Saturday, October 21, 2023

கடவுளரில் மும்மூர்த்திகள்- சிவன், விஷ்ணு, பிரம்மா! சங்கீதத்தில் மும்மூர்த்திகள்- தியாகராஜர்,

கடவுளரில் மும்மூர்த்திகள்- சிவன், விஷ்ணு, பிரம்மா! சங்கீதத்தில் மும்மூர்த்திகள்- தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள்! சங்கீத உலகில் பல ஜாம்பவான்கள் கோலோச்சி இருந்தாலும், இந்த மும்மூர்த்திகளுக்கு இருந்த பக்தியும், சிரத்தையும் அளவிட முடியாதது. தெய்வ அனுக்ரஹத்தைப் பெற்று, இசை மேதைகளாக சிறந்து விளங்கியவர்கள்.

இவர்களில் முத்துஸ்வாமி தீட்சிதர் மன்மத வருடம் (கி.பி.1775), பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ராமஸ்வாமி தீட்சிதர்- சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாக திருவாரூரில் பிறந்தவர். திருமணமாகி வெகு நாள் வரை குழந்தை இல்லாமல் தவித்த இவரின் பெற்றோர், வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்கு உறையும் ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமியையும், முத்துக்குமார ஸ்வாமியையும் வேண்டி... ஒரு மண்டலம் தவம் இருந்து இவரைப் பெற்றெடுத்தனராம்! இவர் பிறந்தது, கார்த்திகை தினம் என்பதாலும், முத்துக்குமார ஸ்வாமியின் அருளால் பிறந்தவர் என்பதாலும் 'முத்துக்குமார ஸ்வாமி' எனப் பெயரிட்டனர்.
(பின்னாளில் இதுவே 'முத்துஸ்வாமி' என ஆனது).

இசையின் பல பரிமாணங்களைக் கற்றறிந்தார் முத்து ஸ்வாமி தீட்சிதர். ஒருநாள், சிதம்பரநாதயோகி எனும் பெரும் தவசீலர், ஜமீனுக்கு வருகை புரிந்தார். காசிக்குச் செல்லும் தமக்கு உதவியாக, முத்துஸ்வாமியைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி ராமஸ்வாமி தீட்சிதரிடம் வேண்டினார் சிதம்பரநாத யோகி. நீண்ட தயக்கத்துக்குப் பிறகு மகனைக் காசிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த காசிப்பயணம்தான், முத்துஸ்வாமி தீட்சிதரின் வாழ்வில், மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கங்கையில் தினமும் நீராடுவது, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி- அன்னபூரணியைத் தரிசிப்பது, குருநாதர் சிதம்பரநாதயோகியின் பூஜைக்கு உதவுவது என்று மூழ்கினார் முத்துஸ்வாமி. 'அன்னபூரணியை வணங்க என்றும் மறவாதே. சாப்பாட்டுக்குக் கஷ்டம் இல்லாமல் அவள் உன்னைப் பார்த்துக் கொள்வதோடு, உனக்கு மோட்சமும் அருள்வாள்' என்று உபதேசித்தார் சிதம்பரயோகி. இப்படியாக... சுமார் ஐந்தாண்டுகள் கழிந்தன.

ஒரு நாள்! முத்துஸ்வாமியுடன் கங்கையில் ஸ்நானம் செய்யச் சென்ற சிதம்பரயோகி, ''முத்துஸ்வாமி... கங்கை உனக்குப் பரிசளிக்கப் போகிறாள். இந்தப் புனித நீரில் இறங்கி, கண்களை மூடி, இரு கரங்களையும் நீட்டியபடி, சரஸ்வதி தேவியைத் துதித்து, ஜபித்துக் கொண்டே இரு'' என்று உபதேசித்தார். 

உடனே நீரில் இறங்கி, கண்களை மூடி, கைகளை நீட்டி, கலைவாணியைத் துதித்தார் தீட்சிதர் (இனி, தீட்சிதர் என்றே அழைப்போம்). மறு கணம்... ஏதோ ஒன்று தமது கரங்களில் விழுந்தது போல் உணர்ந்தார். கண்களைத் திறந்தார். 'ராம' என்று எழுதப்பட்ட அழகான வீணை அது; சரஸ்வதியின் அருளால், தீட்சிதருக்குக் கிடைத்த பொக்கிஷம்!

தீட்சிதரை ஆசிர்வதித்த சிதம்பரநாதயோகியார், கங்கையில் இறங்கினார். நீரில் மூழ்கியவர், அப்படியே ஜல சமாதியானார். இவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து விட்டுத் திருவாரூர் திரும்பினார் தீட்சிதர் (சிதம்பரநாத யோகியின் சமாதி, காசியில் அனுமந்த கட்டத்தில் இருக்கிறது).

'திருத்தணிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும்' என்று முன்பொரு முறை தீட்சிதருக்கு உத்தரவிட்டிருந்தார் சிதம்பரநாதயோகி. அதன்படி, திருத்தணிக்கு யாத்திரை மேற்கொண்டார் தீட்சிதர். ஒரு மண்டல காலம் வரை அங்கேயே தங்கி, பஜனைகள் முதலான ஆராதனைகள் நிகழ்த்தினார். ஒரு நாள், தியானத்தில் இருந்த போது, மிகுந்த தேஜசுடன் கூடிய முதியவர் ஒருவர் தீட்சிதரின் எதிரில் தோன்றினார்.

ஒருநாள், தியானத்தில் இருந்தபோது, மிகுந்த தேஜசுடன் கூடிய முதியவர் ஒருவர் தீட்சி தரின் எதிரில் தோன்றினார். தீட்சிதரை நெருங்கி, ''முத்துஸ்வாமி... உன் திருவாயைத் திற!'' என்றார்.திடுக்கிட்டு கண் விழித்தார் தீட்சிதர்.

எதிரே- தெய்வீக ஒளி ததும்ப நிற்கும் முதியவரைக் கண்டார். முதியவர் சொன்னபடி, தீட்சிதர் வாயைத் திறக்க, திட வடிவில் இருந்த ஒரு பொருளை அவரது வாயில் இட்டார் முதியவர். பிறகு, ''கண்களை மூடிக் கொள். இப்போது உனது வாய்க்குள் நான் இட்ட பொருள் எது என்று உன்னால் உணர முடிகிறதா?'' என்று கேட்டார். 

தீட்சிதர் கண்களை மூடிய நிலையிலேயே, ''ஆம் ஸ்வாமி. இது கல்கண்டு. இந்தச் சுவை எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது!'' என்றபடி கண்களைத் திறந்தார். அந்த வயோதிக உருவம், மெள்ள மெள்ள சுப்ரமண்ய ஸ்வாமியின் கருவறை நோக்கி நகர்ந்து, கர்ப்பக் கிரஹத்தில் மறைவதைக் கண்டார் தீட்சிதர்.

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாடு இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள்.

தமிழ்நாட்டின் பிரபலமான இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :* • காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் ...