Friday, September 22, 2023

காவிரிக்கரையில் அமைந்த இவ்வூரில் "செல்லாண்டியம்மன் கோயில்" என்ற பழமையான கிராம தெய்வ கோயில் உள்ளது .

கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 20km தொலைவில் உள்ளது மாயனூர். "மையம்" (centre point) அதாவது மைய ஊர் என்ற சொல்லே மருவி மாயனூர் ஆனதாக சொல்லப்படுகிறது . 
இந்த இடமே சேர , சோழ , பாண்டிய நாடுகள் சந்திக்கும் மையம் ஊர் (centre point) ஆகும் .
காவிரிக்கரையில் அமைந்த இவ்வூரில்  "செல்லாண்டியம்மன் கோயில்" என்ற பழமையான கிராம தெய்வ கோயில் உள்ளது . இக்கோயில் சேர சோழ பாண்டிய எனும் மூன்று நாடுகள் கூடும் இடத்தில் உள்ளது . சோழனுக்கு கிழக்கு , பாண்டியனுக்கு தெற்கு , சேரனுக்கு மேற்கு நடுவில் செல்லாண்டி அம்மன் என்று கூறப்படுகிறது . 

இக்கோயில் மூவருக்கும் பொதுவானது.  ஆதலால் செல்லாண்டியம்மனை மூன்று பாகங்களாக  மூவேந்தர்களும் பிரித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. அவ்வகையில் செல்லாண்டியம்மனின் தலைப்பகுதி பாண்டியனுக்கும் , நடுப்பகுதி சேரனுக்கும், கால் பகுதி சோழனுக்குமாக பிரித்துக் கொண்டு மூவேந்தர்களும் தங்களது நாட்டில் கோயில் அமைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

பாண்டியன் கொண்டது சிம்மக்கல் செல்லாண்டியம்மன் என்றும், சேரன் கொண்டது வஞ்சியம்மன் என்றும், சோழன் கொண்டது உறையூர் வெக்காளி என்றும் நம்பப்படுகிறது. எனினும் சிறுவாச்சூர் மதுரக்காளியும் செல்லாண்டியம்மனாக இருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. 

இது எந்தளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறி. எனினும் சிறுவாச்சூர் மதுரக்காளியை ஒருவர் குலதெய்வமாக கொண்ட கல்வெட்டொன்று கிபி 10ஆம் நூற்றாண்டில் வாலிகண்டபுரம் கோவிலில் கிடைக்கிறது. 

அக்கல்வெட்டு ஆவணம் இதழ் 18, பக்கம் 47இல் பதிவாகியுள்ளது. அதில்,
'ஸ்வஸ்திஶ்ரீ கோவிராஜகேசரி பன்மற்கு யாண்டு யக-ஆவது  பிராந்தகவன் நாடுடையார் குலதெய்வதை பகவதியாருக்கு பிராந்தக வன்னாடுடையார் தேவியார் ச... க்கு எரிய வைத்த நொந்தா விளக்கு..." என பதிவாகியுள்ளது. 

வாலிகண்டபுரம் அருகே இருக்கும் சிறுவாச்சூர் மதுரக்காளியே பகவதியாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இக்கோயில் அருகே சோழ விநாயகர் கோயில் , பாண்டிய விநாயகர் கோவில்கள் உள்ளது மேற்கூறிய தகவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அவ்வப்போது அல்லது தங்கள் தேவைக்கு கூடி பிரச்சனைகளை தீர்த்து கொள்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது .

மூன்று நாடுகளின் எல்லை (LoC) என்பதால் எல்லைகளை  வரையறுக்க இங்கு ஒரு  மதில் அமைத்தனர் . இந்த மதில்கரை சுமார் 5.5 அடி அகலம் உடையதாகவும்   சுமார் 25 km வரை செல்கிறது. இந்த மதில் மதுரை வரை செல்வதாக சொல்லப்படுகிறது . இதன் பழமை தெரியாமல் இந்த  மதில்கரை மேல் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போது தார்சாலை அமைத்திருக்கின்றனர். 

பெரும்பாலான இடங்களில் இதனை சிதைத்தும் ஆக்கிரமித்தும் விட்டனர், ஓரிரு இடங்களில் மட்டும் இந்த கரை அடையாளம் தெரிகிறது.
இதன் தொன்மையை குறிக்கும் விதமாக நாட்டுப்புற பாடல் ஒன்று,
"மண்ணைப் பிரித்த மதுக்கரை செல்லாயி" என்று கூறுகிறது.

செல்லாண்டி அம்மன் கோயில் கொங்கு நாட்டில் பல இடங்களில் உள்ளது. இக்கோயிலுக்கு வந்து ஒரு பிடிமண் எடுத்து சென்றே புதியகோயில் கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த செல்லாண்டியே கொங்கின் மிகப்பழமையான செல்லாண்டியம்மனாக கருத முடிகிறது.

கொங்கு எல்லைகளை கூறும் போது  இக்கரை கிழக்கு எல்லையாக குறிப்பிடப்படுகிறது .
சோழன் பூர்வ பட்டயம் ஒன்று,
"வடக்கெல்லை பாலமலை வைகாவூர்  தெற்கு
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கடற்பால்
கோட்டைக் கரையளவும் கொங்குநாட்டு எல்லையென
நாட்டிவைத்தார் நல்லோர்களே " என்று இந்த மதில் கரையைக் குறிப்பிடுகிறது.

இந்த மதில்கரை என்ற பெயர் மருவி தற்போது அந்த ஊர் மதுக்கரை ஆனது என்பது கொங்கு நாட்டு மக்களின் நம்பிக்கை.🙏இறைபணியில்
இரா. இளங்கோவன்🙏

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...