Wednesday, December 6, 2023

லால்குடி திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீலோகனாகிய அம்பாள் அருள்மிகு ஸ்ரீ சாமவேதீஸ்வரர் திருக்கோயில்.


63 நாயன்மார்களில் ஒருவரான
#ஆனாய_நாயனார் குருபூஜை இன்று:
(முக்தி நாள்) (#கார்த்திகை_ஹஸ்தம்)
#ஆனாய_நாயனார் புராணம்:

உடலை வருத்தி பக்தி செய்யாமலும், சிவத்தொண்டு செய்யாமலும், இசையால் சிவபெருமானை வணங்கி நாயன்மார்கள் வரிசையில் இடம்பெற்றவர் ஆனாய நாயனார்.

இசையில் திறமையுடைய ஆனாய நாயனார், அந்த இசையையே சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து பேரின்பத்தை அடையலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.

இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் உள்ளம் உருக வாசிப்பதை தனது பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

ஆனாய நாயனார் – இசையால் முக்தி பெற்றவர்
ஆனாய நாயனார் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் இசைத்து முக்தி பெற்ற இடையர்.

ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார்.

மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள‌ திருவானைக்கா மற்றும் அதனைச் சுற்றிலுள்ள பகுதிகளைச் சார்ந்தது.

திருமங்கலம் என்னும் திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.

இவர் தோன்றிய இடையர் குலத்திற்கு ஏற்ப ஆவினங்களை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தார்.

இவர் ஆவினங்களை முல்லை நிலத்திற்கு ஓட்டிச் செல்லும் போது கையில் கோலும் புல்லாங்குழலும் கொண்டிருப்பார்.
இடையராக இருந்த போதிலும் இவருக்கு சிவனாரிடம் அலாதிப் பிரியம். எப்போதும் வெண்ணீறு அணிந்த சிவனாரை எண்ணிக் கொண்டே இருப்பார்.

ஆதலால் புல்லாங்குழலில் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை அழகாக இசைப்பார். இவருடைய புல்லாங்குழல் இசையில் ஆவினங்கள் தங்களை மெய் மறந்து நிற்கும்.

கார்காலத்தில் ஓர்நாள் ஆனாய நாயனார் நெற்றியில் வெண்ணீறு அணிந்து கோலோடும் புல்லாங்குழலோடும் ஆவினங்களை மேய்க்க காட்டிற்குப் புறப்பட்டார்.

கார்காலத்தின் செழுமையால் முல்லைவனம் பூத்துக் குலங்கியது.

இயற்கையை ரசித்தவாறே சென்ற ஆனாயனாரின் கண்களில் மஞ்சள் நிறத்தில் சரம் சரமாக மாலைபோல் விளங்கும் கொன்றை மரம் தென்பட்டது.

அம்மரம் கொன்றை அணிந்த சிவனாராகவே ஆனாயருக்குத் தோன்ற தன்னுடைய புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை முறையாக பண் அமைத்து வாசிக்கத் தொடங்கினார்.

பக்திப் பெருக்கும், இறை அர்ப்பணிப்பும் நிறைந்த புல்லாங்குழல் கானம் முல்லை வனம் எங்கும் ஒலித்தது.

இசையால் மயங்கிய ஆவினங்கள் மற்றும் முல்லை வனத்து விலங்குகளான மான், புலி, கரடி, யானை, பாம்பு, மயில் உள்ளிட்டவைகள் தம்நிலை மறந்தன.

முல்லை நிலத்து விலங்குகள் தம்முடைய இயல்பு மாறி எல்லாம் ஒன்றாக ஆனாயரைச் சுற்றி நின்றன.

உயிரினங்கள் மட்டுமின்றி ஆறுகள், நீரோடைகள், மலைகள், மேகங்கள் என மொத்த உயிர்சூழலும் ஆனாயனாரின் இசை வெள்ளத்தில் தன்னிலை மறந்து மயங்கி நின்றன.

சிவனாரும் ஆனாயனாரின் இசையில் ஒன்றி அவ்விடத்தில் உமையம்மையோடு காட்சி அளித்தார்.

சிவபெருமான் “ஆனாயா, நீ இந்த நிலையிலேயே எம்மை வந்து அணைவாயாக.” என்று அருளினார்.

பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, புல்லாங்குழல் இசைத்தபடியே சிவபெருமானுடன் சென்று மீளாத பேரின்ப வாழ்வு பெற்றார்.

இறைவனின் விருப்பப்படி ஆனாயனாரும் திருஐந்தெழுத்தை புல்லாங்குழலில் இசைக்க சிவலோகம் சென்றார்.

ஆனாய நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் போற்றப்படுகிறது.

புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை இசைத்து வீடுபேறு பெற்ற ஆனாய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அலைமலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.

குரு பூஜை நாள்:

பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற ஆனாய நாயனார், சிவபெருமானோடு ஐக்கியமானது கார்த்திகை மாத ஹஸ்தம் நட்சத்திரம். ஆனாய நாயனாரின் குருபூஜை இவர் அவதரித்ததும், முக்தி அடைந்தும் ஆன திருச்சி லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள உலக நாயகி சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலின் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நிழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் உண்டு.
இவரது குருபூஜை தினத்தன்று எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

#ஆனாய நாயனாரின் அவதாரம் மற்றும் முக்தி தலமான திருச்சி மாவட்டத்தில் உள்ள 
#திருமங்கலம் #சாமவேதீஸ்வரர்
#லோகநாயகி_அம்மன்
திருக்கோயில் வரலாறு:

லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஸ்ரீலோகனாகிய அம்பாள் அருள்மிகு ஸ்ரீ சாமவேதீஸ்வரர் திருக்கோயில். 

வேதங்கள் குறிப்பாக சாமவேதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே தனித்துவமான கோவில் இதுவாகும். இந்த இடம் காசி மற்றும் கயாவிற்கு இணையான புனிதமாக கருதப்படுகிறது. இந்த பழமையான சோழர் கால கோவில் கட்டிடக்கலை ரீதியாக அழகாகவும் பல தனித்துவமான சிற்பங்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஆனைய நாயனார் பிறந்த முக்தி தலம் இதுவாகும். 

சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில். கோச்செங்கட்சோழனால் ஐந்து விமானங்களைக் கொண்ட கருங்கற்களால் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

#சாமவேதீஸ்வரர்:

வேத வியாசர் பண்டைய வேத பாடல்களை நான்கு வகைகளாகப் பிரித்து ரிக், யஜுர், சாம, அதர்வ எனப் பெயரிட்டார். அந்த நான்கு வேதங்களின் அறிவை அவர் தனது நான்கு சீடர்களுக்கும் வழங்கினார். வியாசரிடம் சாமவேதம் கற்ற நான்கு சீடர்களில் ஜைமினியும் ஒருவர். இந்த கோவிலில் ஜைமினி சாமவேதத்திற்கு விளக்கம் அளித்ததாகவும், அதை பல வசனங்களாக வகைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே இக்கோயிலின்
மூலவருக்கு சாம வேதீஸ்வரர் என்று பெயர். வேறு எந்த சிவாலயமும் வேதத்தின் பெயரால் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

#பரசுராமேஸ்வரம்:

சில காரணங்களால் பரசுராமன் தன் தாயைக் கொல்ல வேண்டியதாயிற்று. மாத்ரு ஹத்ய பாவத்தைப் போக்குவதற்காக இந்தக் கோயிலுக்கு வந்தார். எனவே, இக்கோயிலின் புனித குளத்திற்கு பரசுராம தீர்த்தம் என்றும், கிராமம் பரசுராமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

#திருமங்கலம்:

இக்கோயிலில் லட்சுமி சிவனை வழிபட்டாள். அதனால் இக்கிராமம் திருமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

#கயா & காசிக்கு சமம்:

அதிகம் அறியப்படாத முனிவரான ரவிகுருவ ரிஷி முக்தி அடைய விரும்பி இந்த கிராமத்திற்கு வந்தார். அருகில் ஆறு கிடைக்காததால் கயா மற்றும் காசிக்கு செல்ல முடிவு செய்தார். சிவபெருமான் அவரை தடுத்து இந்த கிராமத்தில் ஒரு நதியை உருவாக்கினார். இந்த கிராமத்தில் ஓடும் நதி கயா பால்குனி நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் கயா மற்றும் காசிக்கு சமமாக கருதப்படுகிறது.

#சண்டிகேஸ்வரர் தன் தந்தையைக் கொன்ற பாவத்தைப் போக்கியது இங்கே:

சண்டிகேஸ்வரர் தன் தந்தையைக் கொன்ற பாவத்தைப் போக்க பல யாத்திரை தலங்களுக்குச் சென்றார். இறுதியில் திருமங்கலம் வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டார். இத்தலத்தில் அவருடைய பாவங்கள் நீங்கின.

#ராவணன் இங்கு தலைவியை நிறுவினார்:

ஒரு புராணத்தின் படி, கோவிலின் பிரதான தெய்வம் ராவணனால் நிறுவப்பட்டது.

#உதங்க ரிஷி இங்கே அமிர்தத்தைப் பெற்றார்:
உதங்க ரிஷி சிவனை நோக்கி தவம் செய்து அமிர்தத்தைப் பெற்றார்

#புராணம்:

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் 14–வது நாயன்மார் ஆணய நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டற கலந்தார். அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்மனும் இங்கு தனித் தனியே அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் சோழர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகள் மற்றும் கோயிலின் கட்டிடக்கலை பாணியின் அடிப்படையில், இந்தக் கோயில் கிபி 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் அல்லது புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் கருதலாம். இக்கோயிலின் வளர்ச்சிக்கு ராஜ ராஜ சோழன் பங்களிப்பு செய்துள்ளார். இங்கு பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் கயா பால்குனி மற்றும் பரசுராம தீர்த்தம். ஸ்தல விருட்சம் (புனித மரம்) பலா மரம். ஆரம்பகால கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டு இராஜகேசரிவர்மா (இராஜராஜா I, கி.பி. 990) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கருவூர் கந்தலி, அபத்தகிலா (தலைவர்) வழங்கிய தங்கப் பரிசைப் பதிவு செய்கிறது. 15 ஆம் ஆண்டு (கி.பி. 1000) தேதியிட்ட கல்வெட்டு செம்பியன் மகாதேவியின் நிலத்தை பரிசாகப் பதிவு செய்கிறது. எனவே இக்கோயில் கி.பி.990க்கு முன் கட்டப்பட்டது.
கோயிலின் தீர்த்தமாகப் பரசுராமர் தீர்த்தம், கயாமற்குழி தீர்த்தம் காணப்படுகிறது. தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. கோயிலில் 11 முறை பிரதட்சணம் செய்து தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் ஆயுள் அபிவிருத்தி அடையலாம் என்பது கோயிலின் ஐதீகமாக உள்ளது.

ராஜகோபுரத்தை அடுத்த விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஸ்ரீலோக நாயகி அம்மன் வலது புறத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரான சாமவேதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், மூலவரின் வலது சுவரில் பிச்சாடனார் தட்சிணாமூர்த்தி மற்றும் உதங்க முனிவரும், இறைவனுக்குப் பின்புறத்தில் சங்கரநாராயணனும் எனது சுவரில் பிரம்மா, துர்க்கை அம்மனும் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.

தென்மேற்கு திசையில் பரசுராமர் பூஜித்த லிங்கமும், மகாகணபதி, வள்ளி, தேவசேனா, கல்யாண சுப்பிரமணியர், வடமேற்கு திசையில் கஜலட்சுமி, அப்பர், சம்பந்தர், அணாய நாயனார் அம்மனும் காட்சி தருகின்றனர். வட திசையில் பைரவர் ஸ்ரீ கால பைரவர், சனி பகவான் மற்றும் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன.

இத்தலத்தில் சனி பகவான் காக வாகனத்தில் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். ஸ்ரீ பைரவரும், கால பைரவரும் சேர்ந்திருப்பது மிகவும் விசேஷமாகும். இக்கோயிலில் உள்ள அபய கர தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரையோடு அருளுகின்றார்.

இங்கு முருகப் பெருமானும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் இருக்க அருகே வள்ளியம்மை மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கை மகிச வாகனமின்றி சிம்ம வாகனத்தில் உள்ளார்.

இங்குள்ள மங்கள நாயகி தாயார் இறைவனை வழிபட்டதால் இவ்வூர் திருமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனின் அருளால் ஜெயமினி முனிவர் சாம வாதத்தை ஆயிரம் சாகைகளாகப் பிரித்தார். அதனால் இந்த இறைவனுக்கு சாம வேதிஸ்வரர் என்ற பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலத்தைப் பரசுராமர், சண்டிகேசுவரர், ரவிக்கு மகரிஷி, உதங்க ரிஷி, ஜெமினி ரிஷி, இந்திரன், குபேரன், லட்சுமி ஆகியோர்கள் பூஜித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

#செல்லும் வழி:

லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், லால்குடியிலிருந்து 4 கிமீ தொலைவிலும், திருமாந்துறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், சமயபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும், அன்பில் இருந்து 11 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், திருவானைக்கோயிலில் இருந்து 16 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 23 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையங்கள் லால்குடி (5 கிமீ), மாந்துறை (5 கிமீ) மற்றும் திருச்சி (27 கிமீ) ஆகிய இடங்களில் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சியில் (28 கிமீ) அமைந்துள்ளன. 

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...