Friday, September 22, 2023

நாணற் கரும்புகளோடு ,மென் கரும்புகளும் , குளிர் வயல்களில் தாழ்ந்து நின்றன : கதிர் விளைந்த நெற் பயிர்களும் உள்ள எய்னணூர் என்னும் எய்தணூர் ஏனாதி நாயனார் பிறந்த வளர்ந்து முத்தியடைந்த தலம்.

ஓம்
 சிவசிவ :
ஏனாதிநாத நாயனார்.
      °°°°°°°°°°°°°°°
(புரட்டாசி / உத்திராடம்)

 "ஏனாதிநாதன் தன் அடியார்க்கும் அடியேன் "/ நம்பி ஆருரர்/திருத் தொண்டத் தொகை .
 ~ ஏனாதிநாத நாயனாருடைய அடியவர்க்கும் நான் அடியவனாவேன். 
    ***********
 ~பத்தனை ஏனாதிநாதனைப் பார் நீடு எயினை தன்னுள் / அத்தனைத் தன்னோடு அமர் மலைந்தான் நெற்றி நீறு கண்டு /கைத் தனி வாள் வீடு ஒழிந்து அவன் கண்டிப்ப நின்று அருளும் / நித்தனை ஈழக் குல தீபன் என்பர் இந் நீள் நிலத்தே ~ /நம்பியாண்டார் நம்பிகள் / திருத் தொண்டர் திருவந்தாதி . விளக்கம் : ~ ஏனாதிநாதர் என்ற பெயரை உடையவர் ; உலகில் நீடிய எயினனூர் என்ற ஊரின் அத்தராக விளங்குபவர் ; தம்முடன் எதிர் நின்று போர் செய்தானது நெற்றியில் நிறை நீற்றினைக் கண்டார் ; வாளை வீசாது நின்றார் ; அவன் எண்ணியவாறே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இசைந்து நின்று அருளினார் ; என்றும் நீடி நிலாவும் நித்தர் ஆனார் !
  ===========
   இனி இவ் வீர வரலற்றினை ,  சேக்கிழார் பெருமான் வான் நிழல் உணர்த்தியவாறு விரித்து உரைத்தவற்றைக் காண்போம் .
        ×××××××
  புலிக் கொடியை இமய மலையில் ஏற்றி , அந்த எல்லை வரையிலும் பரந்த தம் நாட்டினைக் காவல் செய்து ஆண்ட மரபினர் சோழ மன்னர்கள் ! குளிர்ந்த முத்துக்கள் பதித்த வெண் கொற்றக் கொடையும் ,வெற்றி மாலையும் உடைய சோழர்கள் நாட்டில் , வண்டுகள் இசைத்துப் பாடுவதற்கு இடமாக மலர்கள் மலரும் ,  குளிர்ந்த சோலைகள் விளங்கின ; அச் சோலைகளால்  சூழப்பட்ட விளை நிலப் பண்ணைகளால் எட்டு திசைகளிலும் தனது சிறப்பேறிய பழைய ஊராக விளங்கிற்று எயினனூர் .
    நாணற் கரும்புகளோடு ,மென் கரும்புகளும் , குளிர் வயல்களில் தாழ்ந்து நின்றன : கதிர் விளைந்த நெற் பயிர்களும் ,நின்று ஓங்கியச் சிறப்பினதாய்  விளங்க , குடிமக்கள் பல் வளங்களுடன் நிலை பெற்று வாழ்ந்தனர் . இத் தகையச் பொன் மயமான சிறப்புகள் பொருந்திய ஊரில் ஈழக் குலச் சான்றவராக தலைமை நிலையில் விளக்கமுற்று இருந்தார் ஏனாதி நாதனார். 
  ஈழ நாட்டைச் சார்ந்த மரபு என்ற ஒரு கருத்தும் , சான்றார் ( பதநீர் இறக்கும் சாணார் )குலத்தவர் எனவும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன ! 
   "ஏனாதி " ,என்பது அரச சேனையின் தலைவர் எனப் பொருள்படும் ; வீரர்களை , அத் தொழிலில் , தலைமையில் நின்று பயிற்றிவித்தார் ஆகையால் இதுவே பொருந்தும். 
    தொன்மையான திரு நீற்றுத் திருத் தொண்டின் வழிபாட்டின் தன்மையில் தலை நின்றார். அந் நலத்தினை என்றும் குன்றாதவாறு உறுதியாகப் பற்றிப் பயின்று வந்தார் !
  (திருநீற்றினைச் சிவமாகவே பாவித்து , திருநீறு அணிந்தார்க்கு தான் அடிமையாம் நிலையில் , உயிர் துறக்கினும் , நின்ற உறுதியே நாயனார் வரலாற்றின் கருப் பொருள்).
  மன்னருக்கு வாட் படைஞர்களைப் பயிற்றிவிக்கும் தன்மையுடைய வித்தையில் தலைமை நிலையில் விளங்கினார். மன்னருக்கும் வாட் படைப் பயிற்சி கொடுக்கும் திறத்தினர் எனவும் கொள்ளலாம். 
   வாட் பயிற்றிவிக்கும் தொழிலால் வந்தப் பொருட் செல்வ வளங்களை எல்லாம் , தமது அடிமுடியைக் காண இயலாதோரையும் ஆட் கொள்ளும்  சிவ பெருமானின் ,  அடிமைத் தொழில் பூண்ட தொண்டர்களுக்கு ஆக்கும்  திருத் தொண்டினை ஒவ்வொரு நாளும் பெரு விருப்புடன் செய்யும் கடமையில் தலை நின்றார்.
    இவர் நன்மையை விளைவிக்கும் திரு நீற்றின் நன்னெறியில் , பிறர் பழிக்காத நின்ற இயல்பினால் , பகைவர்களும் போற்றும் படி வாழ்ந்தார். இவர் இவ்வாறு ஒழுகி வாழும் காலத்தில் , இவர் விடாதபடி பற்றித் தொடரும் இப் படை பயிற்றும்  தொழிலில் தாயாதி வழியாக , இத் தொழில் செய்பவன் ஒருவன் உளனானான். அவன் பெயர் அதிசூரன். 
    மேலும் அவன் வெற்றியை விளைவிக்கும் வடி வாட் படைத் தொழில்களைக் கற்றோரில் தன்னை விட மிக்கார் எவரும் இல்லை என்ற பெருமையினால் , உலகில் மிகவும் பெருமிதம் உடையவனாய்த் தன்னையே பெருவீரன் என்று மிக்க மதித்து வாழ்ந்தான் .
   தன்னை அடைந்து வாட் பயிற்சி கொள்ள வருவோர் தொகை குறையவே அவனது வருவாய் குறையலாயிற்று. அவனது வழி வழி உரிமைத் தொழிலால் வரும் வளம் குறைவடையும் அதே நேரத்தில் , ஆசிரியத் தொழில் இயற்றும் ஏனாதிநாதரிடம் பயிற்சி பெறுவோர் அதிகமாகி , அவருக்கு செல்வ வளம் பெருகிற்று ; அதனால் அவர் மீது பொருந்தாதப் பகைமை பாராட்டுவான் ஆயினான் . சூரியன் கதிர் பரப்பி மேல் எழ எழத் தன் ஒளி மங்கும் நிலாவைப் போல் அவன் நிலை மங்கிப் போயிற்று !
   அவனால் அந் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . தன் சுற்றத்தாரையும் ஊராரையும் கூட்டினான் ; ஏனாதி நாதர் மீது எதிர்ப் போர் விளைவித்து , அவரை வீழ்த்த எண்ணித் துணிந்தெழுந்தான் !
    தோள் வலிமை கொண்ட அவனது சுற்றத்தாருடனும் , துணையாக , ஊரிலுள்ளப் போர் மள்ளர்களையும் கூட்டினான் ; அவர்களுடன் ஒருங்கே சென்று ஏனாதிநாதரின் இல்லம் முன் அணைந்தான்.
   "" வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது " ( இருவரில் வாட் போரில் வல்லவரே வம்சா வழியாக வரும் படை பயிற்றும் உரிமையை அடைவது )என அவனுள் மூண்ட பகையுணர்வின் எழுச்சியால் , அவரைப் போருக்குக் கூவி நின்று அழைத்தான். 
    வெம்மையானக் கண்களை உடையப் புலி கிடந்த , கடிய குகையில் சென்று அழைக்கும் , பசிய கண்களையுடைய குறு நரி அழைப்பதை ஒப்ப இருந்தது அது. !
 தன் படைகளைக் கொண்டுப் புறத்தே சூழ்ந்து , நேர் நின்றே போருக்கு அழைத்த ஒலியைச் செவி மடுத்தார் ஏனாதி நாதர். 
   சிங்கம் போல் கிளர்ந்து எழுந்தார் .  ஆர் கொலோ போருக்கு அறை கூவி அழைத்தவர் , எனச் சீறிக் ,கச்சுக் கட்டிய உடையை இடையில் வரிந்து கட்டினார் ; வீரக் கழல்களையும் கட்டிக் கொண்டார். வடித்த வாளினையும் கவசப் பலகையையும் கைக் கொண்டார். போர் முனையில் அவனைச் சந்திக்கப் புறப்பட்டார் ஏனாதி நாதர். 
  அவ்வாறு அவர் கிளர்ந்து எழுந்து புறப்படவே , அவரிடம் வாட் பயிற்சி பெறும் வீரர்களும் , திண்மை உடையச் சிறப்புப் பொருந்திய  வேறிடத்திருருந்த வாட் பயிற்சியில் , சொற் கட்டுக்கு விஞ்சிய போர்த் திறனுள்ள சிறந்தச் சுற்றத்தாரும் ஓடோடி வந்து ,அவரது இரு மருங்கும் சூழ்ந்து கொண்டார்கள். 
  போருக்கு அழைத்த அதிசூரன் , வெற்றியுடைய ஆண் புலி போல்வாராகிய , ஏனாதிநாதரிடம் ,  "வாள் பயிற்று தாயத்து உரிமையை நாம் இருவருங் கொண்டு , அதன் வழி வரும் வருவாயை அடைதலாவது , இந்த வெட்ட வெளியில் நின்று நாம் இருவரும் , அவரவர் படைகளை வகுத்துக் கொண்டு , எதிர் எதிர் நின்று கலந்து போர் விளைவிப்போம் ; அதில் வெற்றி பெறுவோரே படை பயிற்றும் வழி உரிமையைக் கைக் கொள்ள வேண்டும் " என்றான். 
   இவ்வாறு பகைத்தோனாகிய அவன் கூறக் கேட்ட ஏனாதிநாதர் , " அது நன்று என்று நீ வேண்டுவை ஆயின் நான் அவ்வாறே எதிர் கொள்வேன் " என்றார். உள் மகிழ்ச்சியுடன் அவ்வாறு ,உடன் பட்ட அவர் , அவன் முன்னே குறித்துச் சொன்னப் போர்க் களத்தில் , தன் படையை அணி வகுத்து நிறுத்தினார்.
 வெஞ்சினத்துடன் இரு படையினரும் அணி வகுத்துப் போர் புரியலானார்கள்.
   மிகக் கொடுமையான வீரம் விளைவித்தப் போர் அஞ்சும் படி நடந்தது ! உறுப்புகள் சிதறி இரத்த ஆறு ஓடலாயிற்று !
   இரு தரப்பிலும் பலத்த இழப்பு நேர்ந்த நிலையில் , வீழாது மிக்கிருந்த தன் எஞ்சியப் படைஞரை பின் வைத்து , தான் முன் நின்று ஏனாதிநாதர் , வீர உணர்வோங்க ஓங்கிப் போர்  புரியலானார். 
  வெற்றி வாள் கோபித்துத் தீப் பொறி பறக்கவும் , வீரக் கழல் ஒலி எழுப்பவும் , விடமுண்ட கண்டராகிய பெருமானுக்கு அன்பராகிய ஏனாதிநாதர் , ஆர்த்து எழுந்த போது , வீழாது எதிர் போர் விளைவித்த எஞ்சியப் பகைவர்களின் தலை , தோள் , தாள்களைத் தான் வெட்டி வீழ்த்தினார். 
  மேலும் வீழாது அருகணைந்தார் எல்லாரும் , ஒருத் தனி வீரராகிய இவர் வாளால் கொலைப் பட்டனர். இது கண்டு அஞ்சி எதிர் படைஞர் பலர் உயிர் தப்போம் என்ற ஞானம் மிக்கெழப் போர்க் களத்தை விட்டு ஓடி மறைந்தனர். 
  இச் சூழலில் போரேற்று வந்த அதிசூரன் ,  தம் படை வீரர்கள் பலர் மாண்டும் , போர்க் களத்தில் இருந்து மறைந்தும் ஒழிந்த தன்மையால் எழுந்த பொறாமையினால் , எஞ்சிய வீரர்களைத் திரட்டிக் கொண்டு வந்து , மின்னொளி வாள் வீசும் ஆண் புலியே போல்வாராகிய நாயனார் முன் நேர் நின்று போர் விளைத்தான். 
    தன் வடி வாளினைச் சுழற்றும் ஒளி மட்டுமே விளங்க , தான் தோன்றா வகை வட்டமாகச் சுற்றி வந்து , அவனை வெட்டி வீழ்த்த முனைந்த போது , அவன் அஞ்சிப் பிழைத்து , பொன் தடந் தோள் வீரருக்குப் புற முதுகு காட்டி ஓடித் தப்பினான் .
    மனமுடைந்து புற முதுகிட்டு ஓடித் தப்பிய அதி சூரன் , போரிலே ஏனாதிநாதரிடம் தோற்று மானமழிந்து தரையிலே படுத்தான் ; நிகழ்வுகள் நினைவகலாது உறங்காதவன் ஆயினான் .இரவு முழுதும் சிந்திக்கலானான் ; இவ்வாறு போர் புரிதலின்றி இழிவான வஞ்சனையால் அவரை வெல்வேன் என முடிவு செய்தான்.
     அவனது அந்த மனமழிந்த உறங்கா நீள் இரவு கழிந்தது ; பொழுது புலர்ந்தது ; அத் தீயோன்  இதழ் நிறை மாலை அணிந்த , ஏனாதி நாதர் பால் சென்று கூறுமாறு ,  " நம் பொருட்டு நாட்டாரைக் கொலைப் பட விடாது , நாம் இருவரும் தனியிடத்தில் , வாள் தாய உரிமையினை நிச்சயிக்கும் போரினைச் செய்ய வருக " என இடமும் காலமும் குறித்துச் செய்தியை ஒருவன் மூலம் விடுத்தான். 
  இவ்வாறானச் செய்தியைக் கேட்ட உடனே , " அவ்வாறு செய்தல் அழகு இது " என ஏற்றுக் கொண்டார் ஏனாதியார் . கையில் வாளேந்திப் போர் விளைவிக்க , அவன் குறித்தக் களத்துக்குக் , கொடிய வாளேந்தி வலிய அவன் வரக் கடவது என்று கூறி அனுப்பி விட்டு , அச் செயலை மேற் கொள்வாராயினார் !
  தமது சுற்றத்தார் எவரும் அறியா வகை , தாம் ஒருவரே தனித்து , ஒளி வீசும் வாளினையும் , பொற் கவசத்தையும் தாமே கொண்டுப் புறம் போயினார். மேலும் அவன் குறித்த அக் களத்துக்குச் சென்று , பகைவனாகிய அவன் வரவை எதிர் நோக்கித் தனியே நின்றார். 
  வஞ்சனையால் தீங்கு இழைக்க அழைத்த அத் தீயோன் , திரு நீறு தாங்கிய நெற்றியினார் எவருக்கும் , தன் உயிரே போயினும் , ஏனாதி நாதர் தீங்கிழைக்க மாட்டார் என்பதை அறிந்திருந்தான் ; என்றும் முறையாகத் திரு நீறே பூசிப் பயிலாத அவன் , வெண்ணீற்றினை எடுத்து நெற்றிப் புறம் நிறையப் பரவப் பூசினான் . உள் நெஞ்சில் வஞ்சக கறுப்பினை நிறைத்தான். சுடர் வாளையும் வண்ணக் கவசப் பலகையையும் கைக் கொண்டான் .
புண்ணியப் போரை விளைவிக்க உள்ள வீரரை வருமாறு கூறிய இடத்தில் வந்து புகுந்தான். 
  வெற்றியுடையச் சிங்கம் , தன் இரைக்கானப் பிராணி வருதலை எதிர் நோக்கி நின்றார் போல் அவர் நின்ற நிலையைக் கண்டான். அவரை அணுகுமளவும் தன் கைக் கவசப் பலகையால் தன் நெற்றியை மறைத்துக் கொண்டான். முன் நின்ற வீரர் ஏனாதிநாதருக்கு எதிராக வஞ்சப் போர் விளைவித்தான்.
  வலிய இடபக் காளை போல அடர்த்து அவனைக் கொல்லுமாறு , அவர் கால் பெயர்த்துச் செல்லும் நேரத்தில் , சற்றே விலகி , தன் நெற்றியை மறைத்தக் கவசப் பலகையை நீக்கினான். கடையவனாகிய அவனது நெற்றியின் மேல் திரு நீற்றினைக் கண்டார் நாயனார். 
  கண்ட பொழுதே ""  கெட்டேன் ! முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேல் கண்டேன் ; வேறு இனி என் ? அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் "" என்று மனத்தில் எண்ணி , ""  "இவர் தன் கொள்கைக் குறி வழி நிற்பேன் " என முடிவு செய்தார். ( அவர் கொள்கை தன்னைக் கொல்வது ; அவ்வாறே ஆகட்டும் )
  கை வாளுடன் பலகையை எறிய எண்ணினார். ; ஆனால் அவ்வாறு செய்தால் , ஆயுதமின்றி நின்றாரைக் கொன்றார் எனும் தீயப் பழி அவருக்கு எய்தக் கூடாது என்று எண்ணினார் ; நெய் பூசிய வாளுடன் போர் புரிவார் போல் நேர் நின்றார். 
   அவ்வாறு நின்ற தொண்டரின் திரு உள்ளத்தை ஆரே அறிவார் ? அவர் முன் நின்ற அந்தப் பாதகனும் தான் கருதி வந்தச் செயலையே செய்து முடித்தான் !
  இவ்வாறு இந் நாயனார் நின்ற தன்மையை அறிவாராகிய மின்னலை ஒத்தச் சடா முடியாராகிய சிவ பெருமான் , இவருக்கு அருள வெளிப் பட்டுத் தோன்றி அருளினார். !
     பகைவனின் கை வாளால் , தனக்கு உற்ற அன்பரது பாசத்தை அறுத்து அருளிய வானோர் பிரான் அருளை நாம் போற்றுவது எவ்வாறு ?
  என்றும் தன்னிடமிருந்துப் பிரியாதப் பேரருளை ஏனாதிநாதருக்கு அருளினார் ! அருளி உமாதேவியாரின் பாகனாராகியப் பெருமானார் பொன்னம்பலத்தை அணைந்தார். 
  தம் பெருமான் சாத்தும் திரு நீற்றின் சார்புடைய , எம் பெருமானாகிய ஏனாதி நாதர் திருவடிகளைப் போற்றுகிறேன் .
  நம்பி ஆரூரர் திருவடிகள் போற்றி ! போற்றி !!
  நம்பியாண்டார் நம்பிகள் திருவடிகள் போற்றி ! போற்றி !!
  ஏனாதிநாத நாயனார் திருவடிகள் போற்றி !போற்றி !!
  சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி ! போற்றி !!
  திருச்சிற்றம்பலம்.
 கோமல் கா சேகர் /9791232555/240920/(669/20)

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...