பாணமாக மாறிய ஈசன்…
ஆவுடையாக மாறிய விஷ்ணு~
அழகிய இளைஞனாக ஸ்ரீபிட்சாடன ரும், எழில் கொஞ்சும் மோகினியாக மகா விஷ்ணுவும் வடிவம் எடுத்து தாருகாவனம் சென்று, அங்கு ஆணவத்துடன் வசித்து வரும் ரிஷிகளுக்கும் அவர்களது பத்தினி களுக்கும் பாடம் புகட்டிய கதை பலருக் கும் தெரிந்திருக்கும். அந்தக் கதையைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
பண்டாரவாடைக்குக் கிழக்கே சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாருகாவனம். ஆம்! புராண காலத்தில் வழங்கப்பட்ட அதே பெயர்தான் இன்றும் இந்தக் குக்கிராமத்துக்கு வழங்கப்பட்டு வருகி றது. புராண காலத்தில் தாருகாவனத்தில் குடி கொண்ட ரிஷிகள், சிவபெருமானை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற மமதையில் இருந்தனர்! தங்களது இடையறாத தவத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சில அற்புத சக்திகளால் கர்வம் கொண்டு, மயங்கித் திரிந்தனர்; ஆசார- அனுஷ்டானங்களைத் துறந்தனர். மொத்தத்தில், தங்களது தவ வாழ்வுக்கும், சுக வாழ்வுக்கும் காரணமான வழுவூர் ஈசனை வணங்க மறந்தனர்.
பார்த்தார் வழுவூரார்… ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குப் புத்தி புகட்ட விரும்பினார். ஒரு திருவிளையாடல் அரங்கேறியது. வழுவூர் ஆலயத் தில் இருந்து பிட்சாடனமூர்த்தியாக உருமாறி, தாருகாவனம் நோக்கிப் புறப்பட்டார். இறைவன் எடுத்த இந்த பிட்சாடனர் உருவைப் பார்த்தால், எத்தகைய தேவதையும் சொக்கிப் போவாள். அப்படி ஒரு இளமை ததும்பும் வடிவம் பிட்சாடனருக்கு!
ரிஷிகளின் மனைவியரை மயக்கி, அவர்களைத் திருத்த பிட்சாடனர் தேவை. அதே நேரம், கண் போன போக்கில் திரியும் ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை மீட்டுக் கொண்டு வர- நளினமான ஒரு நங்கை தேவை ஆயிற்றே! மகேஸ்வரரின் மைத்துனரான மகா
விஷ்ணுவும், அழகு ததும்பும் மோகினியாக வடிவம் எடுத்தார்.இருவரும் தாருகாவனத்துக்குள் நுழைந்தனர். மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகள், அவள் (மகா விஷ்ணு) பின்னால் சென்றனர். அவர்களது மனைவியர், பிட்சாடனர் (சிவபெருமான்) பின்னால் அலைந்தனர். இரு தரப்பினரிடத்தும் மோகத்தை உருவாக்கி, அவர்களை நிலை குலைய வைத்தனர் பிட்சாட னரும் மோகினியும்!
வெகு நேரம் கழித்தே நடந்த உண்மை ரிஷிகளுக்குப் புரிந்தது. இதுவரை தங்களது தவத்துக்கும் வேள்விக்கும் உதவியாக இருந்த மனைவியர், யாரோ ஒரு ஆடவரின் பின்னால் மோக வெறியுடன் சுற்றுவது தெரிந்து, இதற்கெல்லாம் காரணமான பிட்சாடனர் மீதும், மோகினி மீதும் கடும் கோபம் கொண்டனர். பிட்சாடனரை அழிக்க வேள்வி செய்தனர்.
ஆதி மூலத்தையே அழிக்க வேள்வியா? வெகுண்ட இறைவனார், வேள்வித் தீயில் இருந்து தோன்றிய தீய சக்திகளை நொடிப் பொழுதில் ஒழித்தார். கோபம் அடங்காத ரிஷிகள், தங்கள் தவ சக்தியால் மதம் கொண்ட யானை ஒன்றை உருவாக்கி, பிட்சாடனர் மீது ஏவினர். அப்போது அணுவைப் போன்ற சிறு வடிவம் எடுத்து, மத யானையின் வயிற்றுக்குள் புகுந்த பிட்சாடனர், அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த யானையின் தோலைத் தன் மேல் போர்த்திக் கொண்டு, வீரத் தாண்டவம் புரிந்தார். இதுவே, வழுவூர் வீரட்டானத்தின் கதை.
அதன் பிறகு, ரிஷிகளுக்கு தவத்தின் மேன்மையை உணர்த்தி, ”உங்கள் தவ வலிமையால் கிடைத்த அற்ப சக்திகளை நம்பி, அவஸ்தைப் பட்டது போதும்… இனியாவது, விழித்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள். நிலை இல்லாத உங்களது போக்கைத் திருத்தவே இந்த நாடகம். இனியும், மதி மயங்கித் திரியாதீர்கள்” என்று அறிவுரையும் ஆசியும் வழங்கி விட்டு, வழுவூரை நோக்கி நடையைக் கட்டினார் பிட்சாடனர். உடன், மோகினியும் பின்தொடர்ந்தாள்.
வழியில், பண்டாரவாடை தலத்துக்கு வந்தபோது, மோகினி உடலின் ஒரு பகுதி ஆவுடையாராகவும், பிட்சாடனர் உடலின் ஒரு பகுதி லிங்க பாணமாகவும் ஆனது. இந்த சிவலிங்கத்தை வழுவூர் ஈசனே இங்கு பிரதிஷ்டை செய்து விட்டு, வழுவூர் சென்றாராம். இத்தகு பெருமைக்குரியதுதான், பண்டாரவாடையில் நாம் தரிசிக்கும் பிரமாண்ட லிங்கத் திருமேனி- ஸ்ரீகயிலாசநாதர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment