தீராத நோய் தீர்க்கும்ஆதிரத்னேச்வரர்...!
வருண விநாயகர் - திருவாடானை
சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக ஆதிரத்னமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம் திருவாடானை.
ஆடு - யானை சேர்ந்த விநோத உருவம் வழிபட்ட கோயில்.
இறைவன், `ஆதிரத்னேச்வரர்’ என்றும் அம்பிகை, `அம்பாயிரவல்லி’, `சிநேகவல்லி’ என்றும் அழைக்கப்பெறுகிறார்கள்.
முற்காலத்தில் இந்தத் தலத்துக்கு, `பாரிஜாத வனம்’ என்றும், `ஆதிரத்னபுரி’ என்றும் பெயர்கள் இருந்தன. புஷ்ப பத்திரை என்னும் நதிக்கரையில் துர்வாச முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது வருணனுடைய மகன் வாருணி என்பவன் அவருடைய தவத்துக்கு இடையூறு செய்தான். துர்வாசர் கோபத்தில் அவனைச் சபித்தார்.
அதனால், ஆட்டுத்தலையும் யானை உடலும் கொண்ட விநோத வடிவத்தைப் பெற்றான். யானையில் உடல் ஏற்பட்டதால், பசியால் மிகவும் துன்பப்பட்டான். துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினான். 12 ஆண்டுகள் இதே வடிவத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டு மென்று தீர்மானமாகக் கூறிவிட்டார் துர்வாசர்.
வருணனும் அவரிடம் வேண்டி பணிந்தான். அதன்பின்னர் அவர் காட்டிய வழியில் பல தலங்களையும் தரிசித்து. தன் மகனுடன் பாரி ஜாத வனத்துக்கு வந்தான். அந்தத் தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் இருவரும் நீராடினார்கள். முதலில் விநாயகரைப் பூஜித்தான்.
வருணன் பிரதிஷ்டை செய்து பூஜித்த வருண விநாயகர் இங்கே பிராகாரத்தில் அருள்பாலிக்கிறார்.
வாருணி, ஆதிரத்னேச்வரரை முறைப்படி வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றான்.
ஆடும் யானையுமாக இருந்த வாருணி பூஜித்து சாபம் நீங்கியதால், ஆடானை என்று இந்தத் தலத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இதனால் இந்த இறைவனுக்கு, `அஜகஜேச்வரர்’ (அஜம் - ஆடு; கஜம் - யானை) என்ற பெயரும் உண்டு.
காரைக்குடியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தேவக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவிலும் இந்தத் தலம் அமைந்துள்ளது. `இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்’ என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுகிறார்.
No comments:
Post a Comment