Saturday, October 21, 2023

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படுவர் நந்தனார்

சிவ சிவ

நமசிவாய வாழ்க...

#நந்தனார்......
சைவ‌ சமயத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படுவர் #நந்தனார்_நாயனார். இவருக்கு திருநாளைப் போவார் என்று வேறு பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் கொள்ளிட நதி பாயும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன்கோயிலை‌ அடுத்த‌‌ ஆதனூர் என்ற ஊரில் பிறந்தார். இவ்வூரில் உள்ள சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. இச்சேரியிலே வாழ்ந்தவர்களின் தலைவராக நந்தனார் இருந்தார்.

 சிவபெருமானின் திருவடி நினைத்து தினம்தோறும் போற்றி புகழ்வார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோவிலுக்கு செல்ல இயலாது. திருக்குலத்தைச் சார்ந்த நாயனாரும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோவிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை. சிவலாயங்களின் கோபுரத்தையும், கோவிலையும் தரிசிக்கும் இன்பத்தைத் தன் இயற்தொழிலோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்தார் நந்தனார்.

இவர் கோயில் முரசுகளுக்கு தோல் தைத்துக் கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது, கோரோசனை வழங்குவது, கைலாய வாத்தியத்திற்கு தோல் மற்றும் வார் செய்து சிவாலயத்திற்கு தருவதை வேலையாக செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை தனக்காக இல்லாமல் சிவ தொண்டு திருப்பணிகளுக்கு செலவு செய்து வந்தார். நந்தனாருக்கு நீண்ட காலமாகவே ஈசனை காண வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

ஒருசமயம் நந்தனார் மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூரை அடைந்தார். அக்கோவிலின் உள்ளே செல்ல அக்கால கட்டுப்பாடுகள் தடுத்ததால் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார்.

சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி நந்தனாருக்கு இறை தரிசனத்தை மறைத்தார். இதனால் மனம் நொந்த நந்தனார் இறை தரிசனம் கிடைக்க அருள்புரியுமாறு இறைவனை மனம் உருகி வேண்டினார்.

இறைவனார் தம் பக்தனின் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்தியெம் பெருமானுக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. அதனைக் கண்டதும் நந்தனார் இறைவனைப் போற்றிப் பாடி, ஆடி, குதித்து மகிழ்ந்தார். திருக்கோவிலை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார்.

இவ்விடத்தில் குளத்தை வெட்டினால் திருக்கோவிலுக்கு வரும் அன்பர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணி தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டினார். இதேபோன்று தன் ஊருக்கு அருகில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று திருத்தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்கு ஒரு நாள் தில்லை பெருமானை தரிசனம் செய்யும் ஆசை பெருகியது.

ஒருநாள் இரவு தில்லை தரிசனத்தை நினைத்துக் கொண்டிருந்த நந்தனாருக்கு, தன்னால் கோவிலின் உள்ளே சென்று ஆடலரசனை வழிபட இயலாத சூழ்நிலை நினைவுக்கு வர அவருக்கு சோர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் தில்லை தரிசன ஆசை நந்தனாருக்கு உண்டானது. ‘நாளைப் போவேன்’ என்று எண்ணிக் கொண்டார்.

மறுநாளும் நந்தனாருக்கு தில்லை தரிசன ஆசையும், தில்லைக்குள் செல்லாத தன்னுடைய சூழ்நிலை சோர்வும் ஆட்கொண்டன. மீண்டும் நாளைப் போவேன் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழிந்து கொண்டிருந்தது. நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் நந்தனாரிடம் ‘சிதம்பரம் செல்ல போகிறீர்களா?’ என்று கேட்டால் நாளைப் போவேன் என்று நந்தனார் கூறுவார். இதனால் எல்லோரும் திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

ஒரு நாள் வானத்தில் மேகங்கள் ஒன்றாக கூடி சிவலிங்கமாக நந்தனாருக்கு காட்சியளித்தது. 'நந்தா... நீ சிதம்பரம் வா! என்று சிவபெருமான் அழைத்தார். அன்றிலிருந்து சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆசை நந்தனாருக்கு கூடிக்கொண்டே சென்றது.

தில்லைக்குச் செல்ல போதிய பணம் இல்லாத காரணத்தினால், தன் முதலாளியிடம் சென்றார். நந்தனின் இந்த சிவபக்தியை சாதகமாக பயன்படுத்தி அவரை தன் பண்ணையிலும் வயலிலும் வீட்டிலும் நிறைய வேலைவாங்குவாரே தவிர நந்தனுக்கு பணம் ஏதும் தர மாட்டார். 

கேட்டால் 'நாளை தருகிறேன்' என்று கூறிவந்துள்ளார். ஒருநாள் பொறுமையிழந்து கோபம் அடைந்த நந்தனார், தன் முதலாளியிடம் சென்று பணம் கேட்டுள்ளார். முதலாளி நந்தனாரிடம், 'உனக்கு பணம் தர வேண்டுமென்றால், என்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பயிர் செய்து அறுவடை செய்த பிறகு உனக்கு பணம் தருகிறேன்' என்று கூறினார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தனார் விவசாய நிலத்திலேயே அழுதபடி மயங்கி விழுந்தார். நந்தனாருக்காக இன்னொரு அற்புதத்தை நிகழ்த்தினார் பெருமான். விவசாய நிலம் அனைத்தும் பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கண்விழித்து பார்த்த நந்தனார் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இறைவனே எண்ணி போற்றி புகழ்ந்து பாடினார். இதை அறிந்த முதலாளி சிதம்பரம் செல்ல பண உதவி செய்து அனுப்பினார்.

தில்லை எல்லையை சென்று சேர்ந்தார் நந்தனார். எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும் வேள்விப் புகையையும் வேதம் ஓதும் ஒலியையும் கேட்டார். கோயிலுக்குள் செல்ல மனமில்லாமல் வெளியே அஞ்சு நின்றார். இரவு பகலாக சில்லையை வலம் வந்து 'இன்னல் தரும் இழிப்பிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்கு தடையாய் உள்ளதே..!' என்று வருந்தி உறங்கச் சென்றார். நந்தனாரது வருத்தத்தை நீக்கி தில்லைக் கூத்த பெருமான் அவரது கனவில் தோன்றினார். 'இப்பிறவி போய் நீங்க எறியனிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்' எனக்கு கூறி, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும் படி தில்லைவாழ் அந்தணருக்கு கனவில் தோன்றி அருள் புரிந்து மறைந்தருளினார்.

மறுநாள் திருக்கோயில் அந்தணர்கள் ஒன்று கூடி திரண்டு, பூரண கும்ப மரியாதையுடன் நந்தனாரை கோயிலுக்கு அழைத்து வருவதற்கு ஆயத்தமானார்கள். அவரை ஜோதி வடிவில் இறைவன் வரச் சொன்னதாகச் சொல்லினர். "என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்தார் இறைவன். அவையெல்லாம் நானே எதிர்பாராதது. நான் வருவதற்கே ஒரு அற்புதம் செய்து அனுப்பினார். இறைவனின் விருப்பத்தை யாராலும் தடுக்க இயலாது" என்றார் நந்தனார்.

வேள்வி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயில் நந்தனார் கவலையின்றி "திருச்சிற்றம்பலம்" என ஈசனை நினைத்தவரே இறங்கினார். இறைவனின் பல அதிசயங்களில் ஒன்று இங்கு நடந்தது. தீயில் இறங்கி தன் உடல் அழிய பெற்று அழகிய ஞான ஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச வெளிப்பட்டார் நந்தனார். தில்லை அம்பலத்தாரின் திருவடிகளில் கலந்து மறைந்தார்.

இவ்வாறு தன் வாழ்வையே சிவபெருமானுக்கு அர்ப்பணித்த நந்தனாரை புகழ்ந்து, "செம்மையே திருநாளை போவார்க்கு அடியேன்" என சுந்தரர் பாடியுள்ளார். ஆண்டுதோறும் நந்தனாரின் குருபூஜை, புரட்டாசி மாத ரோகிணி அன்று விமரிசையாக நடைபெறுகிறது!!

No comments:

Post a Comment

Followers

சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்க உதவும் சிவன் கோவில்...

அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் கோயில், பூவனூர்-613803,  திருவாரூர் மாவட்டம்.  *மூலவர்: சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், ப...