Sunday, July 9, 2023

திருஇடும்பாவனம் சற்குணநாதர் ஆலயம்

சிவாயநம
நமசிவாய

திருஇடும்பாவனம் சற்குணநாதர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருஇடும்பாவனம் சற்குணநாதர் சுவாமி ஆலயதரிசனம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இருந்து தெற்கே 15 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரி தென்கரை தலங்களில் 108 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 171 வது தலமாகவும் விளங்குகிறது திருஇடும்பாவனம் சிவாலயம்.

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவரது சத்வ குணம் குறைந்தது. இதனால் வருந்திய பிரம்மா பூமியில் பல சிவத்தலங்களுக்கு சென்று தன் குறை நீங்கி சாத்வீக குணம் ஏற்பட வழிபாடு செய்தார். இவரது கவலையை போக்க இறைவன் திருவுளம் கொண்டு இத்தலத்தில் பார்வதி சமேதராக விநாயகர், முருகப்பெருமானுடன் தோன்றி பிரம்மனின் குறை போக்கி அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன் சத்குணநாதர் ஆனார்.

ஒரு முறை திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து மதுரை வரும்போது இத்தலத்திற்கு வந்தார். அச்சமயம் அவரது கண்களுக்கு இத்தலத்திலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே அவர் பயந்து, காலால் நடக்காமல் கால்களை உயரே தூக்கியபடி கைகளால் நடந்து வந்தார் என தலவரலாறு கூறுகிறது.

அகத்தியருக்கு சிவன் திருமண காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. எனவே மூலவருக்கு பின்னால் சிவன் பார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் வாழ்ந்த காலத்தில் பாவங்களால் அரக்கர் வடிவம் பெற்ற தேவசருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து, சற்குணநாதரை வழிபடச் செய்து மோட்சமளித்தார்.

குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும்போது தன் தந்தையின் உருவம் தோன்றி மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியதால் எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபமானது எமன் இத்தலத்தில் பூஜை செய்ததால் நீங்கியது. எமபயம் போக்கும் தலம்.

ஒரே கல்லால் ஆன கஜலட்சுமியும் தெட்சிணாமூர்த்தியும் சனீஸ்வரனும் இத்தலத்தின் சிறப்பாகும். போரில் ராவணனை வெல்ல ராமன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.

வெள்ளை விநாயகர்: கடல்நுரையால் ஆன சித்திபுத்தியுடன் கூடிய வெள்ளைவிநாயகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு பால், பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...