Tuesday, December 30, 2025

வெங்கடாம்பேட்டை பெருமாள் கோவில்

தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.
விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில். கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.
தல வரலாறு : ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார். இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.

பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜபெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.

திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.
மற்றொரு வரலாறு : இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது.. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப அமைதி குலைந்து, போர் சூழலும், அதர்மமும் தலை தூக்கியிருந்தது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் இருந்து அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதிக்கு வந்தவர், அதை ஒட்டிய நீர் வற்றியிருந்த கருட நதி (தென்பெண்ணையாறு) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதை, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனான திருமாலை வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் இத் தவத்தை அவர் மேற்கொண்டார்.
பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் காட்சி அளித்தார். பின்னர் வேண்டும் வரம் கேட்கும்படி மகரிஷிக்கு அருளினார். மகரிஷியோ, ‘இறைவா! தாங்கள் உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களை காண ஆசைப்படுகிறேன்’ என்றார். அதற்கு இசைந்த திருமாலும், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என ஒவ்வொரு அவதார கோலத்தையும் வரிசையாக சடமர்ஷனுருக்கு காட்டினார்.
ராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி, ‘ஐயனே! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் ராமனாகப்பிறந்து, எத்தனை துன்பங்களை அடைந்தீர். எத்தனை எத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தாங்கள் இவ்விடத்தில் இளைப்பாறுவதுடன், பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்’ என்றார். அதன்படியே லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி ஸ்ரீதேவி வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை காட்டி அருளினார். பின்னர் அடுத்தடுத்த அவதார காட்சியை மகரிஷிக்கு அருளினார். கிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சி யளித்தார்.
அப்போது மகரிஷி, ‘பெருமாளே! இந்த மலை எதற்கு?’ என்றார். ‘இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக’ என்றார் பெருமாள். அதற்கு மகரிஷி, ‘இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் குழலோசையிலே பிரபஞ்சத்தை எல்லாம் மயக்கி பக்திபரவசத்தை ஊட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சி தர வேண்டும் ’ என்று வேண்டினார். பெருமாளும் அவ்விதமே ருக்மணி- சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனாக காட்சியளித்தார். இப்படியாக பத்து அவதார திருக்கோலங்களையும் கண்டு மகிழ்ந்த மகரிஷியைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்திதானே?’ என பெருமாள் கேட்க, ‘கிடந்த (சயன) திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் அருள்பாலித்த தாங்கள், இத்தலத்திலேயே அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளித்து கலியுக காலத்தில் மக்கள் தங்களது திருக்காட்சியைக் கண்டு பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டும்’ என்றார், மகரிஷி.
தனக்கென எதுவும் கேட்காமல், உலக மக்களுக்காக வேண்டியதால், அமர்ந்த கோலத்திலும் அவருக்கு காட்சி தந்தார் பெருமாள் என்கிறது மற்றொரு வரலாறு. இத்திருத்தலத்தில் மகா விஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள்.
ஆலய அமைப்பு : இந்த ஆலயம் பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு, சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கீழ்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு, கி.பி. 1884-ம் ஆண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது. ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது.
பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார். மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி உள்ளது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து காத்து நிற்கிறார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப பெருமாள் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி இருக்கிறது.
சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் துயில் கொண்ட (கிடந்த) கோலத்தில் சயனராமர் காட்சி தந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார். அவரது திருமார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.
இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.சூரிய- சந்திரர் வழிபாடு : கிருஷ்ணராகவும், ராமனாகவும், பெருமாளாகவும் இத் தலத்தில் திருக்காட்சித் தரும் திருமாலை, பக்தர்கள் மட்டுமின்றி சூரியனும் சந்திரனும் வழிபடுவது மிகச்சிறப்பான நிகழ்வாகக் கூறலாம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்கள், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார்.
அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும். இப்படி சூரியனும் சந்திரனும் ஒருசேர வழிபடும் திருத்தலங்கள் மிகச்சிலவே. அதிலும் வைணவ ஆலயங்களை காண்பது அரிது. அந்த குறையைப் போக்குகிறது இவ்வாலயம். அமைவிடம் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Sunday, December 28, 2025

திலதர்ப்பணபுரி ஸ்ரீமுத்தீஸ்வரர் ஸ்ரீராமர் செய்த பித்ரு வழிபாடு !!

பித்ரு சாபங்கள் போக்கும்  திலதர்ப்பணபுரி ஸ்ரீமுத்தீஸ்வரர்                                              
ஸ்ரீராமர் செய்த பித்ரு வழிபாடு !!

உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் தங்களை பெற்ற தாய் தந்தையருக்கும்  முன்னோருக்கும்  செய்ய வேண்டிய  பித்ரு கடமைகள்  அவசியமானவை.  மாதா மாதம் அமாவாசை அன்றும் பிறகு வருடம் தோறும் அவர்கள் இறந்து போன  திதியன்றும்  முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய நீத்தார் காரியங்கள் எனப்படும் பித்ரு காரியங்கள் செய்ய சொல்லி சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்துகின்றன.

அப்படி பித்ரு காரியங்களை சரி வர செய்யாத குடும்பங்களில் வாழ் நாள் முழுக்க துன்பங்களும் துயரங்களும்  வரிசை கட்டி வந்து நிற்பதை நாம் எவ்வளவோ குடும்பங்களில் பார்க்கிறோம். 

எனவே பித்ரு காரியம் என்பது மிக முக்கியமானது என்பதை அறிய முடிகிறது.  பித்ரு சாபத்தால்தான் உனது குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினைகள் என்று ஜோசியர்கள் கூறுவதையும் நாம் காண முடிகிறது. 

அப்படிப்பட்ட பித்ரு காரியங்களை செய்ய தமிழகத்தில் பிரபலமான ஆலயங்கள் இருக்கின்றன.  அவை ராமேஸ்வரம்  கோவில், பவானி  கூடுதுறை கோவில், திலதர்ப்பணபுரி, திருப்பூந்துருத்தி என பல ஆலயங்கள் உள்ளன.

அவற்றில்    திலதர்ப்பணபுரி என்று வழங்கப்படும் திலதைப்பதி திருத்தலம் பற்றி கீழே காணலாம். 
  
வனவாசம் முடிந்து, பட்டாபிஷேகமும் நடந்து, அயோத்தி மாநகருக்கு மன்னனானார் ஸ்ரீராமர். ஆனாலும் அவர் தீர்க்கவேண்டிய கடன் ஒன்று இருந்தது. அது, நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்குச் செய்யும் ஆராதனை. வனவாச காலத்தில் ஸ்ரீராமர் இருந்தபோது, தந்தையார் தசரத மகாராஜா இறந்துவிட்டார். வனவாச காலமான 14 வருடங்களும் ஸ்ரீராமர் தன் தந்தைக்குத் தர்ப்பணம் செய்யவில்லை.

பட்டாபிஷேகம் முடிந்து, எத்தனையோ புண்ணியத் தலங்களுக்குச் சென்று, எவ்வளவோ தான- தருமங்கள் செய்தாலும், எதுவும் பலன் அளிக்கவில்லை. தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள் எல்லாம், தர்ப்பணம் முடிவதற்குள்ளாகவே புழுக்களாக மாறின. தந்தையின் ஆத்மாவுக்குச் சாந்தியளிக்க முடியவில்லையே எனும் வேதனையில் அமைதியின்றித் தவித்தார் ஸ்ரீராமர். 

தந்தைக்கு இறுதிக்கடன் அளிக்கமுடியாத தனது வருத்தத்தை, சிவனாரிடம் முறையிட்டு வேண்டினார். *'பூலோகத்தில் மந்தார வனத்துக்குச் செல்; அங்கே, தர்ப்பணம் செய்தால், தந்தையின் ஆன்மா ஏற்கும்; அமைதியுறும்’* என அருளினார் ஈசன்.

அதன்படி, மந்தார வனத்துக்கு வந்த ஸ்ரீராமர், நீராடி விட்டு, தந்தைக்கு ஆத்மார்த்தமாகத் தில தர்ப்பணம் செய்யும் காரியத்தில் ஈடுபட்டார் (தில என்றால் எள்). வழக்கம்போல் பிண்டம் வைத்துவிட்டு, கண்மூடி மந்திரங்கள் சொல்லிவிட்டுக் கண் விழித்தவர், ஆச்சரியத்தில் அசந்துபோனார். அங்கே அவர் வைத்த நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாகக் காட்சி தந்தன என்கிறது ஸ்தல புராணம்.

இதற்குச் சாட்சியாக, இன்றைக்கும் தரிசனம் தருகின்றன அந்த நான்கு சிவலிங்கங்களும் ! காசி, ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான இந்தத் தலத்துக்கு வந்து பித்ருக் கடனை அடைப்பவர்களுக்கு முக்தி வழங்கி அருள்கிறா ர்ஸ்ரீமுக்தீஸ்வரர்.

ஸ்ரீராமர் தில தர்ப்பணம் செய்து வழிபட்ட அந்தத் திருத்தலம், திலதர்ப்பணபுரி. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது பூந்தோட்டம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தென் கயிலாயம் எனப்போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.  

இந்தத் தலம் நித்திய அமாவாசை தலம் எனப் போற்றப்படுகிறது. அதாவது, காசி, ராமேஸ்வரத்தை அடுத்து இங்கு தான் சூரியனும் சந்திரனும் அருகருகில் காட்சி தருகின்றனராம். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பது தானே அமாவாசை ?! 

ஆகவே, எல்லா நாளும் இங்கு அமாவாசைக்கு இணையானவை; இங்கே தர்ப்பணம் செய்வதற்கு நாள், நட்சத்திரம், திதி எதுவும் பார்க்கத் தேவையில்லை; எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம் என் கின்றனர், பக்தர்கள்!  

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனச் சிறந்து விளங்கும் இந்தக் கோயிலில், ஸ்ரீஆதிவிநாயகர் எனும் திருநாமத்துடன், நர முகத்துடன் தும்பிக்கையின்றிக் காட்சி தருகிறார் கணபதி.

ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின அல்லவா ?! அவை பித்ரு லிங்கங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. இந்த லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீராமரின் திருவிக்கிரகமும் அமைந்துள்ளது. நற்சோதி மகராஜா இந்த ஆலயத்தைச்  செப்பனிட்டு, பித்ருக்களுக்கான கடனைச் செய்தார். எனவே, அவரது சிலையும் இங்கே உள்ளது.

திருஞானசம்பந்தப் பெருமானால் *'திலதைப் பதி’* எனப் போற்றப்பட்ட அற்புதமான இந்தத் தலத்துக்கு வந்து, பித்ரு காரியங்களைச் செய்து, ஸ்ரீமுக்தீஸ்வரரையும் ஸ்ரீசொர்ணவல்லி அம்பாளையும், பித்ரு லிங்கங்களையும் வணங்கி வழிபட்டால், நம் பாவங்கள் மட்டுமின்றி, நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்; மறுபிறப்பற்ற நிலையை அடையலாம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமந்தார வனேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் மற்றும் ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீசௌந்தர்ராஜபெருமாள் ஆகியோரும் காட்சி தருகின்றனர். அஷ்டமா ஸித்திகளை உணர்த்தும் வகையில் எட்டுப் படிகளுக்கு மேலே ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருவது, காண்பதற்கு அரிதான ஒன்று எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்.

தினமும் அதிகாலையில், கோ பூஜை செய்தபிறகே பூஜைகள் துவங்குகின்றன. புராண- புராதனப் பெருமைகள் கொண்ட திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, ஒரேயரு முறை தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால், 27 தலைமுறைக்கான புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இங்கே, பித்ரு தோஷத்துக்காக தீபமேற்றியும் யாகம் செய்தும் வழிபட்டுப் பரிகாரம் செய்வது விசேஷம்.

இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீஆதிவிநாயகர் மட்டும் என்னவாம் ?! அருளையும் ஞானத்தையும் அள்ளித் தரும் வள்ளலெனத் திகழ்கிறார் விநாயகப் பெருமான். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்குச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

பூலோகத்தைக் *'கர்ம பூமி’* என்கின்றன இதிகாசங்கள். பித்ருக் கடன், ரிஷிக்கடன், தேவக்கடன் என மூன்று வகை கடன்களுடன் வாழ்ந்து வருகிறது, மனித இனம். இறை வழிபாட்டுடன் அற வழியில் ஈடுபட்டுச் சேவையாற்றி வந்தாலும், பித்ருக் கடனைத் தீர்க்கவில்லையெனில், எந்தப் பலனும் இல்லை என்கிறது வேதம்.

ஆகவே, திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, பித்ருக்கடனை அடைப்போம்; பிறப்பற்ற நிலையை அடைவோம் !

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகுடி, சரபோஜிராஜபுரம்

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகப் போற்றப்படுவது வைத்தீஸ்வரன்கோவில். இதைத் தவிர வேறு சில சிவத்தலங்களும், வைணவத்தலங்களும்கூட செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரத் தலங்களாக பக்தர்களால் வழிபடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருச்சிறுகுடி என்ற இத்தலம்.  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

    இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
    இறைவி பெயர்: மங்களநாயகி

 எப்படிப் போவது?

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து, அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி, சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்துக்கு வர சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்

சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல்

வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 609 503.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

தல வரலாறு

ஒருமுறை, கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்துவிட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்துவைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக்கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.
 


திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால், இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர், மங்களநாதர் என்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதி உள்ளது. நவகிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு, மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவகிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாகத் தோற்றமளிக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
 


முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் திருமேனி சிறியது. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவே உள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. அம்பாள் மங்களநாயகிக்குத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரை காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
 


உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி அளிக்கிறார். பார்த்து ரசிக்க வேண்டிய திருஉருவம்.. இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது.


செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்குவந்து வழிபட்டால், அங்காரக தோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது விசேஷமானது. ஆலயத்துக்கு வெளியே, நேர் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.
 


திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகுக்கு அப்பால் உள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 11-வது பாடலில், தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி என்று பாடியுள்ளார். அந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் இறைவனுக்கு முன் உள்ள மண்டபத்தில் ஒரு தேன்கூடு இருப்பதைப் பார்க்கலாம். சாளரம் அமைத்து அதன் வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்துபோகுமாறு செய்துள்ளனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

கருப்பூந்துறையில் அய்யன் ஸ்ரீ அழியா பதிஈஸ்வரர்...

🙏நெல்லுக்கே வேலியிட்டு காத்த நெல்லையப்பர்..
🙏மங்காத புகழும், செல்வமும் அருளும் அழியாபதி ஈஸ்வரர்
   
🙏வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி மாநகரத்தில் நெல்லுக்கு வேலியிட்டு காத்த எம்பெருமான் காந்திமதி உடனுறை நெல்லையப்பர் அரசாளும் நெல்லையில், கருப்பூந்துறையில் வீற்றிருந்து அருட்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அய்யன் ஸ்ரீ அழியா பதிஈஸ்வரர் தன்னை அடிபணியும் அன்பர்களுக்கு மங்கா புகழும் அழியா செல்வமும் தந்தருள்கிறார். 

🙏இத்தலம் கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஊழ்வினை அகற்றும் ஸ்தலமாகும்.

🙏அழியா பதி ஈசன் என்ற நாமம் கொண்ட சிவன் கோயில் இது மட்டும் தான். 

🙏இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தட்சன் நடத்திய யாகத்தின் போது ஈசனை அழைக்காமலும் அவருக்குக் கொடுக்க வேண்டிய அவில்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான். அதனால் சினம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், தட்சனை தண்டித்து விட்டு, அந்த உக்கிரத்தோடு அக்கினி பிளம்பாக தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார். அவருடைய உக்கிரமான பார்வையின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகில் உள்ள கரிக்காதோப்பு கருங்காடு வரையிலான வயல் வெளிகள் யாவும் தீக்கிரையானது. (இதனால் கரிக்காதோப்பு, கருங்காடு எனவும் இன்றுவரை இப்பகுதிகள் அழைக்கப்படுகிறது)

🙏ஈசனின் உக்கிரமான பார்வையின் காரணத்தினால் வயல் பகுதிகள் அனைத்தும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. இதனையறிந்த மகரிஷிகள் கருங்காடு ஊர் எல்லையில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அதன் பிறகு அக்னி.
அப்பகுதியோடு நின்றது. அதன் மேல் தொடர்ந்து பரவவில்லை. இதன் காரணமாக அந்த லிங்கேஸ்வரர் ‘பரவா எல்லை நாதர்’ என்றழைக்கப்படுகிறார்.
கோரக்க மகரிஷி ஈசனை வழிபட முயன்றார் ஈசன் அக்னிஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரமான காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்னீஸ்வரரை சாந்த படுத்துவதற்காக ஈசன் அமர்ந்திருந்த மண்டபத்தின் நேர் எதிரே கிழக்கு முகமாக கோரக்க சித்தர் தலைமையில் பௌர்ணமி அன்று கூடிய ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்து ஈசனின் சினம் தணிய வைத்து, அவ்விடமே லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தனர்.

🙏நெல்லையம்பலத்தை அழியாமல் காத்தருள் புரிந்த இத்தல ஈசன். அன்று முதல் ‘‘அழியா பதி ஈஸ்வரர்’’ என்ற நாமத்தில் வணங்கப்பட்டு வந்தார்.

🙏தாமிரபரணி நதிக்கரையோரம் மேற்கு பார்க்க அக்னீஸ்வரர் ஆகவும் கிழக்குப் பார்க்க அழியா பதி ஈஸ்வரராகவும்  எதிர் எதிரே அமையப்பெற்ற சிறப்புமிக்க ஸ்தலம் இது. மேலும் தாமிரபரணி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் உத்திரவாகினி ஸ்தலம் எனவும் இத்தலம் பெயர் பெற்றது.
 
🙏நெல்லையம்பதியை அழியாமல் பாதுகாக்க 

🙏போகர், 

🙏புலிப்பாணி, 

🙏கருவூர்சித்தர் மூவரும் கோரக்கர் உடன் இணைந்து அழியாபதி ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்துள்ளனர். 

🙏(அழியா பதி ஈஸ்வரனுக்கு வலதுபக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மூன்று அடுக்கு தீபங்களில் மேல் ஸ்தானத்தில் உள்ள இரு தீபங்கள் மட்டும் ஈசன் விடும் மூச்சுக் காற்றில் இடைவிடாமல் அசைவதை காணலாம்.

🙏ஈஸ்வரனுக்கு வலதுபுறம் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ள 
அன்னை சிவகாம சுந்தரி என்ற சவுந்தரிய வள்ளி கருவறையின் அமைப்பு தெற்கு நோக்கியும், ஐயனை நோக்கி தலை சாய்ந்த வண்ணமும் பார்வை ஐயனின் மீதும், அடியார்களின் செவிமடுத்து கேட்டு அவரிடம் எடுத்துரைப்பது போலவும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் நின்ற வண்ணம் அருட்பாலிக்கிறாள். 

🙏சித்தர்கள் அடிக்கடி வாசம் செய்யும் ஸ்தலமாக இவ்வாலயம் உள்ளது. கோரக்க சித்தரின் பீடமும் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. மேலும் இவ்வாலயத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், பைரவர், சண்டிகேஸ்வரர் சாஸ்தா ஆகிய தெய்வங்கள் தனித்தனியாக சந்நதி கொண்டு அருட்பாலிக்கின்றன.

💐இவ்வாலயத்தில் சித்திரை முதல் நாள்,
ஆடிபூரம், ஐப்பசி திருக்கல்யாணம், தை மாதப்பிறப்பு, திருக்கார்த்திகை, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. மாதந்தோறும் தமிழ் மாத பிறப்பு, பிரதோஷம், அமாவாசை, தேய்பிறை, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிறுதோறும் ருத்ர ஜபம், திருவாசகம், முற்றோதுதல் உழவாரப்பணி நடைபெறுகிறது. வெள்ளிதோறும் கோபூஜை நடைபெறுகிறது.இத்தகைய சிறப்பு பெற்ற ஈசனின் ஆலயத்திற்கு அவசியம்  அன்புடன் அழைக்கிறோம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மங்கள சனி சங்கர நாராயணர் திருக்கோவில் காரையூர்

*மங்கள சனிபகவான் கோவில் (என்ற) சங்கர நாராயணர் திருக்கோவில்*
*சனிபகவான் வாசல்*

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காரையூர். 

இறைவன் திருநாமம் சங்கர நாராயணர். இறைவி நாராயணி அம்பாள். மந்தன், சாயாபுத்திரன், நீலன், காரி என்ற பெயர்களைக் கொண்ட சனிபகவான் இந்த ஸ்தலத்தில் தங்கியதால் காரையூர் என்ற காரணப்பெயருடன் மக்களது சொல்வழக்கில் அழைக்கப்படுகிறது.
கும்பகோணத்திற்கு வரும்போது காவிரி, அரசலாறு, வெட்டாறு என இரண்டாகப் பிரிந்து பாய்கிறது. இதில் வெட்டாறு, திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரி என்ற ஊரில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை, வளைத்தபடி வருவதால் 'விருத்த கங்கா' என்று பெயர் பெறுகிறது.

ஒருமுறை, நளமகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். திருநள்ளாறை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கி விட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங்கினார் சனிபகவான்.
இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழி பட்டதால், 'சனிபகவான் வாசல்' என்ற திருப் பெயர் கிடைத்தது. சிவபெருமான் என்ற மங்களனை, சனிபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு மங்கள சனிஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது.

நவக்கிரகங்களோடு நிற்கும்போது மேற்கு முகம் பார்த்தவராக அருள்தரும் சனி, இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. 

தொழில், வியாபார முயற்சிகளில் தடைகள் இருப்பின் ஞாயிறு மற்றும் அமாவாசை தினங்களில் வந்து விருத்த கங்காவில் நீராடி நீலக்கரை வேஷ்டி தானம் செய்து சனிஸ்வரனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையை நீலமலரால் செய்து எள் சோறு, வெண்பொங்கல் படைத்திட நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திர திருநாளில் காலையில் இந்த திருத்தலத்துக்கு வந்து,  வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

சனி தோஷம் நீக்கும் தலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Saturday, December 27, 2025

மாதேஸ்வரன்மலை மாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு..


#மாதேஸ்வரன்_மலை
#மாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
மாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் உள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். இந்த திருத்தலத்தின் பரப்பளவு 155.57 ஏக்கர் ஆகும். மாதேஸ்வரன் மலையில் தலபேட்டா, கலவவூர், இந்திகநாதா, போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கே வரும் மக்கள் கோயிலுக்கு வருவதோடு இங்கேயுள்ள இயற்கையை ரசிக்கவும் வருகிறார்கள். இந்த மலையின் உயரம் 3000 அடி ஆகும். மாதேசுவரன் கோவிலைக் கட்டியவர் ஜீன்சே கெளடா, மற்றும் குருபா கெளடா என்ற ஜமின்தார்கள் ஆவர். ஸ்ரீ மாதேஸ்வர கடவுளை, சிவனின் ஒரு அவதாரம் என மக்கள் கருதுகிறார்கள். புனித மாதேஸ்வரா அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறனர். 600 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ மாதேஸ்வரன் இத்திருத்தலத்திற்கு வந்து அவர் தன் பாவத்திற்குப் பரிகாரம் பெற்றார். இப்பொழுதும் அவர் பரிகாரம் தருகிறார் என மக்கள் நம்புகிறார்கள்.மலை மாதேஸ்வரன் புலியின் மேலிருந்து பயணம் செய்தார். அந்த வாகனத்தைச் சில பேர் குழி வாகனா எனவும் கூறுவார்கள். மலை மாதேஸ்வரன் பல அற்புதங்கள் செய்து மக்களைக் காப்பாற்றியதால் `இங்கே உள்ள மக்கள் இன்னும் மலை மதேஸ்வரன் அந்த மலையின் பகுதியிலே வசிக்கிறார் என நம்புகிறார்கள். கிராமத்து மக்கள் மலை மாதேஸ்வரனின் அற்புதங்களைப் பாட்டாக பாடுகின்றனர். அதை ஜனபத காவியம் அல்லது நாட்டுப்புறக்காப்பியம் எனக் கூறுவார்கள்.

 

மூலவர்: மாதேஸ்வரர்
(மலை மாதேஸ்வரர்) 
ஊர்: மாதேஸ்வரன் மலை
மாவட்டம்: கொல்லேக்கல்
மாநிலம்: கர்நாடகா

தல வரலாறு:

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான காடும், மலையும் கர்நாடக மாநிலத்தில் வந்து சேர்கின்றன. இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம்  நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன் ‘சித்தநஞ்ச தேசிகர்’ என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு ‘சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.

அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத்  தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி  ஏற்பட்டுள்ளது.

எனவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான்.  விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.

பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த  மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.

இப்படியெல்லாம் செய்து அந்த மலைவாழ் மக்களிடமும், மற்ற ஊர் மக்களிடமும் பேரும், புகழும் பெற்றான். நன்கு முதிர்ச்சியடைந்த மாதேஸ்வரனை மீண்டும் மாதேஸ்வரன் மலையில் இருந்த பழைய குருவிடமே அனுப்பி வைத்தார் ஆதிகணேச குரு. மீண்டும் மாதேஸ்வரன் மலைக்கே வந்த மாதேஸ்வரனின் பாதம் பட்டதும் அங்கே இருந்த சிறுசிறு குன்றுகளெல்லாம் சம நிலங்களாயின. காய்ந்து போயிருந்த பூச்செடிகள் எல்லாம் துளிர்விட்டன. மரங்கள் பசுமை போர்த்துக்கொண்டன. அங்கே தெய்வீக மணம் கமழ்ந்தது. குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே  உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்த மாதேஸ்வரனுடைய பக்தர்களும், பக்தர்களின் வம்சாவழியினரும் ஒன்று சேர்ந்து ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்தக் கோயில் காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மூன்று அற்புத ஆலயங்களாக இன்று அமைந்துள்ளது. மூலக் கருவறைக்குள்ளே மாதேஸ்வர சிவலிங்கம் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்திருக்க தெய்வீக ஒளியுடன் மிக அற்புதமாக தங்கக்காப்புடன் பளீரென்று மின்னுகிறது. மைசூர் மன்னராக இருந்த ஸ்ரீஜெயசாம்ராஜ உடையார் பகதூர் ஸ்வாமிகள் ஸ்ரீமாதேஸ்வரன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த மலையில் பக்தர்கள் வந்து தங்குவதற்கு இருப்பிட  வசதிகள் செய்து கொடுத்தார். பல ஏக்கர் புன்செய் நிலங்களையும் விலைமதிப்பில்லாத அளவுக்குத் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் நிவந்தனமாகக்  கொடுத்துள்ளார்.

இவருக்குப் பிறகு ஜீஞ்சே கவுடா என்ற குருபர் இனத்து மலைவாழ் பக்தர் இக்கோயிலை மேலும் சீரமைத்து அற்புதமாக்கினார். அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

மலை மாதேஸ்வரனின் கதை:

மலை மாதேஸ்வரன் கலியுகத்தில் பிறந்தார். அவர் வெள்ளையாக இருப்பார். இவரின் அம்மையாரின் பெயர் யுட்ராஜமா. இவரை சிறுபிள்ளையில் வழிநடத்தியவர்கள் சுட்டூர்மூட் மற்றும் குன்டூர்மூட் ஆவார்கள். இவர் ஸ்ரீ கையிலா என்ற பகுதியில் இருந்து வந்தவர் என நம்பப்படுகிறது. இவர் சிறு வயதியிலே பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். பிறகு தான் இவர் மலைப் பகுதிக்கு வந்துள்ளார் என நம்பப்படுகிறது. அந்தக் காட்டுப் பகுதியில் 77 மலைகள் உள்ளன. அது மிகவும் ஆபத்தான பகுதி எனக் கருதப்படுகிறது. அவர் ஆறாம் நூற்றாண்டில் அவர் காட்டுப் பகுதிக்குச் சென்றதாக வரலாறு கூறுகிறது. 50 வருடத்திற்கு முன்பு இந்த மலைக்குச் சாலை வசதி இல்லை. அதனால் இங்கே வரும் பக்தர்கள் பெரும்பாலும் நடந்து தான் வந்தார்கள். ஆனால் இப்போது சாலைகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளால் போடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.

குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள். குறிப்பாகத் தங்கத்தேர் ஊர்வலம் சகல நன்மையையும் அளிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்காவில் மலைமீது 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்:

பெங்களூரிலிருந்து 210 கி.மீ.; மைசூரிலிருந்து 140 கி.மீ.; கொள்ளேகாலிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சேலம், மேட்டூர் அணை, கொளத்தூர் வழியாக 4 மணிநேர பயணத்தூரத்தில் இந்த கோயிலை அடையலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, December 25, 2025

திருஐயாறு, திருவையாறு, பஞ்சநதக்ஷேத்திரம் முழு வரலாறு.



மூவராலும் பாடல் பெற்ற சோழநாடு காவிரி வடகரை சிவ திருத்தலம் [அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளியப் பதி]
51. திருஐயாறு 🌹

 

சிவஸ்தலம் பெயர்

திருஐயாறு, திருவையாறு, பஞ்சநதக்ஷேத்திரம், தென் கைலாசம்

இறைவன் பெயர்

ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.

இறைவி பெயர்

தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி, அறம்வளர்த்த நாயகி

தல விருட்சம்       

வில்வம்

தீர்த்தம்             

சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி

தேவாரப் பாடல்கள் 🌹

சம்பந்தர்

1. கலையார் மதியோடு (1-36)

2. பணிந்தவர் அருவினை (1-120)

3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130)

4. கோடல் கோங்கங் (2-6)

5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32)

அப்பர்

1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3)

2. விடகிலேன் அடிநாயேன் (4-13)

3. கங்கையை சடையுள் (4-38)

4. குண்டனாய்ச் சமணரோடே (4-39)

5. தானலா துலக மில்லை (4-40)

6. அந்திவட் டத்திங்கட் (4-99)

7. குறுவித்த வாகுற்ற (4-91)

8. சிந்திப் பரியன (4-92)

9. சிந்தை வாய்தலு (5-27)

10. சிந்தை வண்ணத்த (5-28)

11. ஆரார் திரிபுரங்கள் (6-37)

12. ஓசை யொலியெலா) (6-38)

சுந்தரர்

1. பரவும் பரிசொன் (7-77)

வழிபட்டோர்கள் 🌹

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் , திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி,  சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர் முதலியோர்.

திருவிழாக்கள் 🌹

மகா சிவராத்திரி

சித்திரைப்பெருந்திருவிழா (சப்தஸ்தான பெருவிழா)

ஆடி அமாவாசை (அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா)

 அமைவிடம் 🌹

திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி 🌹

அருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில்
திருவையாறு அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 613204.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 🌹

 சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. அவரது தந்தை குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால் நந்தி வாய்நுரைநீர் அமிர்தம் சைவ தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். நந்திகேசர் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்து கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஏழுகோடி முறை ஓம் நமசிவாய உருத்திர ஜபம் செய்தார். தவத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும் சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியையும் அருளினார். அத்துடன் இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் மகளை சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமணம் செய்துவைத்தார். சுந்தரரும் சேரமான் நாயனாரும் அக்கோவில் இறைவனை தரிசிக்க வரும்போது காவிரியின் இரு பக்கத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடியதும் வெள்ளம் ஒதுங்கி நின்று இருவருக்கும் வழி தந்தது.

கோவில் அமைப்பு 🌹

திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.
இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது. இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

திருப்புகழ் தலம் 🌹

இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.

அப்பர் கண்ட கைலாயம் 🌹

திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்

மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும்.

இறைவன் ஆதி சைவராக வந்தது 🌹

 திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர்.

சிறப்புகள் 🌹

ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப்பெயர் பெற்றது.

 பஞ்சநதக்ஷேத்திரம; இது ஐந்து புனித நதிகள் (கங்கை, காவிரி, கௌதம நதி, நந்தி தீர்த்தம், பலாறு) சங்கமிக்கும் இடமாக இருப்பதால் இந்த பெயர் வந்தது.

சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.

 சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

சப்தஸ்தானத் தலங்களாக திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் தலமான திருவையாறில் சித்திரை மாதம் பௌர்ணமி விசாகத்தில் சப்தஸ்தான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஏழு ஊர் இறைவனும் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர்..

இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம்.
நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தனைத்தானே பூசித்தது ஆத்மபூஜை என்ற உத்ஸவம் நடக்கிறது.இப்பெருவிழாவின் இறுதியில் சப்தஸ்தான உத்ஸவம்(ஏழுர்த்திருவலம்) மிகப்பிரபலம்.

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார்.

பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே இந்த ஆட்கொண்டாரின் உருவம்.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும்.

மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தென் கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது.

சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவீழிமிசலையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இக்கோவில் குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளார்.

எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.

                      ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருமுறை தலங்களில் முதல் தலமான, பஞ்சபூத தில்லை நடராஜர் கோயில்.


உலகப் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற திருமுறை தலங்களில் முதல் தலமான, பஞ்சபூத ரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களில் இத்தலம் முதலாவது சிவதலமாகும்.

இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. 

இக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி பஞ்சகிருத்திய பரமானந்தத்தாண்டவம் எனும் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) நிகழ்த்தும் தன்மையால் ஸ்ரீ ஆனந்த நடராஜமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார். இத்தாண்டவத்தை முழுமையாக அனுபவிப்பவள் அன்னை சிவகாமி ஆவாள். இவ்வன்னை இக்கோயிலின் பிராணமய கோசப் பிரகாரத்தில் (சிவகங்கை தீர்த்தத்திற்கு மேற்கில் கீழ்த்திசை ஸ்ரீவகாமகோட்டம் உறை ஞானசக்தியாய் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையாய் அருள்பாலிக்கின்றாள். இது அம்பிகையின் மூலத்தானமாகவும் விளங்குகின்றது.
#புராண பெயர்(கள்):
தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்

#பெயர்: சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
#ஊர்: சிதம்பரம்
#மாவட்டம்: கடலூர்
#மாநிலம்: தமிழ்நாடு
#நாடு: இந்தியா
#மூலவர்: திருமூலட்டானம் _திருமூலநாதர் (மூலட்டானேஸ்வரா்)

#உற்சவர்: நடராஜா் (கனகசபைநாதா்)
#தாயார்: உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)
#தல 
விருட்சம்: தில்லைமரம்

#தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்

*வழிபட்டோர் : 

நந்தனார்,சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்,ஆதிசங்கரர், அருணகிரிநாதர்,
திருமூலர்

பாடல் வகை: 
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா 

*பாடியவர்கள்: 

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வள்ளலார் 

#தேவாரப் பதிகங்கள்:

"அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
___திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை 

#அருணகிரிநாதர் அருளிய சிதம்பரம் திருப்புகழ்:

"இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
     னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
     நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
     இடுகாட்டி னெல்லை ...... நடவாத

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
     வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
     மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

_அருணகிரிநாதர்

*#சிதம்பரம் என்னும் தில்லை: 
'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.

வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெயர்பெற்றது.எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய (சிறு) ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அமைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம் - நுண்ணிய ஞான வெளி.இது தஹராகாச க்ஷேத்திரமாதலால் சிதம்பரம் (சித் + அம்பரம் - சித்தமாகிய பெருவெளி) என்று அழைக்கப்படுகிறது.

முன்னொருகாலத்தில் மத்தியந்தனமுனிவர் என்பவர், தாம் தவஞ்செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவுநூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார். பிள்ளையின் விருப்பத்தையுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக்கண்டு பெருமகிழ்வு கொண்டார். அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர், தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம்மலர்களுள் பழையனவும் பழுதுபட்டனவுமான மலர்கள் கலந்து இருக்கக் கண்டு வருந்தினார். பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின் றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம்செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை, மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார். முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களையுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்” என வேண்டினார். எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டியவண்ணம் வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்றுமுதல் அவர் வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவே நீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடையதாயிற்று. 

வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தனமுனிவர் தில்லையையடைந்து வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிர பாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி. இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த. தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச்சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார். பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்தனர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு உணவையுண்ணாது பசிதாங்காது. அழுவதாயிற்று. அதுகண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து வேண்டினர். எல்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார், உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது. 

வியாக்கிரபாதர்  சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம் பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன்கண்ணே தான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார். 
திருமால், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொண்டு தேவதாரு வனத்தில் தாம்கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப்புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையாயிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெருமகழ்ச்சிக்கக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெருவேட்கை அடைந்தான். ஆதிசேடன் தன்மகன் அனந்தன் என்பவனைக் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், "எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் கோண்டு உள்ளான். உன்னைப்போன்றே எனது திருக்கூத்துனைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள்புரிவோம்'' என்று கூறி மறைந்தருளினார். ஆதிசேடன் பதஞ்சலி முனியாகிப் புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும். திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான்.

சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார். அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகின்றது.  திருமால்,பிரமன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான்.அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.
இக்கோவிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய (பஞ்ச சபை) 
1. சிற்றம்பலம், 
2. பொன்னம்பலம் (கனகசபை), 
3. பேரம்பலம், 
4. நிருத்தசபை, 
5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.

இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்திருக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன், விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
“பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோவிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோவிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்”. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானை ஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.இத்தலம் பன்னிரண்டு திருமுறைகள் அனைத்திலும் பாடப்பட்டுள்ள தலமெனும் பெருமையைக் கொண்டதாகும்.

#சிவகாம_கோட்டம்:

இறைவனின் நடனத்தை நாதாந்த நாடகம் என்று ஞானிகள் மொழிவர். இதனை நன்கு அனுபவித்து அகிலத்திற்கு உணர்த்துபவள் இந்த அன்னை சிவகாமியே ஆவாள். இச்செயல்,
 "பாலுண் குழவி பசுங்குடர் பெறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கே' என்று குமரகுருபர சுவாமிகள் தம் சிதம்பர மும்மணிக் கோவையில் மொழிவார். இதில் தாய் என்பது அன்னையையும், குழவி என்பது உலக உயிர்கள் எனவும் குறிக்கப்பெறும். இதன் மூலம் அன்னை சிவகாமியே ஜீவராசிகள் அனைத்திற்கும் தாயாம் தன்மையொடு உலக பேரியக்கச் சக்தியாக விளங்கும் தன்மைப் புலப்படும். உயிர்களெல்லாம் பிறவிப்பயனை எளிதாய்ப் பெற, பேரருள் புரிபவள் இந்த ஞானசக்தியே ஆவாள்.

இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம்  என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன்  அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.

சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.

இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு  சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

*இச்சாசக்தி: 
ஸ்ரீ நடராஜர் சந்நிதியில் அன்றாடம் நிறைவு பூசையாகிய இரவு அர்த்த சாம பூஜையின் போது இறைவனின் ஸ்ரீ பள்ளியறையில் அம்மனாய் அமர்ந்து உள்ளவள். இவள், சிவபோக சுந்தரி எனவும் அழைக்கப்பெறுபவள் ஆவாள்.
 
*கிரியாசக்தி: பொற்சபையில் பொற்புறு நடனம் பயிலும் ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உடனுறை தேவியாக இடப்பாகந்தன்னில் உறைபவள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆவாள்.

*ஞானசக்தி: 

இச்சக்தியே ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை என வழங்கப் பெறுகிறாள்.

இந்த ஞானசக்தி அம்பிகைக்கு ஆண்டு தோறும் ஐப்பசிப் பூரத் தினத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும். இத்திருவிழாவைப் பாலிவளத் திருநாள் (பூரச்சலங்கை) எனவும் அழைப்பர். இம்மூவகை சக்திகளும் இணைந்த நிலையே அன்னை பராசக்தி, மகாசக்தி என்பர் மகான்கள். இவர்கள் முறையே, ஆன்மாக்களின் மும்மலங்களையும் அகற்றி தனு, கரண, புவன, யோகங்களைத் துய்த்திடச் செய்து பேரருள் பொழிபவள் ஆவாள்.

#ஸ்ரீசிவகாமசுந்தரி உறையும் சிவகாமக் கோட்டம்: 

கி.பி.1118 முதல் 1136 வரை சோழ வளநாட்டை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் கற்றளியாக்கினான். இவனுடைய சேனாதிபதியாய் விளங்கியவன் மணவிற் கூத்தன் காளிங்கராயன் ஆவான். இவன் இக்கோட்டம் பீடுற இக்கோயில் சூழ்ந்த திருச்சுற்றும் (பிரகாரம்) திருமாளிகைப்பத்தியும் அமைத்தான்.
 மேலும் முன்கூறிய விக்கிரமசோழன் மகன் 2-ஆம் குலோத்துங்கன் தம் காலத்தில் இக்கோட்டம் மிகவும் விரிவுடையதாய்ப் புதுக்கி இங்குறை அன்னை தாம் பிறந்த இமய வெற்பையும், மறக்கும் நிலையில் சிறப்பாக அமைத்த நிலை சிறப்பிற்குரியது ஆகும். இதனால் இவன் ஸ்ரீ பீடங்கண்ட பெரிய பெருமாள் என்று போற்றிப் பாராட்டு பெற்ற நிலை "நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப' எனும் வரிகளால் தக்கயாகப் பரணியில் குறிக்கப் பெறுகிறது. இச்சிறப்புகளொடு இரண்டடுக்குள் கொண்ட திருமாளிகைப்பத்தி, கீழ்க்குறடுகளில் பரத நாட்டிய நுட்பங்கள், பண்டைய இசைக்கருவிகள், கற்சிற்பங்கள், முன்மண்டப தென் வட பகுதிகளில் மேலே வரையப் பெற்றுள்ள காவி நிறம் கொண்ட இன்றளவும் மெருகு குறையாத பழங்கால ஓவியங்கள், இக்கால நுண்கலை வினைஞர்களும் கண்டு வியக்கும் தன்மையில் அமைக்கப் பெற்றுள்ளன.
 கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் நித்ய பூஜையில் ஏற்படும் குறைகள், நைமித்தக பூஜை என்னும் பிரம்மோற்சவம் (ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறும் பெருந்திரு விழாக்கள்) மூலம் நிறைவாய் ஆக்குவது. திருக்கோயில்களின் வழக்கமான நிகழ்வாகும்.

 சிவகாம கோட்டத்தில் பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, சாமுண்டி, வாராஹி, இந்திராணி, கெüமாரி ஆகிய தேவிகளுக்கு சந்நிதிகள்அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீ சுப்பிரமணியரும் சிவகாமகோட்டத்தில் முறையே அன்னைக்குத் தெற்கே மூத்தவரும் வடக்கில் இளையவரும் எழுந்தருளுகின்றனர்.
 ஸ்ரீ சித்ரகுப்தர் இக்கோட்டத்துள் மேற்கு நோக்கி அமர்ந்தருளுகிறார். ஸ்ரீ நடுக்கந்தீர்த்த விநாயகர் ஸ்ரீ சித்ரகுப்தர் சந்நிதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கி அருளுகிறார். அம்பிக்கைக்கு துணைபுரியும் ஸ்ரீ சண்டிகேஸ்வரி (சண்டிகேசி) அன்னை மூலவராய் வீற்றிருக்கும் சந்நிதிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.
சிவகாமி அன்னையின் சந்நிதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது துவஜஸ்தம்பம் (கொடிமரம்). திருவிழா தொடங்கியதற்கு அடையாளமாய் இதில் கொடியேற்றம் நிகழும்.

சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள்  கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில்  பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

#கோவிலின்_வரலாறு:

'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.

இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

மேலும் இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானை ஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது.

இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். 
இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

#மூலவர்_தோற்றம்:

மூலவர் திருமூலனாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார்.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

#சிதம்பர ரகசியம்: 

சித் + அம்பரம் = சிதம்பரம். சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்ர சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும்.

இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

#திருச்சித்திரக்கூடம் (108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று)

மூலவர்: கோவிந்தராஜப் பெருமாள்
தாயார்:புண்டரீகவல்லி 

மங்களாசாசனம் செய்தவர்கள்:

குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்

ஒருமுறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் நடனம் புரிந்தனர். அதில் யார் சிறந்தவர் என பார்வதி ஒரு போட்டி வைத்து தெரிந்து கொள்ளலாம் என அனைத்து தேவர்களையும் அழைத்தாள். அனைவரும் சிவன் வென்றார் என்றனர். உடனே பார்வதி திருமாலை வேண்டினாள். மனம் இறங்கி திருமால் இப்போட்டியில் கலந்து கொண்டார். சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். பார்வதி பெண் என்பதால் அவளால் ஆடமுடியாமல் வெட்கி நின்றாள். அதனால் திருமால் சிவனே இப்போட்டியில் வென்றார் என்றார். இதைக்கேட்ட கோபத்தில் பார்வதி காளியாகி ஓட அவளை தடுக்க சிவன் ஊர் எல்லையில் படுக்க, காளி சிவனின் மார்பில் மிதித்து கோபம் தணித்தாள். கோபம் தணிந்த பார்வதியும், சிவனும் திருமாலை சிவனின் சந்நிதிக்கு எதிரில் குடிகொள்ளுமாறு வேண்டிக்கொண்டனர்.

#தேவாரம் கிடைத்த தலம்: 

மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர்.பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.
திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.

#தரிசிக்க முக்தி: 

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும்.
எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோவிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

#தேரில் நடராஜர்: 

மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

#அர்த்த ஜாம அழகர்: 

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோவில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.

#பெரும்பற்றப்புலியூர் 

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.

#பொன்னம்பலம் 

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

#ஆனந்த_தாண்டவம் :

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். 1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். 2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. 3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. 4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

#வடிவமைப்பு :

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது

#சிதம்பர_ரகசியம் :

இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.

#வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!

12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின் மிகப்பிரபலமான கோயில் நகரம். நான்கு திசைகளிலுமே நன்கு துல்லியமாக கட்டப்பட்ட அழகியலை விவரிக்க முடியா பேரழகு கொண்ட மிகப்பெரிய கோபுரங்களையும், அதில் அற்புதமான வடிவங்களையும் கொண்ட ஒரு கோயில் இதுவாகும். இந்த கோயிலைச் சுற்றி அமைந்த நகரமே சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. 

#பழமையும்_ஆட்சியும்:

உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு இன்றளவும் இயங்கும் பழமையான நகரங்களைக் கொண்டது, இந்தியா மட்டும்தான். அதிலும் தமிழகத்தின் புகழ் பாரெங்கும் பரவி நிற்கிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு இடத்தையும் தற்போது தமிழகம் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என அவரவர் ஆட்சிகாலங்களில் இந்த கோயில் மிக அழகாக கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டதுடன், நிறைய நன்கொடையும் அளித்தது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பது தில்லை நடராசர். இவருக்கு கூத்தன் எனும் பெயரும் உண்டு.

#மானிட_உடலில் சிவபெருமான்:

உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவ பெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு. சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான். அவருக்கு உமையாளாக பார்வதி தேவியும், அவருடன் விநாயகர், முருகர், பெருமாள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர்.

#பரதநாட்டியத்தை தோற்றுவித்த கலைக் கடவுள்:

பொதுவாகவே பரதநாட்டியம் ஆடுபவர்கள் தில்லை நடராசரை வணங்கியே ஆடுவார்கள்,. அவரே இந்த கலையின் கடவுளாக போற்றப்படுகிறார். இவரது நடன அசைவுகளிலிருந்தே பரதநாட்டியம் எனும் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு சென்று பாருங்கள். இந்த கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் பரத கலையின் முத்திரைகளை வைத்துள்ளதுபோலிருக்கும்.

#மதுரைக்கு அடுத்து சிறப்புடையது:

இந்த கோயில் நூல்கள் இயற்றுவதில் மதுரைக்கு அடுத்து சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மதுரையில் தமிழின் முதுபெரும் நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளது. திருக்குறள் கூட மதுரையில் இயற்றப்பட்டதுவே ஆகும். அதுமாதிரி இந்த கோயிலில் திருமூலர் முனிவர் தனது திருமந்திரம் எனும் நூலில் இக்கோயிலைப் புகழ்ந்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை 
நடராசர் கோயிலில் இருந்துதான் எழுதியுள்ளார். இங்குள்ள ஆயிரம் கால் மண்டபத்திலேயே இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது

#பெயர்க்காரணம்:

தில்லை நடராசர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகருக்கு புராண காலத்தில் நிறைய பெயர்கள் இருந்துள்ளன. அவற்றில் தில்லை, பெரும்பற்ற புலியூர், தில்லை வனம் என்பவை பலரால் அழைக்கப்பட்டு வந்த பெயராகும். தில்லை மரங்கள் நிறைந்து வளர்ந்த இடங்கள் ஆதலால் இதற்கு தில்லை எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது திருச்சிற்றம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிற்றம்பலம் என்பது மருவியே சிதம்பரம் ஆகியிருக்கிறது.

#தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்:

இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.

சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது

#மாயம்_செய்யும் மரகதக் கல்:

புதுக்கோட்டை பேரரசர் சேதுபதி அவர்களால் இந்த கோயிலுக்கு ஒரு மரகதக் கல் தானமாக அளிக்கப்பட்டது. இந்த மரகதக் கல் செய்யும் மாயம் இங்கு வரும் பக்தர்களை புத்துணர்வு அடையச் செய்கிறது. கோயிலின் வெளிப்புறத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள்ளாகவே கலைப்படைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் சிதம்பரம் நடராசரை பார்த்ததும் புத்துணர்வு பெறுகின்றனர். இதற்கு காரணம் அந்த மரகத கல்தான் என்று நம்பப்படுகிறது.

#அறிவியலுக்கு ஈடு கொடுக்கும் அற்புத கணக்குகள்:

தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது,. காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது.

மனித இனத்தின் அருமை சொல்லும் கணக்குகள்:

இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த 9 எனும் எண் குறிப்பது நம் உடலில் இருக்கும் ஒன்பது நவத் துவாரங்களையும் ஆகும். மேலும் கருவறையில் 21 ஆயிரத்து 600 தங்கத் தகடுகள் இருக்கின்றன. 72 ஆயிரத்து ஆணிகளைக் கொண்டு பதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் சுவாசிக்கும் கணக்கு. எழுபத்தி இரண்டாயிரம் என்பது மனித உடலில் இருக்கும் நரம்புகள் என்பது நிச்சயம் அறிவியலை ஆச்சர்யம் கொள்ளச் செய்யும் கணக்குதானே.

மேலும் இங்கு சித்ர சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை, தேவ சபை என்று அழைக்கப்படும் ஐந்து சபைகள் இருந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் புனித குளம் சிவ கங்கை என்று அழைக்கப்படுகிறது

பிக் பாங்க் தியரி சொல்லும் வரலாறு:

பலர் பிக் பாங்க் தியரி உருவாவதற்கு முன்னரே உலகம் எப்படி தோன்றியது என்ற தத்துவத்தை தில்லை நடராசர் கூறியுள்ளதாக நம்புகின்றனர். அதாவது இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியது. ஒரு பெரிய வெடிப்புதான் இந்த உலகம் தோன்றியதற்கு காரணம். அதன்படி, இந்த கோயிலின் மூலவரான ஒரே இடத்தில் நில்லாமல், ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புறத்தில் ஒரு கையில் உடுக்கையும், இடது புறத்தின் ஒரு கையில் தீயையும் வைத்துள்ளார் நடராசர்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன்படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. சிவன் என்பது வேறு யாரும் இல்லை ஆற்றல்தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

உலக அறிவியலை தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

வரலாற்றில் அதிக ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முக்கால் சதவிகித கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்கள் தான்.அதிலும் கோயில்கள் என்றாலே அது தில்லைதான் என்று பல பாடல்களில் பார்க்க முடிகிறது

சைவ திருத்தலங்களில் முதல் தலம் தில்லை நடராஜர் தலம் தான். இறைவனே மாணிக்கவாசகர் பாடல்களை எழுதிய வரலாறு கொண்டது இந்த திருத்தலம்.

மாணிக்கவாசகர் எனும் சிவபக்தனின் பாடல்களை மாணிக்க வாசகர் பாடப்பாட இறைவனே வந்து எழுதிக் கொடுத்த மிக முக்கியமான தலம் சிதம்பரம். மாணிக்கவாசகரின் இடைவிடாத பக்தி இறைவனை அசைக்க அவரே வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரின் திருவாசகத்தை தனது இறைவிரல்களால் எழுதிக் கொடுத்து திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு விட்டு மறைந்து விட்டார். அதன் பின்னர்தான் வந்து எழுதியவர் இறைவன் என்பதையே மாணிக்கவாசகர் உணர்ந்தார்.

மாணிக்கவாசகரின் வரிகள் இறைவன் இதயத்தை தொட்டதாலோ என்னவோ அவர் கைப்பட எழுதிய திருவாசகம் நம் அத்தனை நெஞ்சங்களையும் அவரைப் போலவே அன்பிற்கு உருக செய்கிறது .

அறிவியலின் படி இந்த கோயில் 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய திருமூலரின் பாடல்களில் இந்த தில்லை கோயில் இருக்கிறது என்றால் அது ஆய்வுகளை பற்றிய நமது பார்வைகளை கேள்விக்குறியாக்குகிறது என்றால் மிகையில்லை.

பொதுவாக சிதம்பரம் கோயில் (chidambaram temple) அதிசயமாக அறியப்படுவது.. மனித உடலை குறிப்பிடும்படி இந்த கோயில் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். ஒன்பது வாயில்கள் ஒன்பது துவாரங்களை குறிப்பிடுகின்றன. ஒரு மனிதனின் சராசரி சுவாசக் கணக்கு 21600முறை. இதனை குறிப்பிடும் வகையில் சிதம்பரம் பொற்கூரையில் 21600 ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மனித உடலின் மொத்த நாடிகள் 72000. இவை ஆணிகளாக அந்தக் கூரையில் அடிக்கப்பட்டிருக்கின்றன.

நம் உடலில் இதயம் இடப்பக்கம் இருக்கிறது. இறைவிக்கு தனது இடபாகம் தந்த இறைவனின் கருவறையும் கோயிலின் இடப்புறம் இருக்கிறது. நமசிவய எனும் ஐந்து படிகள் ஏறினால் பொன்னம்பலம் கொண்ட சிதம்பரத்தாரை தரிசிக்கலாம். இதயத்தின் நான்கு சுவர்களை போலவே அங்கே நான்கு தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இரண்டு விதமாக நாம் இங்கே யோசிக்கலாம். வரலாற்று படியே பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த தொழில்நுட்பங்களும் செயல்படாத ஒரு காலத்தில் ஒரு மனிதனின் உடல் இப்படித்தான் இருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தார்கள்.. இதயத்தின் நான்கு சுவர்கள் வரை detailing செய்து எப்படி இந்த கோயிலை வடிவமைத்தார்கள்.. இது எப்படி சாத்தியமானது? இப்படி யோசித்தால் இந்த கோயிலே உலக அதிசயங்களில் முதலாவதான கோயிலாக இருக்க முடியும்.

இரண்டாவது முறையாக இந்த கோயிலின் அமைப்பிலேயே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். நமது உடலை கோயிலுடன் ஒப்பிடுங்கள் .. கோயிலை போலவே சற்று இடது புறம் இருக்கும் இதயமும் அதன் சுவர்களையும் கவனியுங்கள். நமசிவய எனும் ஐந்தெழுத்து படி ஏறினால் பொன்னம்பலத்தானை தரிசிக்கலாம் என்பது போல.. நமது ஐம்புலன்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து காலடியில் படிகளாக மாற்றிக் கொண்டால் சதாஷிவம் எனும் அந்த இறைவன் நம் இதயத்துக்குள்ளே ஆனந்த நடனம் ஆடியபடி இருப்பதை அவரது தாளங்களே இதயத்தின் துடிப்பாக மாறி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றால்.. இனி நம் வாழ்வை அந்த சதாஷிவன் சந்தோஷமாக பார்த்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.

சரி. கோயிலின் வரலாற்றிற்கு வருவோம்.. உலகெங்கும் ஒரு சாதாரண வழக்கு சொல் ஒன்று உண்டு.. அப்படி என்ன சிதம்பர ரகசியம் (secrets of chidambaram) பேசுகிறாய் என்று யாரையாவது யாராவது கேட்பதை நாம் கவனித்திருப்போம். அப்படி அந்த சிதம்பரத்தில் என்ன ரகசியம் இருக்கிறது...

பெரியவர்கள் சித்தர்கள் முனிவர்கள் இறைவன் எல்லோரும் சில விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ரகசியமாக இருக்கும்வரைதான் அதிசயமாக இருக்கும் என்பதாலும் ரகசியம் அறிந்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தி ஆன்மிகத்தை வியாபாரம் செய்வார்கள் என்பதாலும் அவர்கள் அதற்கு தகுதியான ஆட்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மறைபொருளாகவே வைத்திருப்பார்கள்.

அந்த ரகசியங்கள் எல்லாம் தகுதியான யுகத்தில் தகுதியான காலத்தில் அதனை அறிய வேண்டியவர்கள் அறியும் வண்ணம் தாமாகவே வெளிப்படும் ஒருவிதமான டைமர் (timer) செட் செய்யப்பட்டவை என்பது நிச்சயமான உண்மை. இந்த காலம் இந்த நேரம் இவை வெளிப்பட வேண்டும் என்பது இறை சித்தமாக இருப்பதால் இப்போது இதனை வெளிப்படுத்துவதில் மனம் நிறைகிறது.

பொதுவான ரகசியம் என்பது திருச்சிற்றம்பலம் எனும் கருவறையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு ஆரத்தி காட்டியபின்னர் எந்த உருவமும் இல்லாத இடத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டிருக்கும். அங்கும் ஆரத்தி காட்டுவார்கள். இதன் தாத்பர்யம் இறைவன் வெட்டவெளியான ஆகாயவடிவிலும் இருக்கிறான் என்பதுதான்.

ஆனால் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட விஷயம் என்பது இறைவன் நடராஜர் இடது காலை தூக்கி ஆடுகிறார். அவரது வலது கால் முயலகன் எனும் அசுரனை எழும்ப விடாமல் அழுத்தி இருக்கிறது. வலது கால் கட்டை விரல் முயலகனை அழுத்தும் அதே இடத்தில்தான் பூமியின் மிக சரியான மையம் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் மிக சரியான மையப்புள்ளி சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் வலது பெருவிரலுக்கு நேர் கீழே அமைந்திருக்கிறது.

துல்லியமான தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலத்தில் இப்படி இடத்தை எப்படி கோயிலாக்க முடிந்தது.. எப்படி மிக சரியாக இறைவனின் வலது பெருவிரல் பாதம் பூமியின் மையத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் பாக்கியவான்கள். இதனை பல கோடி டாலர்கள் செலவழித்த பின்னர் உலக ஆன்மிக மையம் இந்த அதிசயத்தை கண்டுபிடித்து அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது!

அறிவியல் என்பதே ஏற்கனவே இருக்கும் ஒன்றில் இருந்து எதையாவது கண்டுபிடிக்கும் வரையில்தான் அதன் வேலை நடந்து கொண்டிருக்கிறது எனும்போது உலக அறிவியலாளர்கள் வியக்கும் வண்ணம் அமையப்பெற்ற சதாஷிவம் தனது ஆனந்த நடனத்தை எப்போதும் ஆட்டியபடியே இருக்கிறது. இதனை உலக அறிவியலாளர்கள் காஸ்மிக் நடனம் பிரபஞ்ச நடனம் என்கின்றனர்.

முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.

இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.

தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.

இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.

இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.

பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.

வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.

1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.

முற்காலத்தில் இத்தலத்தில் சிவபெருமான் வணங்கி தவமியற்றி வந்தார் மாத்யந்தினர் எனும் முனிவர். தினந்தோறும் இந்த தலத்திற்கு அருகிலுள்ள வனங்களில் உள்ள பூக்களை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சித்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு முறை பூக்களை பறிக்கும் போதும் அதில் பெரும்பாலானவை தேனீக்களால் அம்மலரில் உள்ள தேன் உறிஞ்சப்படுவதால், அத்தகைய பூக்கள் சிவபூஜைக்கு பயன்படாமல் போவதை எண்ணி வருந்தினார். தேனீக்கள் மலர்களை மொய்ப்பதற்கு முன்பாக இருட்டில் சென்று பூக்களை பறிக்கவும் தன்னால் இயலிவில்லை என்று சிவபெருமானிடம் வருந்தினார்.

அப்போது அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான் மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்கு வசதியாக சிறுத்தை புலியின் கால்களையும், இருட்டில் நன்கு பார்க்கும் சக்தி கொண்ட அந்த சிறுத்தையின் கண்பார்வை திறனையும் மத்யந்தினருக்கு அருளினார் ஈஸ்வரன். இதன் காரணமாக மத்யந்தினர் வேங்கை என பொருள் கொண்ட வியாக்கிரம் என பெயர் கொண்டு அன்று முதல் “வியாக்கிரபாதர்” முனிவர் என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வியாக்கிர பாத முனிவருக்கும், “யோகக்கலையின்” பிதாமகரான “பதஞ்சலி” முனிவருக்கும் ஒரே நேரத்தில் தனது திருநாட்டிய நடன தரிசனத்தை தந்து அருள் புரிந்தார் சிவபெருமான்.

கல்வெட்டுகள்:

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயரும் மற்றும் நாயக்க மன்னர்களும் கோயிலின் பிரகாரங்கள் சபை மண்டபங்கள் கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.

#நூல்கள்:

தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது. இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி நான்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.

1.தேவாரம் - 11 திருப்பதிகங்கள்
2.திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்
3.திருக்கோவையார்
திருமுறைக் கண்ட புராணம்
4.திருவிசைப்பா
5.திருபல்லாண்டு
6.திருமந்திரம்
7.கோயில் நான்மணிமாலை
8.கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
9.பெரியபுராணம்
10.சிதம்பரம் மணிக்கோவை
11.சிதம்பரச் செய்யுட் கோவை
12.சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
13.தில்லைக்கலம்பகம்
14.தில்லையுலா
15.மூவரு லா
16.தில்லை யமகவந்தாரி
17.சிதம்பரவெண்பா
18.சிதம்பர சபாநாத புராணம்
19.பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்
20.புலியூர் வெண்பா
21.நடேசர் திருவருட்பா
22.நடராச திருவருட்பா
23.நடராசர் சதகம்
24.நடராசர் திருப்புகழ்
25.சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
26.சேக்கிழார் புராணம்
27.சிவகாமியம்மைப் பதிகம்
28.தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி
29.தில்லை நவமணி மாலை
30.சிதம்பர விலாசம்
31.பரமரகசிய மாலை
32.திருவருட்பா
33.தில்லைத் திருவாயிரம்
34.புலியூர் புராணம்
35.சிதம்பரப் புராணம்
36.நடராஜர் காவடிச்சிந்து
37.நடராசர் பத்து
38.நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்
39.சிதம்பரம் பட்டியல்
40.முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
41.சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
42.தில்லை பாதி நெல்லை பாதி
43.சிதம்பரம் சேஷத்திர மகிமை

கோயில் நிர்வாகம்:

தில்லை நடராசர் கோவில் சோழர்களால் நிர்வகிக்கபட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு பெரும்பாலான கோவில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே எம். ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பின்னணியில் ,2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறினர். முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

கல்வெட்டு: 

இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாங் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கர வர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விசய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிணதேவமகாராயர், வீரப் பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீ ரெங்கதேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும், கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தழுவிய வரலாறே ஈண்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இராஜேந்திர சிங்கவளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என்றும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜாதிராஜவளநாட்டுத் தனியூர்ப் பெரும்பற்றப்புலியூர் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது.

நேர்த்திக்கடன்: 

பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
.

பிரார்த்தனை: 

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

மார்கழி திருவிழா :

10 நாள் திருவிழா – திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம் : 

10 நாள் திருவிழா – ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.

திருப்பாவாடை உற்சவம்: 

சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவை கொண்ட பொங்கல் திருவமுது செய்து தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது. இவை யாவும் தைப்பூசத்திருநாளில் சிதம்பரம் திருத்தலத்தில் தொன்மைக் காலம் தொட்டு நடைபெற்று வரும் சிறப்பினையும் மகிமையையும் எடுத்துக் காட்டுகிறது.

காலை 06:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம் :

மாநிலம் :தமிழ் நாடு

சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.

"குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப ஜீவ சமாதி

ஸ்ரீஅமிர்தவல்லி  சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் . திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர்.  ...