சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரும்,
63 நாயன்மார்களில் ஒருவரான
அவதார தலமானதும், #சுந்தரமூர்த்தி_நாயனாரை மகனாக பெற்ற நாயன்மார்களில் #சடைய_நாயனார் மற்றும்
#இசைஞானி_அம்மையாரின்
முக்தி தலமான ,
#சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
#தேவாரம் மற்றும் #திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான, நாயன்மார்களில் ஒருவரான #நரசிங்கமுனையரைய_நாயனார்
அவதாரம் மற்றும் முக்தி தலமான
#கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருத்தொண்டிஸ்வரமான_ராஜாதித்த_ஈஸ்வரம் என்று அழைக்கப்படும்
#திருநாவலூர் (#திருநாமநல்லூர்)
#பக்தஜனேஸ்வரர்
(#திருநாவலீஸ்வரர்)
#மனோன்மணி_அம்மன்
(#நாவலாம்பிகை) திருக்கோயில் வரலாறு:
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும்.
இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டம்,திருநாவலூரில் அமைந்துள்ளது.
மூலவர்:பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,
அம்மன்:மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி,
தல விருட்சம்:நாவல்மரம்
தீர்த்தம்:கோமுகி தீர்த்தம், கருட நதி
புராண பெயர்:ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர்:திருநாவலூர்
மாவட்டம்: கள்ளக்குறிச்சி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
சுந்தரர், அருணகிரிநாதர்
#தேவாரப்பதிகம்:
அஞ்சுங் கொண்டு ஆடுவார் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் தஞ்சங் கொண்டார் அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங் கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
– சுந்தரர்
#திருநாவலூர் திருப்புகழ்:
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட ...... கணையாலே
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த ...... குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு ...... நிலவே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க ...... வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு ...... மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையே டுத்து
நாகமற விட்ட ...... மயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
சீரணி தனத்தி ...... லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட ...... பெருமாளே
__அருணகிரிநாதர்
தல வரலாறு:
அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது மிகப் பழமையான கோயில் ஆகும்.ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.
இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் “சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் “சஞ்சீவினி’ மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார்.
சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.
தலபெருமை:
பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.
ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனை கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார்.
சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.
சுக்கிரன் வழிபட்ட லிங்கம் :
சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன.
நவகிரகங்களுள் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சியளிக்கிறார்.
பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன.
இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.
#திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம்:
திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களைக் குறிக்கும் விதமாகத் திருத்தொண்டிஸ்வரம் எனப்பட்டது, பின்னாளில் அச்சொல்லுக்கு ஈடான வடமொழியில் பக்தஜனேஸ்வரம் எனப்பட்டது. இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
முதலாம் பராந்தக சோழன் ஆட்சிகாலத்தில் இவனின் மூத்த மைந்தன் இராஜாதித்தன் இக்கோவிலை கற்றளியாக்கியமையால் இவனது பெயரும் இணைந்து திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
#திருக்கோபுரம்:
இக்கோயிற் கோபுரம் கி.பி. 13 நூற்றாண்டை சார்ந்தது.இக்கோபுரமும் திருமண்டபமும் வீழ்ந்துவிட அண்ணமரசர் அவசரம் அலுவலகம் நரசிங்கராய உடையார் கி.பி.1480 இல் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகிறது.
மேலும் கோபுரத்தை சுற்றி நான்குபுறமும் உள்ள மதிலும் திருப்பணி செய்யப்பட்டது. என்று கல்வெட்டு கூறுகிறது.
கோபுரத்தின் மேல் ஐந்து செப்புக்கலசங்கள் சாலைவடிவில் உள்ளது. ஐந்து நிலைமாடம் உடையது. துவார பாலகர் ஐந்து நிலைமாடத்திலும் இருபுறமும் உள்ளனர். சுமார் 80 அடி உயரம் உடையது. இதனையடுத்து உள்ளே பிள்ளையார் சிலையும், பலிபீடமும் துவஜஸ்தம்பமும் உள்ளன. துவஜஸ்தம்பத்தின் முன் நந்தி உள்ளது, இது 4 அடி உயரம் உடையது. இதற்கு முன் சிறு மண்டபம் உள்ளது. இந்நந்தி கி.பி.10 நூற்றாண்டைச் சார்ந்தது.
மூலவர் கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளார். விமானம், முன்மண்டபம், உள்மண்டபம், மகா மண்டபம் உடைய கற்கோவில் ஆகும். கருவரையும், உள் மண்டபமும் முதலில் கட்டப்பட்டு (கற்றளியாக்கப்பட்டது). இதனை கற்றளியாக்கியவர் முதலாம் பராந்தக சோழன் ஆவார். அவரது 28 ஆவது ஆட்சியாண்டில் கி.பி.935 இல் கற்றளியாக்கப்பட்டது இதனை இக்கோயில் கல்வெட்டு மூலம் அறியலாம்.[6] பின்னர் முன் மண்டபம் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மகா மண்டபம் எடுக்கப்பட்டு முன் மண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன் மண்டபம் வரை உள்ள பகுதிகள் முதலாம் பராந்தகன் (கி.பி.10)காலத்தவை. திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
#திருச் சுற்றுமாளிகை:
இத்திருச்சுற்று மாளிகையில் பல்லவர் கால கற்சிலைகள் உள்ளன, முதலில் உள்ளது பெரிய சிவலிங்கம் ஆகும். சுமார் 6 அடி உயரம் உடைய இச்சிவலிங்கத்தை மன்னர் நரசிங்க முனையரையர் வணங்கியதாக தெரிகிறது இதனை ராசா பூசித்த லிங்கம்என்று வழங்குகின்றனர். இதன் பின்னர் உள்ள லிங்கம் அகத்தியர்லிங்கம் ஆகும். இதனையடுத்து 63 நாயன்மார்களின் கற்சிலைகள் வரிசையாக உள்ளது. அடுத்து சப்த மாதர்கள், சிறிய வராகி, வீரபத்ரர் சிற்பங்கள் உள்ளன. இறுதியாக நாக கன்னியும் சூலம் உள்ள கல்லும் உள்ளன.
#பிற கோயில்கள்:
இகோயிலின் உள்ளே பல சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது அவை பிள்ளையார் கோயில், ஆறுமுகத்தோன் கோயில், சண்டேஸ்வரர் கோயில், சுந்தரர் கோயில், மனோன்மனியம்மன் ஆலயம், வரதராசப்பெருமாள் ஆலயம் ஆகியவை மேலும் பல்வேறு பல்லவர்கால கற்சிலைகளும் பல கடவுளர்களின் சிலைகளும் வெளிப்பக்கத்தில் காணப்படுகிறது.
#யானைமுகத்தோன் கோயில்:
கோயிலின் திருச்சுற்று மாளிகையின் மேற்குப்புறத்தில் பிள்ளையாருக்கு கிழக்கு நோக்கி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.பிள்ளையார் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். வலது கையில் அக்கமாலையும் இடது கை ஒன்றில் சங்கும் மற்றிருகைகள் தொடையில் வைதநிலையில் உள்ளார்.சுமார் 4 அடி உயரமுடைய இச்சிலை பல்லவர் கால அமைப்புடையதாய் உள்ளது.
#ஆறுமுகத்தோன் கோயில்:
கருவறையின் பின்புறம் கிழக்கு நோக்கி ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும், மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறுமுகத்தோன் கோயில் உள்ளது.
சண்டேஸ்வரர் ஆலயம்:
மகாமண்டபத்தில் வடக்குபுறம் ஒரு பகுதியை தடுத்து அதில் இவ்வாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாத்துக்குட்டி மாதேவன் என்னும் வாமசிவன் என்பவன் சண்டேஸ்வரர் கற்றளி அமைத்தான் என்றுள்ளது.
சுந்தரர் ஆலயம்:
வெளிச்சுற்றில் கோபுரத்தை அடுத்து, மேற்கு முகமாக அமைந்துள்ளது, இவ்வாலயம், சுந்தரர் தன்னிரு மனைவியர்களுடன் வீற்றிருக்கிறார். காலம் கி.பி.12 நூற்றாண்டாகும். சுந்தரர் கையில் தாளத்துடனும், தலையில் கொண்டை அமைப்புடனும் காணப்படுகின்றார். அருகே பரவை, சங்கிலியார் நிற்கின்றனர். இக்கோவிலை பிரித்து கட்டியுள்ளனர். இராசராசன் காலத்தில் இக்கோயிலுக்கு சித்திரை திருவிழாவும் நடந்துள்ளது. திருப்பதிகமும் ஓதப்பட்டது.
மனோன்மணியம்மன் ஆலயம்:
இக்கோயில் கருவறை, உள்மண்டபம், மகாமண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இங்கு அம்மன் சுமார் 4 அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளது. நான்கு கைகள் உள்ளது. உள் மண்டபத்தில் துர்க்கை சிலை உள்ளது. இது பல்லவர் காலத்தைச் சார்ந்தது.
வரதராசப் பெருமாள் ஆலயம்:
இக்கோயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. சோபான அமைப்புடன் இருபக்கமும் ஏறிவர வசதியாகப் படிகள் உள்ளன இது மிகச்சிறிய கோயில் ஆகும். உள்ளிருக்கும் திருமால் தன் தேவியரான சீதேவி, பூதேவியுடன் சுமார் 6 அடி உயரத்தில் உள்ளார்.
சுந்தரர் மடம்:
சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூரில் பிறந்தார். அவர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் சுந்தரர் மடம் கட்டப்பட்டுள்ளது. அம்மடத்தில் சுந்தரர் சிலை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
சிங்க மண்டபம்:
விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன, முன்பக்கம் இரு தூண்கள் சிங்க வடிவில் உள்ளன. எனவே இது சிங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதில் உற்சவமூர்த்திக்கு அபிடேகம் நடைபெறுவதால் இதனை அபிடேக மண்டபம் என்றும் அழைப்பர்.
ஸ்ரீ கலிநாரை:
வெளிப்பிரகார மேற்குச் சுவரிடையே வைத்துக் கட்டப்பட்ட நிலையில் ஒரு 6 அடி உயரச்சிற்பம் உள்ளது. இச்சிற்பம் இருபகுதிகளாக ஒரே கல்லில் உள்ளது. கீழ்ப்பகுதி சுமார் 3 அடி உயரத்தில் யானையின் முன்புறத் தோற்றமாக அமைய, அதன் தலைக்கு மேல் பட்டையான பகுதியும், அதற்கு மேல் கிரீவத்தோடமைந்த கூடு போன்ற பகுதியும் 3 அடியில் அமைந்துள்ளது. இப்பட்டையான நடுப்பகுதியில் "ஸ்ரீ கலிநாரை" என்ற பெயர் பல்லவ கிரந்த எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளது.இது கி.பி.7 நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.
தட்சிணாமூர்த்தி:
தேவகோஸ்டத்தில் தெற்குப்பக்கம் மட்டுமே சிற்பம் உள்ளது. இது புதிய வகையில் அமைந்த சிற்பமாகும். தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் உள்ளார். பின்புறம் காளை காட்டப்பட்டுள்ளது. தலையில் ஜடாமகுடமும் இடது காதில் மகர குண்டலமும், வலது காதில் பத்ர குண்டலமும் உள்ளன. வலது மேற்கையில் அக்கமாலையும், கீழ்க்கை காளையின் மீதும் ஊன்றி உள்ளன. இடது பக்க கைகளில் ஒன்று திரிசூலம் ஏந்தியும், மற்றொன்று ஏடுதங்கியும் உள்ளது, காலில் வீரக்கழல் கணப்படுகிறது. தொடை வரை ஆடை அமைப்பு உள்ளது. இச்சிலை மிகவும் அருகியே காணப்படும். இது கி.பி.7 நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.
சிற்பங்கள்:
இக்கோயிலில் முருகன், பிள்ளையார், சிவலிங்கம், நடுகல் அமைப்பில் ஒரு வீரன், சண்டேஸ்வரர், ஸ்ரீ கலிநாரை ஆகிய ஆறு சிலைகள் வழிபாடின்றி இருக்கிறது.
பல்லவர் காலக் கற்சிலைகள்:
விஷ்ணு ,பிரம்மன் ,சண்டேஸ்வரர் ஆகிய மூன்று சிலைகளும் பல்லவர் காலக் கலைப்பாணியுடன் விளங்குகிறது.
விஷ்ணு:
விஷ்ணு சிலை சுமார் 6 அடி உயரமாக உள்ளது, மெல்லிய புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9ம் நூற்றாண்டு.
பிரம்மன்:
பிரம்மனின் சிலை 5 அடி உயரம் உடையதாக இருக்கிறது. விஷ்ணுவின் சிலை அமைப்பை உடையதாக இருக்கிறது. மூன்று தலைகள் தெரிகிறது, நான்கு கைகள் உள்ளன. வலது கைகளில் ஒன்று தாமரை தங்கியும் மற்றொன்று அபய ஹஸ்தமாகவும் உள்ளன.இடது கைகளில் ஒன்று அக்கமாலை ஒன்று ஏந்தியும் மற்றொன்று கடிஹஸ்தத்திலும் உள்ளது.
சண்டேஸ்வரர்:
இச்சிலை சுமார் 2 அடி உயரம் உடையது.சண்டேஸ்வரர் சுகாசன நிலையில் கையில் மழுவேந்தி காணப்படுகிறார்.காலம் கி.பி 9ம் நூற்றாண்டு.
நடனமாதர்கள்:
நடன மாதர்கள் சிலை திருச்சுற்று மாளிகையின் அதிட்டானப் பகுதியில் உள்ளது. ஒரு நடனமாதும் அவளின் இருபுறமும் மத்தளம் கொட்டுபவர்களாகவும் சிற்பங்கள் உள்ளது, இங்கு ஆடும் நடனமானது ஒரே கரணத்திலேயே காட்டப்பட்டுள்ளது. இச்சிலைகள் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
கஜலெட்சுமி:
கோயிலின் வடகோடியில் அமைந்துள்ளது, இரு பக்கமும் யானைகள் இருக்க நடுவில் தேவி அமர்ந்துள்ளார், இது கி.பி 16ம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இவருக்கு நேர் எதிரே ஏழு லிங்கங்கள் ஆவுடையார் இன்றி புதைந்த நிலையில் உள்ளது. திருச்சுற்றில் நவக்கிரகம் உள்ளது, இது கி.பி 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது.
சூரியன்:
நவக்கிரகத்தை அடுத்துள்ளது. பல்லவர் காலப் பாணியில் உள்ளது. சுமார் நான்கு அடி உயரம் இருக்கும். கைகளில் தாமரை மொட்டும், பின்பக்க ஒளிவட்டமும் உள்ளன.கி.பி.9ம் நூற்றாண்டைச் சார்ந்த்தாகும்.
செப்புத் திருமேனிகள்:
தமிழ்நாட்டில் கோயில்களில் உள்ள செப்புத்திருமேனிகள் உலகப் புகழ் வாய்ந்தவையாகும். இக்கோயிலில் பதினெட்டுக்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் உள்ளன..
இவற்றில் பிக்ஷடானர், நரசிங்கமுனையரையர், சுந்தரர் இருமனைவியருடன், கூத்தப்பெருமான் ஆகிய செப்புச்சிலைகள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். மேலும் சம்பந்தர், அப்பர், சடைய நாயனார், இசைஞானியார், சோமஸ்கந்தர், பிரதோஷ மூர்த்தி, சூலதேவர், தனி அம்மன், பிள்ளையார், தன்னிரு தேவியருடன் முருகன், அதிகார நந்தி, சேரமான் பெருமான் நாயனார் போன்ற செப்புத்திருமேனிகளும் அடங்கும்.இவை கி.பி.15,16 நூற்றாண்டினைச் சார்ந்ததாகும்.
#சிறப்பு:
அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).
இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடைய நாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.
#திருவிழா:
திருநாவலூர் சிவாலயத்தில் காமிக ஆகமத்திலுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுந்தரர் ஜனன விழா – ஆவணி மாதம் – உத்ர நட்சத்திரம் நாளன்று – 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா – ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா – 15 நாட்கள்- சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நிகழும். இவ்வைபவங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்பர் வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களை ப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும் ,விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.
#பிரார்த்தனை
சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது.
சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.
இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
#நேர்த்திக்கடன்:
வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரைப்பூவினாலும் வெண்பட்ட வஸ்திரம் அணிவித்து வெண்மொச்சை நிவேதனம் செய்து வெண்நெய்யால் தீபம் போட்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி எண்ணங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள். 3 மஞ்சள் 3 எலுமிச்சம் பழம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து பழத்தை பெற்றுச் சென்றால் மங்கல காரியம் நிறைவேற வாய்ப்புண்டு. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பண்ருட்டியிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
திருச்சிற்றம்பலம்
🙏🙇
No comments:
Post a Comment