரபாதரர் தீர்த்தம் என்றே வழங்கபடுகின்றது
இந்த ஆலயத்தின் பிரசித்தி அல்லது மகா சிறப்பு தெற்கு நோக்கி அமைந்திருப்பது, வேறு எந்த ஆலயமும் இப்படி அமைந்திருந்து யாரும் பார்த்திருக்க முடியாது
ஏன் தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றது என்றால், வடக்கே கேதாரம், கயிலாயம் இருப்பதை சொல்லி அந்த திசை நோக்கி இந்த தட்சன கேதாரத்தில் இருந்து வணங்க வேண்டும், இது அந்த கயிலாய சாயல் ஆலயம் என்பதை சொல்லும் ஆலயம் இது
தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்
கயிலாயத்தை நோக்கி வணங்க வேண்டும் என்பது ஒரு தத்துவமாகவும், தெற்கு என்பது எமதிசை என்பதால் எமனை விரட்டி பலமும் காவலும் ஆரோக்கியமும் சிவன் தருகின்றார் என்பது இன்னொரு தத்துவமாகவும் சொல்லபடுகின்றது
இந்த ஆலயத்தின் சிறப்பு சாபம் தீரும், முன் ஜென்ம வினை அகலும், மிக முக்கியமாக வாழ்விற்கு எதெல்லாம் அவசியமோ அது வழங்கபடும் , வாழ்வில் எது தடையோ அது அகலும்
மணகோலத்தில் சிவன் நிற்பதன் தத்துவம் அதுதான், மணவாழ்வு என்பது ஒருவனின் குடும்ப வாழ்வு பூலோக வாழ்வை குறிப்பது, அந்த வாழ்வுக்கான எல்லா வரங்களையும் அருளும் ஆலயம் இது
நவகிரகங்களில் இது சுக்கிரனின் தலமாகும்
சுக்கிரன் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வாய்பளிக்கும் கிரஹம், உண்மையில் இந்த பூமியில் மனிதன் இன்பம் துய்த்து வாழ்ந்து செல்லத்தான் ஆனந்தமாக வாழ்ந்து செல்லத்தான் வருகின்றான் ஆனால் மாய மயக்கமும் முன் ஜென்ம வினையும் இன்னும் பலவும் அவனை அப்படி இருககவிடுவதில்லை
சுகங்களுக்கு அதிபதி சுக்கிரன், எல்லா வகை சுகங்களும் செல்வாக்கும் தன்பெரும் மரியாதையும் அந்த கிரகத்தின் அருளாலேதான் கிட்டும்
சுக்கிரன் அருள் இருந்தாலே உடல் நலம் முதல் எல்லா நலமும் சேர்ந்து இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பை தரும், இல்லையேல் எல்லாம் இருந்தும் அனுபவிக்கும் யோகம் இராது அல்லது எதுவுமே இராது ஆசைமட்டும் எஞ்சியிருக்கும்
சுக்கிரன் எல்லா இன்பங்களையும் ஆனந்தங்களையும் அனுபவித்து கடக்கும் பெரும் யோகம் அருள்வார்
சுக்கிரன் கலை உணர்வின் அதிபதி, அறிவுக்கும் ஞானத்துக்கும் புதனும் குருவுமே காரஹர்கள் என்றாலும் கலைவடிவத்துக்கும் ரசனைக்கும் சுக்கிரனே காரணகர்த்தா
சுக்கிரன் அருள் இருந்தால் தனி கலை உணர்ச்சி பெருகும், அது அவர்களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கும், பெரும் ஈர்ப்பும் செல்வாக்கும் கூட்டமும் சேர்த்து கொடுக்கும்
புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் சுக்கிரனின் பரிபூரண அனுக்கிரஹம் இருப்பதை உணரமுடியும்
அதே கூர்மையினை பலருக்கு பொருளீட்டும் அறிவுக்கும் கொடுப்பார் சுக்கிரபகவான், இதனாலேதான் அந்த தொழிலதிபர்களிடம் தனிபெரும் அறிவும் ஈர்ப்பும் இருப்பதை காணலாம்
சுக்கிரன் அருள் இருந்தாலே பலரை ஈர்க்கமுடியும், பலரை வசபடுத்த முடியும், சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வெற்றிபெற வைக்க முடியும்
அதனாலேதான் பூலோக லவுகீக வாழ்வில் சுக்கிரனின் அருள் அவசியம், அது இன்றி மானிட வாழ்வு பூர்த்தியாவதில்லை
வாழ்வில் மிக மிக முக்கிய விஷயம் நல்ல துணை அமைவது, அந்த துணையினை அருள்வது சுக்கிர பகவான்
சுக்கிரனின் அருளாலே நல்ல துணை அமையும், அந்த அருள் மிக மிக முக்கியம்.
இதனாலேதான் சிவன் மணக்கோலத்தில் இந்த ஆலயத்தில் காட்சியளிக்கின்றார், அந்த வரம் இங்கே அருளபடும் என்பதை சொல்கின்றார்
சுக்கிரன் எனும் கிரகமே ஒருவனுக்கு நல்ல சுகங்களை வழங்கும், சுகங்களை நிம்மதியாக தடையின்றி அனுபவிக்கும் வரத்தை அருளும்
நல்ல சூழலை குடும்பம் முதல் தொழில் வரை அதுதான் அருளும்
ஒவ்வொருவர் கர்மாவின் மூலம் என்ன என்பதையும் எது ஒருவனின் பலம் மற்றும் பலவீனம் என்பதையும் சரியாக அடையாளம் காட்டி தருவதும் சுக்கிரனே
வாழ்வில் ரசனை, மகிழ்ச்சி , ஆனந்தம், சுகம், தனவரவு என எல்லாவற்றுக்கும் சுக்கிரபகவானின் தனி அருள்தான் மூலதனம், சுக்கிரன் சரியாக அமையாத அல்லது அதற்கு பரிகாரம் செய்யாத வாழ்வு சிறக்காது
எவ்வளவுக்கு சுக்கிரன் பலமோ அவ்வளவுக்கு ஆபத்தும் அதிகம்
மழை இல்லாவிட்டாலும் சிக்கல் பெரிதாக பெய்து வெள்ளமாக வந்து அடித்து சென்றாலும் சிக்கல் என்பது போல, நெருப்பு இல்லாவிட்டால் குளிர் அதிக நெருப்பு கடும் வெப்பம் என்பது போல சுக்கிரன் அருளும் ஒரு கட்டுபாட்டுக்குள் இருந்தாக வேண்டும்
இல்லையேல் அது மனிதனை வீழ்ச்சிக்கு இழுத்து செல்லும்
இதனால் சுக்கிரன் அருள் இல்லாவிட்டாலும் அதிகமாக இருந்தாலும் மூல தெய்வமான சிவபெருமானை சரணடைதல் நன்று, அவரை வழிபட்டு நிற்றல் சால சிறந்தது
அதைத்தான் இந்த ஆலய தத்துவம் சொல்கின்றது
புதிய புதிய சிந்தனைகள், காலத்துக்கு ஏற்ற சிந்தனைகள், எல்லோரும் ஏற்கும் ரசனைகள், ஈர்ப்பான விஷயங்கள் அது கலையோ தொழிலோ எதுவோ என்றாலும் அந்த சிந்தனைகளை கொடுத்து நல்ல பலன்களை கொடுப்பது சுக்கிரபகவானே
இந்த பூமியில் வாழ சில விஷயங்கள் அவசியம், மானுடன் தனித்து சிந்திக்க வேண்டும் தன்னை நிலை நிறுத்த வேண்டும், தன்னால் பிறருக்கு பயன்படும்படி வாழவேண்டும்
யார் ஏராளமான மக்களுக்கு பயனுள்ள காரியங்களை ஏதோ ஒரு வகையில் செய்கின்றானோ, ஏராளமான மக்களால் கவனிக்கபட்டு ஈர்க்கபட்டு கொண்டாடபடுவானோ அவன் தனிவெற்றி பெறுவான்
அந்த சக்தியினை ஆற்றலை வழங்குபவர் சுக்கிரன்
நல்ல குடும்ப சூழலை, நல்ல வாய்ப்பை வசதிகளை நிம்மதியினை ஆனந்தத்தை தருபவரும் அவரே
போகத்துகுரியவன் என அவரை எளிதில் தள்ளிவிட முடியாது, சுக்கிரன் என்றால் உற்சாகம், சுக்கிரன் என்றால் விடாத உழைப்பு, சுக்கிரன் என்றால் புதிய புதிய சிந்தனை, சுக்கிரன் என்றால் எல்லாவற்றையும் நிறைவாக கடந்து செல்ல உதவும் நிலை
வாழ்வின் முடிவில் தன் ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பிபார்க்கும் மனிதன் எல்லாம் நிறைவாய் உணர்ந்தான் என்றால் அதுதான் சுக்கிரனின் ஆசி
ஒருவன் முழுமையான வாழ்வு வாழ சுக்கிரனின் அருள் மிக அவசியம்
இந்த முழுமைதான் இந்த நிறைவுதான் வாழ்வின் அடுத்தகட்டத்தில் இறைவனை நோக்கி மனதை திருப்ப சொல்லும், அந்த நிறைவுதான் கடைசியில் இறை ஞானத்துக்கு சாவியாகி வாசலை திறக்கும்
எதையும் அனுபவிக்காமல் எல்லாவற்றின் மேல் ஏக்கம் கொண்டிருப்பவனுக்கு ஞானம் வாய்க்காது, அப்படியே மனதை அடக்கி ஞானத்தை தொடமுயன்றாலும் இறைவனை அறிய முயன்றாலும் அடக்கி வைத்த ஆசைகள் பிரமாண்டமாய் எழுந்து மிரட்டி வீழ்த்தும்
பலர் பாதியிலிலே திசைமாறி செல்வது இப்படித்தான்
அவித்த நெல் முளைக்காது என்பதுபோல் ஆசைதீர அனுபவித்துவிட்டபின் அந்த எண்ணம் எழாது வெறுமையே மிஞ்சும்
இதனாலே எல்லாம் அனுபவித்து கடந்தபின் வரும் ஞானம் நிலைக்கும், கெட்டபின்பு ஞானி என்பது அதனாலேதான்
பட்டினத்தாரும், பத்ருஹரியாரும் அதற்கு பெரும் சான்றுகளாய் நின்றார்கள், ரிஷிமூலம் பார்க்காதே என இந்துக்கள் சொன்னதன் காரணமும் அதுவே
ஆம், சுக்கிரன் வாழ்வினை மகிழ்வாய் ரசனையாய் நிறைவாய் ஆனந்தமாய் சுகமாய் வாழசெய்யும் கிரஹம், அதன் பலன் மிக அவசியம்
நிறைவான வாழ்வே பின் நிலையான ஞானத்தையும் வீட்டுபேற்றையும் கொடுக்கும்
அந்த சுக்கிரனின் அருள் ஒவ்வொருருக்கும் அவசியம், அதை தருவதற்குத்தான் திருஅத்திபுலியூர் ஆலயம் காத்துகொண்டிருக்கின்றது
உங்கள் ஜாகதகத்திலோ இல்லை வாழ்வின் விதி அமைப்பிலோ சுக்கிரனின் சம்பத்து சரியாய் நிறைவாய் முழுமையாய் அமைய அங்கு வழிபட்டால் நல்லது
பாண்டிய மன்னன் சாபம் தீர்த்து விலங்கு நிலையில் இருந்து இழந்த ராஜபோகத்தை மீட்டது போல நீங்களும் இழந்த ஆனந்த நிலையினை அடைவீர்கள்
ஆத்மா ஆனந்தமானது ஆனால் மாயைகளினால் அது அலைகழிக்கபட்டு தன் மகிழ்ச்சியினை இழந்து தவிக்கின்றது
அதை மீட்டெடுத்தவர்கள் ரிஷிகள், அந்த மயக்கத்தில் சிக்காமல் இருப்பவர்கள் குழந்தைகள். இந்த இருவரிடமும் அந்த ஆத்மத்தின் தெயவீக முழுமையினை உற்சாகத்தை காணமுடியும்
சுக்கிரனின் பலம் உங்களுக்கு வாய்த்தால் அது கொடுக்கும் நிறைவால் காலத்தால் இதே கனிந்த உற்சாகத்தை, முழுமையான உற்சாகத்தை எல்லாம் கடந்து வந்த உற்சாகத்தை ஞானத்தை நீங்களும் பெறமுடியும்
கர்மம் ஆற்றவும், காரியம் முடிக்கவும், கடமையினை செய்து வந்தவேலையினை நிறைவாய் செய்யவும் சுக்கிரனின் பலம் அவசியம்
இதனை மகாபாரத காட்சியில் சொன்னவன் அர்ஜூனன், அவனுக்கு சுக்கிரபலம் இருந்தது தொட்டதெல்லாம் துலங்கியது அந்த நிறைவில் கடைசியில் கீதை கேட்டு ஞானியாகி கடைசியில் ஆட்சியினை விடுத்து இமாலயம் செல்லும் அளவு அவனுக்கு நிறைவு வந்தது
இதுதான் சுக்கிரனின் பூரண பலம், இதுதான் பட்டினத்தார் வாழ்விலும் நடந்தது இன்னும் பல ஞானியர் வாழ்விலும் நடந்தது
சுக்கிரன் உங்களுக்கு நீங்கள் யாரென புரிய வைப்பார், எதற்காக படைக்கபட்டீர்கள், கர்மா என்ன கடமை என்ன? அதை செய்ய என்ன வழி, செய்யும் நோக்கமென்ன என எல்லாமும் புரியவைத்து வழிநடத்துவார்
இந்த ஆலயம் சுக்கிரனின் தனி அருளை தரும் ஆலயம், சிவபெருமான் சன்னதியில் அந்த கல்யான சுந்தரர் கோலத்தில் , வாழ்வு தொடங்கும் அந்த கோலத்தில் நின்று சிவன் உங்களுக்கும் பெரும் அதிசயங்களை செய்வார்
கல்யாண சுந்தரர் கோலம் என்பது சுக்கிரனின் இன்னொரு அம்சத்தை தன்மையினை போதிக்கும் கோலம்
இந்துமதம் பெண்களுக்கு தனி இடம் கொடுத்தமதம், பெண்களை கொண்டாட சொன்ன மதம், பெண்களை போற்றி பெரும் இடத்தில் வைக்க சொன்னமதம்
பெண்ணே இயங்கு சக்தி, என்பதால் எதெல்லாம் இயக்குமோ எதெல்லாம் உருவாக்குமோ அதற்கெல்லாம் பிரபஞ்சம் முதல் நீர், மண் என எல்லாவற்றுக்கும் பெண் பெயரை இட்ட மதம் இந்துமதம்
இயக்கு சக்தியினை பெண் என கொண்டாடிய மதம் இந்துமதம், அந்த ஞானமதம் எங்கும் நிம்மதியும் மகிழ்வும் சந்தோஷமும் பெருக, தனிபெரும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைவும் அமைதியும் சூழ பெண்களை நன்முறையில் நடத்துதல் அவசியம் , அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருந்தல் அவசியம் என்பதை சொன்னது
இந்துமதம் அப்படித்தான் பெண்ணை வைத்திருந்தது, ஆண் ஞானமடைய ஆயிரம் வழிகளை சிரமங்களை சொன்ன இந்துமதம் பெண் தன் கணவனை போற்றினால் போதும் எனும் ஒரே வரியில் அறிவுரை சொன்னது
அதன் பொருள் போற்றபடும்படி கணவன் தன் மனைவியினை நடத்தவேண்டும் என்பது
அக்கால இந்துஸ்தானில் பெண்கள் கொண்டாடபட்டனர், கோவிலும் இலக்கியமும் அக்கால சமூகமுகம் பண்டிகையும் அதனை காட்டுகின்றன
ஆனால் அந்நியபடையெடுப்பின் குழப்பங்களில் எல்லாம் மாறிற்று, அதே நேரம் இன்றும் உலகின் முன்னணி நாடுகளை செழுமையான நிறைவான நிம்மதியான நாடுகளை பாருங்கள், அங்கே பெண்கள் மகிழ்வோடும் முழு உரிமையோடும் நடத்தபடுவதை காணமுடியும்
இதுதான் பிரபஞ்ச சக்தி
இதன் பொருள் என்னவென்றால் பெண்கள் மதிக்கபடுமிடம் சுக்கிரனின் அருள் பிரதானமாகும் என்பது, இதனாலே சுக்கிரனின் அருள் பெற்ற கலைஞர்கள், கலையில் கரை கண்டவர்கள், இதர தனி திறமையால் வென்றவர்கள், ஏன் அதிசயிக்கதக்க விஞ்ஞானிகளிடம் கூட பெண்கள் மேல் ஒரு பரிவினை காணமுடியும்
அது மயக்கம் என பல இடங்களில் சொல்லபட்டாலும் உண்மையில் அதன் பெயர் பரிவு
இந்த பரிவு இருக்குமிடத்தில் சுக்கிரனின் அருள் தானாக துலங்கும், எல்லா நிறைவும் ஆனந்தமும் அங்கு வாய்க்கும்
இதைத்தான் தன் துணைவியான பார்வதியோடு நின்றபடி கல்யாண கோலத்தில் நின்றபடி கல்யாணா சுந்தரபெருமானாக போதிக்கின்றார் சிவபெருமான்
இந்த தத்துவ போதனையினை எல்லோருக்கும் தெரிவிக்கும் பொருட்டு எல்லா மக்களும் வந்து சுக்கிர பலம் பெற்று செல்லும்பொருட்டே கேதார முனிவர், அகத்தியர், மண்டவி முனி, புலிக்கால் முனிவர் என எல்லோரையும் அழைத்து நிறைவும் முழுமையும் கொடுத்து நிறைவாய் மகிழ்வாய் அனுப்பிவைத்தார்
அந்த முழுமை, அந்த நிறைவு, அந்த ஏகாந்த ஆனந்தம் உங்களுக்கும் கிடைக்கும், அங்கே சுக்கிரனின் அருள் , அந்த சுக்கிர தன்மை பரிபூரணமாகும்
அத்திபுலியூர் சென்று வணங்குங்கள், சுக்கிர தன்மை சுக்கிர அம்சம் குறைபாடால் இதுவரை அரைகுறையாக ஏதோ பெயருக்கு உருவற்று இருந்த உங்கள் வாழ்வு , கவலையும் கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்த வாழ்வு அப்படியே மாறும்
ஆனந்தமும் மகிழ்வும், சரியான உணர்வும் தெளிவும் செய்யவேண்டிய காரியமும் கடமையும் கர்மமும் அதற்கான பாதையும் உங்களுக்கு சரியாக தெரியும்
அதன் பின் நீங்க்ள் தொட்டதெல்லாம் துலங்கும், உங்கள் வாழ்வே மாறும் , முழுமையும் பூரணமும் நிறைவினை நோக்கி அது உங்களை அழைத்து சென்று ஞானத்தின் சாவியினை கொடுக்கும்
கடமைகளும் கர்மாவும் முடிக்க வழிசெய்தபின் முழு ஞானமும் நிம்மதியும் உங்களை தேடிவரும்
மன்னன் இழந்ததை மீட்டான், கேதரர் கர்மாவினை உணர்ந்தர், விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியானார் என எல்லாவற்றையும் கவனியுங்கள்
எல்லோரும் அங்கு முழுமை அடைந்த ரகசியத்தை சொல்லும், அகத்தியரும் சிவனின் மணக்கோலம் கண்டு ஜென்மபுண்ணியம் அடைந்த , முழு நிறைவினை அடைந்த தலம் இது
அந்த வரத்தை பெற உங்கள் வாழ்வை நீங்களே சரிசெய்து கொள்ள தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அந்த சிதம்பரேஸ்வரரை தரிசிக்க அத்திபுலியூர் செல்லுக்கள், வியாக்ரதீர்த்தத்தில் நீராடி கல்யாண சுந்தர கோலத்து சிவனை வணங்கி சுக்கிரனின் பரிபூரண அருளை பெற்று நல்வாழ்வினை தொடங்குங்கள்
ஒருமுறை சென்று தரிசித்துவந்தால் அந்த மகா சிறப்பினை நீங்களே உணர்வீர்கள், வாழ்வு அதன்பின் எப்படி மாறுகின்றது என்பதை உணர்ந்து நவபுலியூர் மகிமைகளையும், புலிக்கால் முனி பதஞ்சலி முனி வழியாக சிவன் காட்டிய அதிசய வழிமுறைகளையும் உணர்ந்து சாட்சியாய் நிற்பீர்கள் இது சத்தியம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment