Wednesday, August 7, 2024

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர்....

🔱 சிவன் கோயில் / பட்டணத்துச்சிவன் கோயில் என்று வழங்கப்படும் யாழ்ப்பாணம்  வண்ணை வைத்தீசுவரன் கோயில் ( வாலாம்பிகை  உடனுறையும் வைத்தீசுவர சுவாமியின் பெருங்கோயில் ) 
✨️யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. 

✨️யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார்.

✨️இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787 ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார்.

✨️1787ஆம் ஆண்டிலே பெற்ற நிலத்திலே செட்டியாரின் விருப்பப்படி கூழங்கைத்தம்பிரான் நல்லோரையில் அடிக்கல் நாட்டினார். செட்டியாரின்
பிறப்பிடமாகிய திருவாரூருக்கண்மையிலே புள்ளிருக்கு வேளுர் என்னும் மூவர் பலரும் பாடிய தலம் ஒன்றுள்ளது. அது வைத்தீஸ்வரன் கோயில் என முற்காலத்தில் வழங்கப்படுகின்றது. தம் குல முன்னோர் அதன்பால் பெரிதும் பத்தி கொண்டிருந்தனர் என்பதனை யுணர்ந்த செட்டியார் தாம் ஈழத்தில் எடுக்கும் கோயில், புள்ளிருக்கு வேளூர்க் கோயிலைப் போல, அதனினும் சிறிய அளவிலே அமைக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனம் நிர்மாணிக்கப்பட்ட கோயில் (1790) சாதாரண ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறைப் புனர்பூசத் திருநாளிலே திருப்பெரும் குடமுழுக்குப் பெற்றது.

✨️யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.

✨️கிழக்கு நோக்கி சந்நிதியோடு அமைந்த இவ்வாலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டிருக்கின்றது.

✨️புள்ளிருக்கு வேளூரிற்போலவே இங்கும் அம்பாள் சந்நிதியில் இரண்டாம் பிரகாரத்தின் வெளியே சித்தாமிர்த புட்கரணி என்னும் புண்ணிய தீர்த்தம் உண்டு.இக்கலியுகத்திலே சித்தர்கள் இறைவர் திருமுடியில் தேவாமிர்தத்தால் திருமுழுக்குச் செய்தபோது, அவ்வமிர்தம் இதிற் கலந்தமையால் இது இப்பெயர்பெற்றது. இதனையடுத்துப் பெரிய திருநந்தவனம் உள்ளது.

✨️கிழக்குச் சந்நிதியிலே மூன்றாம் பிரகாரமாகிய தெருவீதியின் புறத்தே பதினாறு கால் மண்டபம் ஒன்று தமிழ் நாட்டுப் பாணியிலே கட்டப்பட்டுக் கோயிலுக்கும் நகரத்துக்கும் அழகு தந்து கொண்டிருக் கிறது. இம் மண்டபத்திலேயே பூங்காவனத் திருவிழாவிலன்று பார்வதியம்மையார் பரமேசுவரனை நோக்கித் தவஞ்செய்ய எழுந்தருளுவர்.

✨️இரண்டாம் பிரகாரத்தில் கற்பக விநாயகர் , களஞ்சிய விநாயகர் , நாகதம்பிரான் தனித்தனி சந்நிதிகள் உண்டு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...