Thursday, September 12, 2024

இறைவனார் மண் சுமந்தது எங்கே எப்படி❓

உலகை ஆளும் ஈசன் 
மாணிக்கவாசகரை காப்பாற்றும் பொருட்டு வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி, 
#ஏழை_வந்தியம்மைக்காக_பிட்டுக்கு_மண்_சுமந்து_பிரம்படி_பட்ட_திருவிளையாடல் புராணம். 

உலகப் புகழ்பெற்ற மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 
ஆவணி மூல திருவிழாவான ,
சிவபெருமான் நிகழ்த்திய
64 திருவிளையாடல்களில் ஒன்றான #வைகையில்_வெள்ளப்_பெருக்கும்
உலகை ஆளும் 
#ஈசன்_ஏழை_வந்தியம்மைக்காக_பிட்டுக்கு_மண்சுமந்து_பிரம்படி_பட்ட_திருவிளையாடலும்  நிகழ்வு:

மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வந்தி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.

மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

#கரையை அடைக்க முயற்சி:

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வையையில் வெள்ளப்பெருக்கினை உண்டாக்கினார். வையையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது.

இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான்.

அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர்.

மக்களும் வைக்கோல், பசுந்தளை, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும், கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர்.

#வந்தியின் வேண்டுதல்:

அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள்.  அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள்.

தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள்.

வந்தி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வந்தியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள்.

கூலியாள் கிடைக்காததால் வந்தி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் “ஐயனே, நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை.

ஆதலால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று வேண்டினாள்.

#இறைவனார் மண் சுமந்தது:

இந்நிலையில் இறைவனார் வந்திக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும், திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வந்தியின் இடத்தினை அடைந்தார்.

“கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ” என கூவிக்கொண்டு வந்தியை நெருங்கினார்.

உடனே வந்தி இறைவனாரிடம் “என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“சரி. அப்படியே செய்கிறேன். எனக்கு கொடுக்கும் கூலி யாது?” என்று கேட்டாள். “நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன்.” என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் வந்தியிடம் “நான் தற்போது பசியால் மிகவும் களைப்புற்றுள்ளேன். ஆதலால் நீ எனக்கு உதிர்ந்த பிட்டை எல்லாம் தற்போது தருவாயாக. நான் அதனை உண்டு பசியாறிய பிறகு கரையை அடைக்கிறேன்.” என்று கூறினார்.

வந்தியும் அதற்கு சம்மதித்து பிட்டினைத் தந்தாள். இறைவனார் அதனை உண்டு சற்று களைப்பாறிவிட்டு கரையினை அடைக்கச் சென்றார்.

வையையின் கரையினை அடைந்து ‘நான் வந்தியின் கூலியாள்’ என பதிவேட்டில் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

பின்னர் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும், மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வந்தியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார்.

அரசாங்க காவலர்கள் வந்தியின் பங்கு அடைப்படாமல் இருப்பதைக் கண்டனர். வந்தியின் கூலியாளான இறைவனாரிடம் “ஏன் வந்தியின் பங்கு இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர்.

அச்சமயத்தில் வையையின் கரை அடைப்பட்டிருப்பதைக் காண அவ்விடத்திற்கு அரிமர்த்தன பாண்டியன் வந்தான்.

நடந்தவைகளைக் கேட்டறிந்தான். உடனே கோபம் கொண்டு பிரம்பால் இறைவனாரை அடித்தான்.

இறைவனார் உடனே மண்ணினை உடைப்பில் கொட்டிவிட்டு மறைந்தருளினார். பாண்டியன் இறைவனை அடித்ததும் அடியானது அங்கிருந்த பாண்டியன் உட்பட எல்லோரின் முதுகிலும் விழுந்தது. எல்லோரும் திடுக்கிட்டனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனாரின் திருவாக்கு
அப்போது “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.

ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம்.

வந்தியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூறினார்.

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லைஅம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக்கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார்.

இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வந்தியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

*மண் சுமந்த படலம் கூறும் கருத்து:

இறைவனாரிடம் பேரன்பு கொண்டவர் எல்லோரும் இறைவனாரின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவர்.

இறைவனார் எல்லோரிடம் இருக்கிறார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

பாடல்:

"பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது போயினார்.

கட்டு வார்கரை யுடைப்ப* நீர்கடுகல் கண்டு நெஞ்சது கலங்குவார்
மட்டி லாதமுனி வென்னை யன்னையினி யாறு கென்றெதிர் வணங்குவார்
கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ் கொள்ளு வார்குரவை துள்ளுவார்
எட்டு மாதிரமு மெட்ட வாயொலி யெழுப்பு வார்பறை யிரட்டுவார்.

இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர் 
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் 
அந்நிலை நகரின் றென்கீழ்த் திசையுளா ளளவி லாண்டு 
மன்னிய நரைமூ தாட்டி யொருத்தபேர் வந்தி யென்பாள்.

நெட்டரவக் கச்சுடையாய்! நீலநிறத் திருமாதின் 
வட்டமுலைத் தழும்புபட வந்தணையும் திருமார்பா! 
கட்டிய செஞ்சடையாய்! உன்கண்ணருள் கொண்டு எப்பொழுதும் 
பிட்டினை விற்று உண்பேற்கும் பேரிடும்பை உளதாமோ?  - திருவாதவூரடிகள் புராணம் 

துணையின்றி மக்க ளின்றித் தமரின்றிச் சுற்ற மாகும்
பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக் கோடாம்
புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவி யேற்கின்
றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ வெந்தாய் - திருவிளையாடல் புராணம் 

தந்தைதாய் பிறரின்றி வருகின்ற தனிக்கூலி
மைந்தனார் வாய்மலருங் குரல்கேட்டு வந்தியுந்தன்
சிந்தையா குலமிழந்து நல்கூர்ந்தார் செல்வமகத்
தந்தபோ தெழுமகிழ்ச்சி தலைக்கொள்ளப் புறம்போந்தாள்

அன்னையெனத் தன்பாலின் னருள்சுரந்து வருகாளை
தன்னையழைத் தெனக்களந்த கரையடைத்துத் தருவாயோ
என்னவிசைத் தனளாக வடைக்கின்றே னெனக்கன்னை
பின்னையதற் கிடுங்கூலி யாதென்றார் பெருமுதியாள்.
பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம்
இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக்
கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்.

இவ்வண்ண மிவரொருகா லிருகான்மண் சுமந்திளைத்துக்
கைவண்ண மலர்கன்றக் கதிர்முடிமேல் வடுவழுந்த
மைவண்ண னறியாத மலரடிசெம் புனல்சுரந்து
செவ்வண்ணம் படைப்பவொரு செழுந்தருவின் மருங்கணைந்தார்.  

தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற்
றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்தக்
குருமேவு மதிமுடியைக் கூடையணை மேற்கிடத்தி
வருமேரு வனையார்தம் வடிவுணர்ந்து துயில்கின்றார்  

அத்தருவே யாலநெடுந் தருவாக வலைபுரட்டித்
தத்திவரும் புனலடைப்பார் சனகாதி முழுதுணர்ந்த
மெய்த்தவராய்க் கண்களிப்ப மெய்யுணர்ச்சி மோனமயச்
சுத்தவுருத் தெளிவிப்பா ரெனத்துயிலுந் துயிலுணர்ந்தார்.

அருளினா லுலக மெல்லா மாக்கியு மளித்து நீத்து
பெருவிளை யாடல் செய்யும் பிறைமுடிப் பெருமா னிங்ஙன்
ஒருவிளை யாடல் செய்ய வோச்சுகோற் கைய ராாகி
அருகுநின் றேவல் கொள்வா ரடைகரை நோக்கப் புக்கார்.
    

நெட்டலை யொதுங்கி யோட நிவப்புற வரைபோ லிட்டுக்
கட்டிய கரைக ளெல்லாங் கண்டுகண் டொப்பு நோக்கி
அட்டமே செல்வார் திங்க ளாயிரந் தொழுதாள் பேரால்
விட்டபங் கடைப டாமை கண்டனர் வெகுளி மூண்டார்.

வந்திக்குக் கூலி யாளாய் வந்தவன் யாரென் றோடிக்
கந்தர்ப்ப னெனநேர் நின்ற காளையை நோக்கி யேடா
அந்தப்பங் குள்ள வெல்லா மடைபட்ட தெவனீ யின்னம்
இந்தப்பங் கடையாய் வாளா திருத்தியா றம்பீ யென்றார்.

வேறுரை யாது தம்மை யுணர்ந்தவர் வீறு தோன்ற
ஈறிலா னிறுமாப் பெய்தி யிருந்தன னாக மேலிட்
டாறுவந் தடுத்த பங்கி லடைகரை கல்லிச் செல்ல
மாறுகொண் டோச்ச வஞ்சி மயங்கினார் வலிய கோலார்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...