*ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் நரசிம்மர் கோவில்*
பூவரசங்குப்பம் நரசிம்மர் கோவிலில் ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, தாயாரின் திருஉருவமும் நரசிம்மரின் உருவத்திற்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது.
இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார்.
அந்தத் தலமே இதுவாகும். ‘தட்சிண அகோபிலம்’ என்ற புராணப்பெயரைக் கொண்டது. தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபட்டு வந்துள்ளனர்.
பிற்காலத்தில் பல்லவ மன்னர்கள் இங்கு ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். மூலவராக லட்சுமிநரசிம்மர், உற்சவராக பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார்கள்.
தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி என்பதாகும். பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, தாயாரின் திருஉருவமும் நரசிம்மரின் உருவத்திற்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அஷ்ட நரசிம்ம தலங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது, சின்னக்கள்ளிப்பட்டு. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் பூவரசங்குப்பத்தை அடையலாம்.
அதே போல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள சிறுவந்தாடு சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றாலும், இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும்.🌹
No comments:
Post a Comment