Monday, December 4, 2023

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..
தெரிந்து கொள்வோம்....

சபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும் திருத்தலத்திற்கு யாத்திரை சென்று, தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்துப் பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை ஏழு அம்சங்களை கொண்டு திகழ்கிறது..... 

#சபரிமலை :-

பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகாசங்கராந்தி புனித நாளில் ஜோதி உருவாய் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் காட்சி தந்து அருள்கிறார்.

#பம்பை :-

பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்திருப்பதாக புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதைக் காணலாம்.

#மகிஷன் :-

ரம்பாசுரனின் மகனாகப் பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனிடம் போர்புரிந்து அவனை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது.

#ராமஇலட்சுமணன் :-

ராமபிரானும் லட்சுமணனும் தேவியை தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே அங்கு சென்றார்கள். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் ராம லட்சுமணர்களை வரவேற்று தான் அங்கு முனிவருக்குப் பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்றும் கூறினாள். ராமபிரான், மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம்பெற அருள்புரிந்தார். மாறிய அந்த பெண் பம்பா நதியாக பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்பு பெயர் பெற்றாள்.

#ஸ்ரீலலிதாதிரிபுரசுந்தரி :-

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தவமிருந்து வழிபட்டனர். அவர்கள்முன் தேவி தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். தங்களின் விஸ்வரூப தரிசனத்தை என்று கேட்க உடனே தேவி விஸ்வரூப தரிசனம் தந்தாள்.

தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தியை வைத்துக்கொண்டிருந்தாள். அந்த சக்திதான் மகாசாஸ்தா. இதனைக் கண்ட சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏக காலத்தில் இந்த மகாசக்தி தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்று மனதிற்குள் அவர்கள் நினைத்ததைப் புரிந்துகொண்ட தேவி, அவர்கள் விருப்பம் நிறைவேற ஆசிபுரிந்தாள். தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்துவந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா.
#பம்பாஉற்சவம் :-

ஐயப்பன், மகிஷனின் சகோதரியான மகிஷியை வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவபூமியானது. இந்த பம்பை நதிக்கரையில் மகரவிளக்குப் பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர்.

#சபரி :-

ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களைக் கொடுத்து உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்பர். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது.

*ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..

.ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...