Sunday, April 28, 2024

கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்.

 கும்பகோணம் சபஸ்தான தலங்களில் ஒன்றான, கும்பகோணத்தில் உள்ள 
#திருக்கொட்டையூர்_கோடீச்சரம் 
#கோடீஸ்வரர் (கைலாசநாதர்)
#பந்தாடு_நாயகி (கந்துக கிரீடாம்பாள்) திருக்கோயில் வரலாறு:
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் என்பது அப்பர் பாடல் பெற்ற சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன்: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள்
தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு)
தீர்த்தம் : அமுதக்கிணறு
புராண பெயர்: திருக்கொட்டையூர் கோடீச்சரம் 
ஊர்: கொட்டையூர் 
மாவட்டம்: தஞ்சாவூர் (கும்பகோணம்)
மாநிலம்: தமிழ்நாடு 

வழிபட்டோர் : ஹேரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் 

#அப்பர் சுவாமிகள் அருளிய திருக்கொட்டையூர் தேவாரப் பாடல்:

"கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
 கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
 பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
 மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
 கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  

#அருணகிரிநாதர் அருளிய திருக்கொட்டையூர் திருப்புகழ்:

"பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
     பத்தியின்முத் துச்செறிவெற் …… பிணையாமென் 
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்டவினைத் …… தொழிலாலே 
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் …… திரிவேனைத் 
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
     சுத்தியணைப் பத்தரில்வைத் …… தருள்வாயே 
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் …… கொடியாழார் 
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
     சுற்றுவனத் திற்சிறைவைத் …… திடுதீரன் 
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் …… பலதோளின் 
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் …… பெருமாளே.

#வரலாறு:

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி.
இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.

பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பாிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 44 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் .

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது.

#தல வரலாறு:

ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.

வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். மனித உருவிற்கு மாற வேண்டும் என்று  சிவபெருமானை வணங்கினான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மனமுருக வேண்டினான். இதையடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார்.

""கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே"  என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும்.

இக்கோயிலில் அக்டோபர் 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோடி விநாயகர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது.

அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஏரண்ட முனிவர் அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது , ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

கோயில் அமைப்பு:

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) உள்ளார். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருசசுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

சிறப்புக்கள் :

கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் .

இங்குள்ள தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

#கும்பகோணம் சப்தஸ்தானம்:

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.
விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

 

திருவிழா:
பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.
தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...