Friday, August 9, 2024

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.

 கருட பஞ்சமி விரதம் பற்றிய பதிவுகள் :*
உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தி தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்த கலசத்தை கொண்டுவந்து தந்தால் அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாக சொன்னாள்.

கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே... என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கி தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்து கொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில் கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்த கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுசரிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியாகவும், புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய திருமணமான பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

*விரதம் இருக்கும் முறை :*

கருட பஞ்சமியன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும். கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதீகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.

முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்து பின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களை கூறி பூஜிப்பர். பின்பு பசும்பால் ஊற்றி வணங்க வேண்டும். நெய்வேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயசம் செய்து வைத்து தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் நல்லது.

கூடுதலாக கருட பஞ்சமியன்று பணிகௌரி பூஜையும் செய்யலாம். மாலையில் அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நெய்வேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயசமும் படைத்து வணங்க வேண்டும்.

கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.

*கிழமைகளில் தரும் பலன்கள் :*

அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.

ஞாயிறு - பிணி விலகும்.

திங்கள் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் - துணிவு பிறக்கும்.

புதன் - பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

வெள்ளி - திருமகள் திருவருள் கிட்டும்.

சனி - முக்தி அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...