Tuesday, September 24, 2024

சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர்....



1.சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .
(சிவ சம்பந்த முடையது சைவம்).

2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?

சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .

3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?

1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம்,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.

2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.

3.அழித்தல் – உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.

4.மறைத்தல் – உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .

5.அருளுதல் – பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.

4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?

தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.

5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?

1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).

2.அருவுருவம் – முகம் ,கை, கால்,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .

3.உருவம் –முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).

6.சைவ சமய சாதனங்கள் எவை ?

திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .

7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?

. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .

1.தூல திருவைந்தெழத்து –நமசிவாய .

2.சூக்கும திருவைந்தெழத்து – சிவாய நம.

3.காரணதிருவைந்தெழத்து – சிவயசிவ .

8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்

9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை?

திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.

10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .

11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?

1.தாச மார்கம் – இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.

2.சற்புத்திர மார்கம் – மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .

3.சகமார்க்கம் – தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .

4.சன்மார்கம் – ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .

12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?

சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .

1.குரு வழிப்பாடு – குருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .

2.இலிங் வழிப்பாடு – சிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .

3.சங்கம வழிப்பாடு – சிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.

13.தீக்கை என்றால் என்ன ?

சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .

14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’

சமயதீக்கை ,விசேசதீக்கை,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.

15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?

தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .

16. தோத்திரம் என்றால் என்ன ?

சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .

17. திருமுறைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .

18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

முதல் மூன்று திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.

திருநாவுக்கரசர்

20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

ஏழாம் திருமுறைஆகும் .

சுந்தரர்

21.எட்டாம் திருமுறை யாவது யாது ?

திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .

மாணிக்கவாசகர்

22.திருவாசகத்தின் பெருமை என்ன ?

மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .

23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும்?

திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .

24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?

திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .

25. பத்தாம் திருமுறை யாவது யாது ?

திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .

26. பதினோராம் திருமுறையாவது யாது ?

சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .

27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?

திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர், இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .

காரைகாலம்மையார்
சேரமான் பெருமான்நாயன்னார்

28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?

தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .

29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?

பன்னிரண்டாம் திருமுறை‘பெரியபுராணம்’ ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .

சேக்கிழார்

30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?

சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .

31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?

1.திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .

2.திருக்களிற்றுப்பாடியார் – திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .

3.ஞானபோதம் – மெய்கண்டார் .

4.சிவஞானசித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார் .

5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .

6.உண்மை விளக்கம் – திருவதிகைமனவாசகம்கடந்தார்.

7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்

8.திருவருட்பயன் - உமாபதிசிவம்

9.வினாவெண்பா - உமாபதிசிவம்

10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்

11.கொடிக்கவி - உமாபதிசிவம்

12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்

13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்

14.சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவம்

32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் . 

தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம், சைவசமய தோத்திர வினாவிடை , சைவ சமயக்கல்வி, தருமபுர ஆதீனம், 
சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Monday, September 23, 2024

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் :

இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. 

காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் திருக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதா தேவி ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின் தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். 

அப்போது அக்னியின் சூடு, அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார். அந்த கடல் தான் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம்.

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

1. காசிலிங்கம்
2. மணல் லிங்கம்
3. உப்பு லிங்கம்
4. ஸ்படிக லிங்கம்

*1. காசிலிங்கம் :*
ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்கும், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார். ராமபிரானின் ஆணைக்கிணங்க காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம். இந்த லிங்கம் இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ளது.

*2. மணல் லிங்கம் :*

காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம். இது தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது

*3. உப்பு லிங்கம் :*
இந்த உப்பு லிங்கத்தை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத்திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில் தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்

*4. ஸ்படிக லிங்கம் :*
ராமேஸ்வரம் கோயில் கர்ப்ப கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Sunday, September 22, 2024

சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்....

கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவின் மிக உயர்ந்த சிகரம் (1615 மீ) மேல்முடி. ஒரு நாள் மலையேற்றத்திற்கு ஒரு நல்ல இடம். 
புரட்டாசி மாதத்தில் வனத்துறை முன் அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

கோயில் சிகரத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன
1. பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக காட்டு பகுதியில் நடந்து சென்று கோவிலை பார்க்கலாம்.
வழிப்பாதை மேடு பள்ளங்களாக, சமதளமாக செல்லும்.
2. தடாகம் ஆனைகட்டி மலை பகுதி வழியாக இந்த கோவிலை சென்று பார்க்கலாம்.இந்த வழிப்பாதை செங்குத்தாக செல்லும் மற்றும் சீக்கிரத்தில் அரங்கநாதர் கோவிலை அடைந்து விடலாம்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேல்முடி ரங்கநாதர் கோவில், கடல்மட்டத்திலிருந்து, 4100 அடிகளுக்கு மேல் உள்ளது. கோவையில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சின்னத்தடாகம், கோவனுார், பாலமலை வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சென்று கொண்டுள்ளனர். இயற்கை வளமும், மூலிகை செடிகளும், சுத்தமான காற்றும் நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள். இங்கு, ஆஞ்சநேயர், முருகன், சிவன்,அம்மன், கருடாழ்வார், விநாயகர், சப்த கன்னியரை பக்தர்கள் வழிபடுகின்றனர். 1973ம் ஆண்டில் தான் கோவிலுக்கு சுவர் எழுப்பி, ஸ்தலம் அமைத்து, 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்முடி ரங்கநாதர் கோவில் பராமரிப்பு, பூசாரிகளை தேர்ந்தெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த, கோவில் வழிபாட்டு கமிட்டி, செயல்பட்டு வருகிறது. தற்போது, சின்னத்தடாகம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய உள்ளூர்களிலும், திருப்பூர், சென்னை என, வெளி மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது.

மேல்முடி அரங்கநாதர் கோவிலில் இருந்து இடது புறமாக நாடுகண்ட போலி சிவன் மலைக்கு வழிப்பாதை செல்லும். சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பாதைகள் பிரியும்.வலது புறமாக சென்றால் அரங்கநாதரின் மூலஷ்தானத்தை அடையலாம்.

ஆம்..இங்கிருந்து தான் சுயம்பு அரங்கநாதரை எடுத்துச் சென்று, கோவில் எழுப்பி கீழே பக்தர்கள் வணங்குகிறார்கள்.அங்கிருந்து இடதுப்புறமாக 1 மணி நேரம் மலை ஏறினால் நான் ஆகாயத்தில் இருக்கும் ஈசனை அடையலாம்.

செல்வது அவ்வளவு சுலபம் இல்லை.மலை சற்று செங்குத்தாகவே செல்லும்..ஆனால் சுற்றியுள்ள இயற்கை அழகுக் காட்சிகள் நமக்கு கலைப்பே தெரியாமல் அவரிடம் நம்மை சரணடைய செய்துவிடும்.

மலையின் உச்சியில் இருந்து நாம் பார்க்கும் போது கோவை மாவட்டத்தின் அழகையும்,அருகே உள்ள குருடி மலை,பவானி சாகர் அணை மற்றும் ஓதி மலை என அனைவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலைக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய மலை இந்த மேல்முடி - நாடுகண்ட போலி மலை என்பதில் ஆச்சர்யம் இல்லை.

இங்கு சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், நம்மவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

பாணமாக மாறிய ஈசன்…ஆவுடையாக மாறிய விஷ்ணு....



பாணமாக மாறிய ஈசன்… 
ஆவுடையாக மாறிய விஷ்ணு~
 
அழகிய இளைஞனாக ஸ்ரீபிட்சாடன ரும், எழில் கொஞ்சும் மோகினியாக மகா விஷ்ணுவும் வடிவம் எடுத்து தாருகாவனம் சென்று, அங்கு ஆணவத்துடன் வசித்து வரும் ரிஷிகளுக்கும் அவர்களது பத்தினி களுக்கும் பாடம் புகட்டிய கதை பலருக் கும் தெரிந்திருக்கும். அந்தக் கதையைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
பண்டாரவாடைக்குக் கிழக்கே சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாருகாவனம். ஆம்! புராண காலத்தில் வழங்கப்பட்ட அதே பெயர்தான் இன்றும் இந்தக் குக்கிராமத்துக்கு வழங்கப்பட்டு வருகி றது. புராண காலத்தில் தாருகாவனத்தில் குடி கொண்ட ரிஷிகள், சிவபெருமானை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற மமதையில் இருந்தனர்! தங்களது இடையறாத தவத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சில அற்புத சக்திகளால் கர்வம் கொண்டு, மயங்கித் திரிந்தனர்; ஆசார- அனுஷ்டானங்களைத் துறந்தனர். மொத்தத்தில், தங்களது தவ வாழ்வுக்கும், சுக வாழ்வுக்கும் காரணமான வழுவூர் ஈசனை வணங்க மறந்தனர்.

பார்த்தார் வழுவூரார்… ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குப் புத்தி புகட்ட விரும்பினார். ஒரு திருவிளையாடல் அரங்கேறியது. வழுவூர் ஆலயத் தில் இருந்து பிட்சாடனமூர்த்தியாக உருமாறி, தாருகாவனம் நோக்கிப் புறப்பட்டார். இறைவன் எடுத்த இந்த பிட்சாடனர் உருவைப் பார்த்தால், எத்தகைய தேவதையும் சொக்கிப் போவாள். அப்படி ஒரு இளமை ததும்பும் வடிவம் பிட்சாடனருக்கு!
ரிஷிகளின் மனைவியரை மயக்கி, அவர்களைத் திருத்த பிட்சாடனர் தேவை. அதே நேரம், கண் போன போக்கில் திரியும் ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை மீட்டுக் கொண்டு வர- நளினமான ஒரு நங்கை தேவை ஆயிற்றே! மகேஸ்வரரின் மைத்துனரான மகா
விஷ்ணுவும், அழகு ததும்பும் மோகினியாக வடிவம் எடுத்தார்.இருவரும் தாருகாவனத்துக்குள் நுழைந்தனர். மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகள், அவள் (மகா விஷ்ணு) பின்னால் சென்றனர். அவர்களது மனைவியர், பிட்சாடனர் (சிவபெருமான்) பின்னால் அலைந்தனர். இரு தரப்பினரிடத்தும் மோகத்தை உருவாக்கி, அவர்களை நிலை குலைய வைத்தனர் பிட்சாட னரும் மோகினியும்!

வெகு நேரம் கழித்தே நடந்த உண்மை ரிஷிகளுக்குப் புரிந்தது. இதுவரை தங்களது தவத்துக்கும் வேள்விக்கும் உதவியாக இருந்த மனைவியர், யாரோ ஒரு ஆடவரின் பின்னால் மோக வெறியுடன் சுற்றுவது தெரிந்து, இதற்கெல்லாம் காரணமான பிட்சாடனர் மீதும், மோகினி மீதும் கடும் கோபம் கொண்டனர். பிட்சாடனரை அழிக்க வேள்வி செய்தனர்.

ஆதி மூலத்தையே அழிக்க வேள்வியா? வெகுண்ட இறைவனார், வேள்வித் தீயில் இருந்து தோன்றிய தீய சக்திகளை நொடிப் பொழுதில் ஒழித்தார். கோபம் அடங்காத ரிஷிகள், தங்கள் தவ சக்தியால் மதம் கொண்ட யானை ஒன்றை உருவாக்கி, பிட்சாடனர் மீது ஏவினர். அப்போது அணுவைப் போன்ற சிறு வடிவம் எடுத்து, மத யானையின் வயிற்றுக்குள் புகுந்த பிட்சாடனர், அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த யானையின் தோலைத் தன் மேல் போர்த்திக் கொண்டு, வீரத் தாண்டவம் புரிந்தார். இதுவே, வழுவூர் வீரட்டானத்தின் கதை.

அதன் பிறகு, ரிஷிகளுக்கு தவத்தின் மேன்மையை உணர்த்தி, ”உங்கள் தவ வலிமையால் கிடைத்த அற்ப சக்திகளை நம்பி, அவஸ்தைப் பட்டது போதும்… இனியாவது, விழித்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள். நிலை இல்லாத உங்களது போக்கைத் திருத்தவே இந்த நாடகம். இனியும், மதி மயங்கித் திரியாதீர்கள்” என்று அறிவுரையும் ஆசியும் வழங்கி விட்டு, வழுவூரை நோக்கி நடையைக் கட்டினார் பிட்சாடனர். உடன், மோகினியும் பின்தொடர்ந்தாள்.

வழியில், பண்டாரவாடை தலத்துக்கு வந்தபோது, மோகினி உடலின் ஒரு பகுதி ஆவுடையாராகவும், பிட்சாடனர் உடலின் ஒரு பகுதி லிங்க பாணமாகவும் ஆனது. இந்த சிவலிங்கத்தை வழுவூர் ஈசனே இங்கு பிரதிஷ்டை செய்து விட்டு, வழுவூர் சென்றாராம். இத்தகு பெருமைக்குரியதுதான், பண்டாரவாடையில் நாம் தரிசிக்கும் பிரமாண்ட லிங்கத் திருமேனி- ஸ்ரீகயிலாசநாதர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..



அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.

#கிழக்கு, 
#தென்கிழக்கு, 
#தெற்கு, 
#தென்மேற்கு, 
#மேற்கு, 
#வடமேற்கு, 
#வடக்கு, 
#வடகிழக்கு 
ஆகியவை எண்திசைகள் ஆகும்.

இந்த எண் திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே 

#இந்திரன், 
#அக்னிதேவன், 
#யமன், 
#நிருதி, 
#வருணதேவன், 
#வாயுதேவன், 
#குபேரன், 
#ஈசானன் 
விளங்குகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பவர்கள். இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

அஷ்டதிக் பாலகர்கள் 
#கோபுரங்கள், 
#வாயில்கள், 
#சுவர்கள், 
#கூரைகள் 
ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலை வடிவிலும் காணப்படுகின்றனர். 

#கிழக்கு:-
#இந்திரன்:-

இந்திரன் இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். #இந்திராணி (சசிதேவி) இவரின் துணைவியாகும்.

இவர் #ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள #வஜ்ராயுதம் ஆகும். 

இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.

#தென்கிழக்கு:-
#அக்னிதேவன்:-

அக்னி தேவன் இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. 

வேள்வியின் போது இடப்படும் அவிர்பாகப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வார். இவருடைய துணைவியார் #ஸ்வாகாதேவி ஆவார்.

இவருடைய வாகனம் #ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் #தீச்சுவாலையுடன்_கூடிய_வேல் ஆகும். 

இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

#தெற்கு:-
#யமன்:-

யமன் இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். இவர் இறப்பின் கடவுள் ஆவார்.

சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி #யமி அல்லது #யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.

இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் #குபேரஜாயை ஆவார். 

இவர் #எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் #பாசக்கயிறு ஆகும். 

யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.

#தென்மேற்கு:-
#நிருதி:-

நிருதி இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் #கட்கி ஆவார். 

இவருடைய வாகனம் #பிரேதம். இவருடைய ஆயுதம் #கட்கம் என்னும் வாள் ஆகும். .

இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.

#மேற்கு:-
#வருணபகவான்:-

வருண பகவான் இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். 

ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.

ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். 

இவருயைட துணைவியார் #வாருணி ஆவார்.
இவருடைய வாகனம் #மரகம் என்ற மீன் ஆகும். இவர் #வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். 

இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.

#வடமேற்கு:-
#வாயுபகவான்:-

வாயு பகவான்  வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். 

இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். 

ஹனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் #வாயுஜாயை ஆவார். 

இவருடைய வாகனம் #மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். 

இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

#வடக்கு:-
#குபேரன்:-

குபேரன் இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. 

இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.

இவரின் துணைவியார் #யட்சி ஆவார். இவர் #மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம் #கதை ஆகும். 

இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

#வடகிழக்கு:-
#ஈசானன்:-

இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். 

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் #ஈசானயஜாயை ஆவார்.

இவர் #எருதினை வாகனமாகக் கொண்டவர். #திரிசூலம் இவரின் ஆயுதமாகும். 

இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும்.

நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

நற்பவி நற்பவி நற்பவி
வாழ்க வளமுடன்.  

#அஷ்டதிக்
#பாலகர்கள்
#ஸ்லோகம்:-

பொதுவாக மக்கள் செய்கின்ற நற்செயல்களையும்,  தீயசெயல்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக் கொண்டு அச்செயல்களுக்கு ஸாக்ஷியாக இருக்கின்றனர் என மஹாபாரதம் சொல்கிறது.

எனவே மனிதன், தர்ம வடிவாயமைந்த அவர்களுடைய அருளைப் பெறுவதற்கும் தீயவற்றையகற்றி, நற்செயல்களை செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான் என்பது அச்செய்யுளின் கருத்தாகும். 

அஷ்டதிக் பாலகர்களைத் துதிப்பதால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.

#இந்திரன்:-

இந்திரன் இவரை உபாசிப்பதால் மக்கள் ஐஸ்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறலாம்.

ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம் |
ஸகஸ்ர நயநம் ஸக்ரம்
வஜ்ரபாணிம் விபாவயேத் ||

#அக்னி:-

அக்னி இவரை உபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும் |
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் ஸகாஸநம் ||

#எமன்:-

எமன் இவரை உபாசிப்பதால் தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவர் தர்மத்தின் வடிவினர்.

க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம் |
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் ||

#நிருதி:-

நிருதி இவரை உபாசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.

ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோ த்பல தளப்ரபம் |
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் ||

#வருணன்:-

வருணன் இவர் மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டு பண்ணி ஸூகத்தைக் கொடுப்பவர்.

நாகபாஸுதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம் |
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம் ||

#வாயு:-

வாயு இவர் வடிவமற்றவர். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாயுள்ளவர். 

இவரை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.

ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம் |
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம் ||

#குபேரன்:-

குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவர்.

குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம் |
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத் ||

#ஈசானன்:-

ஈசானன் இவர் மங்கள வடிவினர். இவர் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவர்.

ஈஸானம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம்|
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம் ||

நற்பவி நற்பவி நற்பவி
வாழ்க வளமுடன.

#அஷ்டதிக் 
#பாலகர்களின் 
#காயத்ரி:-

#அஷ்டதிக்
#பாலகர்கள் 
#சிறப்பாம்சம்:-

உலகெங்கிலும் காண முடியாத அஷ்டதிக் பாலகர்கள் உருவ சிலா பிரதிஷ்டையுடன் கூடிய சன்னிதியை ஸ்ரீ விஜய சித்ராம்பா சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆலய தீர்த்தத்தில் தரிசித்திடலாம்.

#இந்திரன்,
#அக்னி,
#யமன்,
#நிருதி,
#வருணன்,
#வாயு,
#குபேரன்,
#ஈசான்யன் 

ஆகிய எட்டு தேவ மூர்த்தியும் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.

திசைகள் அஷ்டதிக் பாலகர்களின் ஆட்சியின் கீழ்:-

#கிழக்குதிசை:- 
#இந்திரன்

#தென்கிழக்கு:-
#அக்னி

#தெற்கு:-
#யமன்

#தென்மேற்கு:-
#நிருதி

#மேற்கு:-
#வருணன்

#வடமேற்கு:-
#வாயு

#வடக்கு:-
#குபேரன்

#வடகிழக்கு:-
#ஈசான்யன்

#அஷ்டதிக் 
#பாலர்களின் 
#வழிபாட்டு 
#பலன்கள்:-

அஷ்டதிக் வழிபாடு என்பது உத்தம வாஸ்து வழிபாடு. இந்த அஷ்டதிக் திக்பாலர்கள் முன்பு தீபம் ஏற்றி, அவர்களுரிதான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் வாஸ்து குறைபாடு ஏதேனும் இருப்பின் அஷ்டதிக் திக்பாலகர்களின் அனுக்கிரஹத்தால் நிவர்த்தி ஆகி வீடு, நிலம், மாளிகைகள் வாங்கும் பாக்கியம் கிட்டும். மேலும் மன அமைதி உண்டாகும்.

தொடர்ந்து வழிபட்டால் வாஸ்து சக்தி பெருகி வீட்டில், தொழிற்சாலையில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மேலும் உயர வழி பிறக்கும்.

#அஷ்டதிக் 
#பாலகர்களின் 
#காயத்ரி 
#மந்திரங்கள்:-

001. #இந்திர_காயத்ரி_மந்திரம்:-

ஓம் ஸஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி 
தன்னோ இந்திர ப்ரசோதயாத்.

002. #அக்னி_காயத்ரி_மந்திரம்:-

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி 
தன்னோ அக்னி ப்ரசோதயாத்.

003. #எம_காயத்ரி_மந்திரம்:-

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாலாய தீமஹி 
தன்னோ யம ப்ரசோதயாத்.

004. #நிருதி_காயத்ரி_மந்திரம்:-

ஓம் நிசாசராய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தன்னோ நிருதி ப்ரசோதயாத்

005. #வருண_காயத்ரி_மந்திரம்:-

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி 
தன்னோ வருண ப்ரசோதயாத்.

006. #வாயு_காயத்ரி_மந்திரம்:-

ஓம் தத்புருஷாய வித்மஹே 
ரகசிய சஞ்சாரய தீமஹி 
தன்னோ வாயு ப்ரசோதயாத்.

007. #குபேர_காயத்ரி_மந்திரம்:-

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி 
தன்னோ குபேர ப்ரசோதயாத்.

008. #ஈசான்ய_காயத்ரி_மந்திரம்:-

ஓம் தத்புருஷாய வித்மஹே 
சிவ ரூபாய தீமஹி 
தன்னோ ரூத்ர ப்ரசோதயாத். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :*
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

*அவையாவன :*

1. சோமாவார விரதம் – திங்கள்,

2. உமாமகேஸ்வரர் விரதம் – கார்த்திகை பௌர்ணமி,

3. திருவாதிரை விரதம் – மார்கழி,

4. சிவராத்திரி விரதம் – மாசி,

5. கல்யாண விரதம் – பங்குனி உத்திரம்,

6. பாசுபத விரதம் – தைப்பூசம்,

7. அஷ்டமி விரதம் – வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

8. கேதார விரதம் – தீபாவளி அமாவாசை.

மஹா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

http://blog.omnamasivaya.co.in/2024/09/blog-post_22.html

சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்... 

Saturday, September 21, 2024

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...* 
கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருத
மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது.
இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப்பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது. இதுபோன்ற விநாயகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க இயலாது. தான்தோன்றி விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட ‘பதினெட்டு படி’ உள்ளது. சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வணங்குகிறார்கள். மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம்.

இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரே பிராகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என முறைப்படி அமைந்துள்ளன. கருவறையில் அழகே வடிவாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. இதன் அருகே தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருட்பாலிக்கிறார். மருதமலை கோயிலில் ஆதிமூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு வள்ளிதெய்வானையோடு அருள்புரியும் முருகப்பெருமானை முதலில் வழிபட்டு பின்னர் பஞ்சமுக விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும்; பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள், நவகிரக சந்நதி என வழிபட வேண்டும்;  

இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு பின்பு சப்தகன்னியரை வழிபட வேண்டும் என்பது மரபு. மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில் பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மருதமலை முருகன் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை ‘பஞ்ச விருட்சம்’ என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக்கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். இத்திருக்கோயிலில் பதினாறரை அடி உயரம் கொண்ட தங்கத்தேர் உள்ளது. தினமும் மாலை ஆறு மணிக்கு கோயிலில் இந்தத் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.  

 *இத்தலத்தின் தீர்த்தம்* மருதத்தீர்த்தம், *தலவிருட்சம்*
 மருத மரம். 

நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும். மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராய் இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்து வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பதும் பக்தர்களின் அனுபவ உண்மை. இத்திருத்தலத்தில் தினசரி காலை ஐந்து மணிக்கு கோ பூஜை, பிறகு 5.30 மணிக்கு நடைத்திறப்பு. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.30 முதல் 9.00 மணி வரை காலசந்தி பூஜை, 11.30 முதல் 12.00 மணி வரை உச்சிக்கால பூஜை, மாலை 4.30 முதல் 5.00 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை இராக்கால பூஜை என நடைபெறுகின்றன.

ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்குரிய விழாக்கள் இத்திருக்கோயிலில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டு, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் என விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பூச விழா, வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோயில் காலை ஐந்தரை மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை நடை சாத்தப்படுகிறது. கிருத்திகை மற்றும் முக்கியமான விழா நாட்களில் கோயில் காலை முதல் இரவுவரை தொடர்ந்து திறந்திருக்கும். கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்துள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ஈச்சனாரி போன்ற பல பகுதியிலிருந்தும் மருதமலைக்கு நகரப் பேருந்துகளும், மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலை அடைய கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிக்கட்டுகள் ஏறியும் மலைக்கோயிலை அடையலாம். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...