Monday, May 31, 2021

கும்பேஸ்வரர் ஆலயம்


இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் பல்லவர்கள் எழுப்பிய சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் கோவில்*
   
பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.

பாறைகளைக் குடைந்தும், கருங்கற்களைக் கொண்டும் திருக்கோவில் எழுப்பியதற்கு மூல காரணமாக விளங்கியவர்கள், பல்லவ மன்னர்கள். இவர்கள் காலத்தில் தான் பாறைகளும், மலைகளும் கற்களாக அல்லாமல், கோவில்களாகவும், தெய்வ வடிவங்களாகவும் பார்க்கப்பட்டன.

பாறைகளுக்குள் மறைந்திருக்கும் உருவங்களை பல்லவர்கள் கற்பனை செய்ததே, பல குடவரைக் கோவில்கள் உருவானதற்கு காரணம்.

இதற்கு சான்றாக, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் குடவரைக் கோவிலான மண்டகப்பட்டு விளங்குகின்றது. அதே போல, மலையும் பாறையும் சிற்பங்களாக மாறியதற்கு, மாமல்லபுரம் சான்றாகத் திகழ்கின்றது.

பல்லவர்களின் குடவரைக் கோவிலுக்கு அடுத்த நிலையில் இருப்பது அவர்களின் கலைப்பணியில் உருவான கருங்கற் கோவில்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.

இந்த செய்தியை அந்த ஆலயத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

இனி ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம். தற்போது இந்த ஆலயம் பார்ப்பதற்கு, சிமெண்டு மற்றும் செங்கற்களால் உருவான புதிய கோவில் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஆனால் ஆலயத்தின் கருவறைக்குள் அமைந்துள்ள விநாயகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நந்தி போன்றவை பல்லவர் கால படைப்புகள் ஆகும்.

இந்தக் கோவிலில் உள்ள கருங்கல்லும், அதில் உள்ள கல்வெட்டு வரிகளுமே, இந்த ஆலயத்தின் தொன்மைக்குச் சான்றாக அமைந்துள்ளன. இந்தக் கல்வெட்டு பற்றி, கி.பி. 1947-48-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டு கி.பி. 669- 670-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு கிரந்த மொழியில் 6 வரிகளில் அமைந்திருக்கிறது.

இதில் மகாராஜா பரமேஸ்வர வர்மன் என்னும் முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்றளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இந்தக் கல்வெட்டு சிவாலயத்தின் அருகில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தின் படிக்கட்டாக அமைந்திருக்கிறது.

அந்த செல்லியம்மன் கோவிலின் தொன்மை சுமார் முந்நூறு ஆண்டுகள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

அதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கல்வெட்டானது, அருகே உள்ள சிவன் கோவிலுக்கு தொடர்புடையதாகவே கருத முடிகிறது. இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

*கும்பேஸ்வரர், குழந்தை வல்லி*

தமிழகத்திலேயே முதன் முதலில் எழுப்பப்பட்ட கற்றளியாக, சிற்றம்பாக்கம் சிவன் கோவில் இருப்பது, இன்னும் பலருக்கு அறியப்படாமல் இருக்கிறது.

இந்த ஆலயத்தை ஆய்வு செய்தால், மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு தெரியவரலாம்.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் ‘கும்பேஸ்வரர்’ என்பதாகும். கும்பத்தில் இருந்த அமுதத்தில் இருந்து வெளிப்பட்டவர் என்பதால், இத்தல இறைவனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஐதீகத்தில் உருவானதே கும்ப கோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில். அதே ஐதீகத்தில் வட தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் காலத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்கோவிலாக, சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.

என்றாலும், கால வெள்ளத்தால் சிதையுண்ட இந்தக் கோவில், ஊர்மக்கள் ஒத்துழைப்பால் இன்று பழைய மூலவரை தாங்கி, புதியக் கோவிலாகக் காட்சி தருகிறது.

இறைவன் கும்பேஸ்வரர் சதுர வடிவ ஆவுடையாராக, பிரம்மாண்ட வடிவில் சுயம்புலிங்கத் திருமேனி கொண்டு, எழிலாக காட்சி தருகிறார்.

லிங்க வடிவம் கூட கும்பத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் பெயர் குழந்தைவல்லி. இவள் தன் பெயருக்கு ஏற்றவாறு சிறிய வடிவில், ஆனால் கலைநயத்தோடு தெற்கு முகமாய் நான்கு கரங்கள் கொண்டு அருளாசி வழங்குகின்றாள்.

*ஆலய அமைப்பு*

இவ்வாலயம் ஈசான்ய பகுதியில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. எதிரே பழமையான திருக்குளம் உள்ளது.

இது சீரமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. ஆலயத்தின் திருச்சுற்றில் வடமேற்கு பகுதியில் விநாயகர், லட்சுமி நரசிம்மர், வள்ளி- தெய்வானை சமேத சப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தின் தல விருட்சம் கொன்றை மரம். அந்த மரத்தின் அடியில் காசிலிங்கம், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

நடுநாயகமாக கும்பேஸ்வரர் சன்னிதி, எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர், தெற்குப் பார்த்தபடி அன்னை குழந்தைவல்லி காட்சி தருகிறாள். கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கின்றனர்.

*செல்லியம்மன் கருவறை*

இந்த ஆலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, திருவாதிரை உள்ளிட்ட சிவபெருமானுக்குரிய விசேஷங்கள் அனைத்தும் எளிமையாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

*வரம் தரும் தலம்*

இந்த ஆலயம் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் திருத்தலமாகத் திகழ்கின்றது. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், இத்தலத்து இறைவனை மனமுருக நம்பிக்கையோடு வழிபாடு செய்தால், நம்பிக்கையும், துணிவும் பெற்று மீண்டும் முயற்சிக்கும் மன உறுதியைப் பெறுவார்கள்.

வாழ்விலும் பல்வேறு வெற்றிகளைப் பெறுவார்கள் என இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும், அன்னை குழந்தைவல்லியை வழி படுவோருக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

*அமைவிடம்*

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பேரம்பாக்கத்தை அடுத்து சிற்றம்பாக்கம் திருத்தலம் அமைந்திருக்கிறது.

சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பேரம்பாக்கத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சிற்றம் பாக்கம் உள்ளது.

பேரம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. அதே நேரம் ரெயில் மூலமாக இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் அடுத்து வரும் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சிற்றம்பாக்கம் திருத்தலத்தை அடையலாம்.

*சுற்றியுள்ள கோவில்கள்*

சிற்றம்பாக்கத்தில் கும்பேஸ்வரர் ஆலயம் தவிர, செல்லியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில் ஆகிய பழமையான மற்ற ஆலயங்களும் இருக்கின்றன.

அதே போல் இத்தலத்தின் அருகில் உள்ள பேரம்பாக்கம், திருவாலங்காடு, கூம், இலம்பையங்கோட்டூர் ஆகிய இடங்களிலும் பழமையான பல ஆலயங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...