Friday, March 28, 2025

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்..
பிரம்மன் வழிபட்ட தலம்..!!

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!
 

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் என்னும் ஊரில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

திருச்சியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. உறையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68வது தேவாரத்தலம் ஆகும்.

 *வேறென்ன சிறப்பு?* 

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் 'திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

பைரவர், சனிபகவான், சூரியன் ஆகியோர் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.

இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்.

எதிரி, யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம்.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

சித்ராபௌர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பௌர்ணமி (இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், பொங்கல் நைவேத்தியம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்..

_27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் .._ அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. ... சுக்கிரன். ... சக்...