Saturday, October 21, 2023

வயிற்று வலி தீர்க்கும் இறைவன் வைத்தியநாதன்

மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று வலி தீர்க்கும் இறைவன் வைத்தியநாதன் என்பதை கேள்விப்பட்டு, மதுரையில் இருந்து தந்தத்தினால் செய்த பல்லக்கில் வந்து சுமார் 48 நாள்கள் தங்கி, இறைவன் அருளால் வயிற்று வலி நீங்கக்கண்டார். அதனால் அவர் வந்த தந்தத்தினால் ஆன பல்லக்கை இத்தல இறைவனுக்கு கொடுத்து விட்டு, மதுரைக்கு நடந்தே சென்றதாக தலவரலாறு கூறுகிறது. அது போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருமண மண்டபம் போலவே, பெரிய நாடகசாலை என்ற மண்டபமும் அமைத்தார்.
 
வைத்தியநாதரை பிரிய மனமில்லாத திருமலை நாயக்கர், மதுரையில் இருந்தாலும் தினமும் வைத்தியநாதரின் உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகே, தினமும் உணவை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.

அந்த உச்சிகால பூஜைகள் தனக்குத் தெரிவதற்காக, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரையில் ஆங்காங்கே கல் மண்டபங்கள் அமைத்து, அவற்றில் பூஜை நேரத்தில் முரசுகள் (நகரா) முழங்கச்செய்து, அந்த ஒலி மதுரையை எட்டியவுடன் மனதில் வைத்தியநாதரை வழிபட்ட பிறகே! உணவை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டதாகக் கூறுவர். இதற்கு சான்றாக இன்றும் வில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் இருப்பதைக் காணலாம்.

அடுத்ததாக மதுரை வணிகர்கள் மதுரையிலிருந்து கேரளத்திற்கு இத்தலம் வழியாகச் செல்வர். முத்து, ஆடைகள், ஆபரணங்களை மதுரையிலிருந்து எடுத்துச் சென்று கேரளத்தில் விற்றுவிட்டு, திரும்பும்போது அங்கிருந்து மிளகு, வாசனைப் பொருட்களை வாங்கி வருவர்.

ஒருமுறை அவ்வாறு வண்டிகளில் மிளகு மூட்டைகளை ஏற்றி வந்தபோது மதுரைக்குள் நுழையும் முன் வரிசெலுத்தாமல் தப்பிப்பதற்காக மூட்டைகளில் இருப்பது உழுந்து என அதிகாரிகளிடம் பொய் சொல்லி ஏமாற்றி நுழைந்தனர்.

இருப்பிடம் சென்று பார்த்த போது அத்தனை மூட்டைகளிலும் உண்மையாகவே உளுந்தாகவே இருந்தது.

செய்த தவறை உணர்ந்த வணிகர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று தமது பாவச்செயலுக்கு மன்னிப்பு வேண்ட, அவரோ மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமியிடம் சென்று முறையிடுமாறு கூறினார். அவ்வண்ணமே அவர்களும் வேண்டித் தங்கள் பாவத்திலிருந்து மீண்டனர் என்பது இத்தலம் குறித்ததொரு மரபு வரலாறு.

ஓர் ஏழைத் தம்பதியினர் குழந்தை வேண்டுமென சிவனிடம் வேண்ட, அவர்கள் மீது கருணை கொண்ட சிவபெருமானின் அருளால் அப்பெண் கருவுற்றாள். மகப்பேறு காலம் நெருங்கியது. உதவிக்கு வருவதாக இருந்த அவளது தாய் வரமுடியாததால் அப்பெண் தன் தாயின் இருப்பிடம் நோக்கித் தனியே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும் அவளுக்கு வலி கண்டது. உதவி செய்ய யாரும் அருகில் இல்லை. தன்னைக் காக்கும்படி அவள் ஈசனை வேண்ட, ஈசன் அவளது தாயின் உருவில் வந்து அவளுக்கு உதவினார். 

குழந்தையும் சுகமாகப் பிறந்தது.விரலால் பூமியில் கீறி நீரை வரவழைத்து அவளை அருந்தச் செய்து, அந்நீரே அவளுக்கு மருந்து என்றும் கூறினார். நீரை அருந்தியவள் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போது அவளது தாய் ஓடோடி வந்தாள். யாருமே இல்லாத அந்த இடத்தில் தனது பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்டு வியந்தாள்.
 
ஈசன் சிவகாமி அம்மையுடன் காளை வாகனத்தில் தோன்றி, அவள் தன்னிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தான் வந்து அவளுக்கு உதவியதாகவும், அவளது தாகத்திற்கும் காயத்திற்கும் மருந்தாக அமைந்த அவ்விடத்துத் தீர்த்தம் காயக்குடி ஆறு என அழைக்கப்படும் எனவும், அவ்வாற்றில் முழுகி எழுந்து ஈசனை வழிபடுவோரின் நோய்கள் விலகும் எனவும் கூறி மறைந்தார். 

இந்த திருவிளையாடல் நிகழ்த்தப்பட்ட இடம், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்தலம் இம் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது எனலாம்.

சிவனின் திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலை மீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது.

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...