Friday, May 28, 2021

வில் ஏந்திய முருகன்


*வில்லேந்திய வேலவன்,  கமண்டலம் ஏந்திய கந்தன், ஐந்து முக அழகன்...9 அற்புதமான தலங்கள்.*

ஐந்துமுகம் கொண்டு சிவம் போல் அருளும் ஓதிமலையாண்டவர்!

ஓதிமலையாண்டவர்
கோவை - சத்தியமங்கலம் சாலையில் 48 கி.மீ தூரத்தில் உள்ள புளியம்பட்டியிலிருந்து பிரியும் சாலையில் 10 கி.மீ., பயணித்தால் இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலை அடையலாம்.

பதினென் சித்தர்களுள் ஒருவரான போகருக்குப் பழநி மலைக்கு வழிகாட்டுவதற்காக இத்தலத்து முருகன் வித்தியாசமாக அருள்பாலித்தாராம்.

அதாவது தன் ஆறுமுகங்களில் ஒன்றினை போகருக்கு வழிகாட்ட அனுப்பி வைத்தார் என்கிறது தலபுராணம். மீதமிருக்கும் ஐந்து முகங்களோடு சிவ ஸ்வரூபமாக முருகக்கடவுள் இங்கு காட்சி கொடுக்கிறார். ஐந்துமுகங்களுடன் காட்சி கொடுப்பதால் இந்தத் தல இறைவனுக்கு 'கெளஞ்ச வேதமூர்த்தி' என்ற திருநாமமும் உண்டு.

பிரணவத்தின் பொருள் மறந்த பிரம்மாவினை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் இரும்பு அறையில் சிறை எடுத்ததால் இத்தலத்துக்கு 'இரும்பறை' என்ற பெயரும் உண்டு. இத்தலத்துக்கு வந்து வணங்கினால் திருமணத்தடை நீங்குவதால் இங்குள்ள சுப்பிரமண்யரை கல்யாண சுப்பிரமண்யர் என்றே அழைக்கிறார்கள்.

நவகிரக தோஷம் நீக்கும் சென்னிமலைநாதன்

சென்னிமலைநாதன்
ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப் பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

முருகப் பெருமான் தன்னைத்தானே வழிபட்ட தலம் சென்னிமலை என்பர். முருகப் பெருமான், இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலமும் இதுவே. இந்தத் தலத்தில் மூலவர் சென்னிமலைநாதன் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகத்தின் அம்சமாக அருள்புரிகிறார். இவரைச் சுற்றிலும் மற்ற நவகிரகங்களின் எட்டு நாயகர்கள் அருள்புரிகிறார்கள். இங்கு மூலவரை வணங்கி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு புண்ணாக்கு சித்தரின் சமாதியும் அமைந்திருக்கிறது. தினமும் முருகப் பெருமான் மாலையில் மயில் மீது பறந்து வந்து இங்கு ஓய்வெடுக்கிறார் என்பது நம்பிக்கை. சென்னிமலைநாதரை வழிபட தீராத வியாதி தீர்ந்து, ஆயுள் பலம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

வேடன் வடிவில் காட்சிகொடுக்கும் வேளிமலை

வேளிமலை
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டத்தில் அமைந்திருக்கிறது வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில்.

வள்ளியைக் கவர்ந்து செல்ல வேடனாய் வந்தார் முருகப்பெருமான் என்பது ஐதிகம். வள்ளியை யாரோ ஒருவன் கவர்ந்து செல்கிறான் என்று நினைத்து வேடன் உருவில் இருந்த முருகப்பெருமானோடு போரிட்டார்கள் மலைக் குறவர்கள். அப்போது வேடன் உருவில் இருந்தாலும் தான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார் வேலவன். அனைவரும் அந்த வேதமூர்த்தியின் பாதம் பணிந்தனர் என்பது புராணம். அவ்வாறு மலைக்குறவர்களுக்கு முருகப்பெருமான் வேடன் உருவில் காட்சிகொடுத்த தலம் வேளிமலை. இங்கு முருகன் அதே திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தலத்தில் திருக்கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அதில் கலந்துகொண்டு தரிசித்தால் நம் முன் ஜன்ம பாவ வினைகளும் எரிந்துபோகும் என்பது நம்பிக்கை.

குழந்தைகளைக் காக்கும் குறுக்குத்துறை முருகன்

குறுக்குத்துறை
திருநெல்வேலி நகரத்திற்கு அருகே குறுக்குத்துறை எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். குறுக்குத்துறை முருகன் கோயிலையும், மேலக்கோயிலையும் தரிசித்தால் பழநிமலை முருகனையும் திருச்செந்தூர் முருகனையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

குறுக்குத்துறையில் உள்ள பாறைப்பகுதிக்கு `திருவுருவாமலை' என்று பெயர். திருச்செந்தூரில் கருவறையில் உள்ள முருகனின் சிலையும், இங்குள்ள மேலக்கோயில் முருகன் சிலையும் ஒரே பாறையில் வடிக்கப்பட்டவை. அதனால் திருச்செந்தூரைப் புகுந்த வீடு என்றும், குறுக்குத்துறை கோயிலைத் தாய்வீடு என்பார்கள் பக்தர்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள், இந்தத் தல முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்து, அரளி மாலை சாத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு தோஷம் இருப்பதாகக் கருதுபவர்கள் இங்கு வந்து முருகனுக்கு முன்னால் கருப்பட்டிக்கும், தவுட்டுக்கும் விற்றுப் பிறகு வாங்கிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்தால் குழந்தைகளின் தோஷம் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

வில்லேந்திய வேலவன் அருளும் வேலுடையான்பட்டு

வேலுடையான்பட்டு
கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது வேலுடையான்பட்டு.

கி.பி 13 - ம் நூற்றாண்டில் சித்ரகாடவன் என்ற குறுநில மன்னன் காலத்தில் இந்தத் திருமேனி மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கையில் வில் ஏந்தி மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஏர்கொண்டு நிலத்தை உழுகிறபோது, முருகப்பெருமான் திருமேனியில் கலப்பை இடித்தது. இதனால் ஏற்பட்ட தழும்பினை இன்றும் இறைவனின் திருமேனியில் காண முடியும்.

உற்சவர் திருமேனி கிடைத்த சம்பவமும் வித்தியாசமானது. மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றபோது அவர்கள் வலையில் சிக்கிய விக்கிரகமே இங்கு உற்சவராக அருள்பாலிக்கிறது. இந்த ஆலயத்தில் சுவாமிக்குப் பாதக்குறடு சாத்தும் வழக்கமும் இருந்துவருகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இந்த வில்லுடைய பெருமானை வேண்டிக்கொள்ள குறைகள் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பிரம்மன் வழிபட்ட எண்கண் முருகன்

எண்கண் முருகன்
திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பிரணவ மந்திரத்தை மறந்ததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்ட பிரம்மன் மீண்டும் சிவபெருமானை வணங்கித் தனது படைப்புத் தொழிலைப் பெற்ற தலம் இது. அதனால்தான் இந்தத் தலத்து இறைவன் பிரம்மபுரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். பிரம்மன் தனது எட்டு விழிகளால் சிவபெருமானையும், முருகனையும் வணங்கியதனால்தான் இந்த ஊர் எண்கண் என்றும் பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு, முருகப்பெருமான், தென்திசை நோக்கி அருள்வதால் தட்சிணாமூர்த்தி அம்சமாகப் போற்றப்படுகிறார். அதனால், ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குருதோஷம் நீங்கப்பெற்று கல்வி, ஞானம், அறிவு, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம். பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் விசாக நட்சத்திரத்தன்று, இங்குள்ள குளத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் கண் தொடர்பான பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை.

நாகம் குடைபிடிக்கும் குமரக்கோட்டம்

குமரக்கோட்டம்
மும்மூர்த்திகளையும் தரிசித்த பேற்றினை அருளும் திருத்தலம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களுக்கு நடுவே சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது இத்தலம். இந்தத் தலத்தில் மூலவர் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க எழிலோடு காட்சிகொடுக்கிறார். இங்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை வேண்டிக்கொண்டால் நாகதோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதிகம்.

திருமண வரம் அருளும் குன்றத்தூர் சுப்பிரமணியர்

குன்றத்தூர் சுப்பிரமணியர்
திருப்போரூரில் அசுரர்களுடன் போர்புரிந்த முருகப்பெருமான் தாரகாசுரனை அழித்துவிட்டுத் திருத்தணி செல்லும்போது வழியில் தங்கி ஓய்வெடுத்த மலை குன்றத்தூர் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தில் கருவறைக்கு வெளியே, நேருக்கு நேர் நின்று, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யரை ஒருசேர தரிசிக்க முடியாது. சுப்பிரமண்ய சுவாமியை நேராகவும் வலது மற்றும் இடதுபுறங்களில் நின்று வள்ளி, தெய்வானையயும் தரிசனம் செய்யலாம்.

திருமணத்தடை உள்ளவர்களுக்கு இந்தத் தலம் மிகச்சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு வந்து முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

பகை நீக்கி பலம் அருளும் சிவசுப்பிரமணியர்

சிவசுப்பிரமனியர்
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கம் என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரும் பேர்கண்டிகை. இங்குதான் சிவ சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது.

அகத்தியப் பெருமான் தென் திசைக்கு வந்தபோது இந்த்த் தலத்தில் சிவபெருமானின் திருமணக் கோலத்தையும் சுப்பிரமணிய சுவாமியையும் சேர்த்து தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு, சிவ சுப்பிரமணியராகத் தாய் தந்தையரான சிவ பார்வதி தேவியருடன் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி தந்தார் முருகக்கடவுள். இங்கே, முருகக் கடவுள் ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

வேல் இங்கு அம்பிகையின் சக்தியாக வழிபடப்படுகிறது. மேலும் இந்தத் தலத்தில் சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு சிறப்பாக சத்ரு சம்ஹார யந்திர ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத பெரும்பகையும் தீரும். வழக்குகளில் வெற்றிகிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு முருகப் பெருமானுக்கு இணையாக வேலுக்கும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

*Visit YouTube channel*


https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA


Follow us in *Instagram*

https://www.instagram.com/p/CPWD-aSBffh/?utm_medium=copy_link


*Facebook*

https://www.facebook.com/100104942230621/posts/120113753563073/

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...