*🙏இன்றைய ஆலயதரிசனம்🙏*
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் - செய்யூர் - காஞ்சிபுரம்
மூலவர்:- கந்தசுவாமி
அம்பாள் :- வள்ளி-தெய்வானை
தல சிறப்பு:
வெளிப் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோயிலைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
பொது தகவல்:
வெளிப் பிராகாரத்தில் இருந்து முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும், இடப்புறத்தில் சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம். இச் சன்னதியின் முன் நந்தி தேவர் வீற்றிருக்க இருபுறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர். கொடி, மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதியும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்குப் பின்னால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ளன நட்சத்திர வேதாளங்கள்.
தலபெருமை:
வேதாளங்களை சிவகணங்களாக செய்யூர் கந்தசுவாமி கோயிலில் காணலாம். வேதாளங்கள் பைரவரின் ஆணைக் குக் கட்டுப்பட்டவை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு, கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக விரைவாக முருகனிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பது ஐதிகம். இதனால் பலர் பயனடைந்துள்ளதால், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இக்கோயிலை நாடி வருவோர் அதிகம். தெற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்கள் கொண்டது கோயில். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ் தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. இக்கோயிலின் சிறப்பு, கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்காளாகவே காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவ கோயில்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை விளங்குவர். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். மேலும் சிவதலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் கோயிலில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப்படுகின்றன. தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேதாள பூஜை விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளிப்பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது. கோயலுக்கு வெளியே நவகிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். கோயிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் திருநாமங்களுள் ஒன்று.
தல வரலாறு:
கந்தசுவாமி பெருமானைப் போற்றி அந்தக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது எனப் பல நூல்கள் தோன்றி யுள்ளன. அருணகிரிநாதரும் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். இப்புண்ணிய தலத்தில் அவருக்கு சிலையும், அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுவது சிறப்பு!
No comments:
Post a Comment