Thursday, September 21, 2023

நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள்.

மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்ட திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது
மடப்புரம். இங்கு வராண்ட வைகையின் விளிம்பில் (இப்போ தண்ணீர் இல்லா ஆறு ) ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்த போது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்  கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் இதுவே மருவி மடப்புரமாக ஆனது.

ஒரு முறை பார்வதியை அழைத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்கு மேல் உன்னால் வர முடியாது தேவி... 

அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடி விட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்து விட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்க வேண்டும் என்று கேட்க...

இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

அதன் பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்று கொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான
சிறப்பு  வழிபாடு  !

சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொண்டு போவது இன்றும் நடக்கிறது.

கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில்  நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்க வேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக் கொண்டாராம். 

தன்னை நாடி வரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலது கையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

காளிக்கு எதிரே நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப் பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான்.
காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்ய வேண்டும். 

பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறை கேட்டு விடுமாம் காளி. 

சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.

இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக் கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. 

நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...