*திருக்கண்டீஸ்வரம்-நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்*
திருக்கண்டீஸ்வரம் என்னும் ஒரு திருத்தலானது பண்ருட்டி கடலூர் சாலையில் நெல்லிக்குப்பம் நகருக்கு ஒரு இரண்டு கிலோமீட்டருக்கு முன்னால் அமைந்துள்ளது. *ஶ்ரீ ஹஸ்த தாளாம்பிகை சமேத ஶ்ரீ நடன பாதேஸ்வரர்* என்னும் இந்த சிவத்தலம் மிக மிகப் புராதனமானது. இந்தக்கோவிலுக்கு தல புராணம் என்று ஒன்று இல்லாவிட்டாலும், இக்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகள் யுகங்களைக் கடந்தவை .
இந்த ஊர் ,வழக்கத்தில் திருக்கண்டேஸ்வரம், என்றும் மேலும் திருக்கண்ணீஸ்வரம் திருவடுகூர், திருமுண்டீஸ்வரம் என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. "கண்ணி"என்றால் "வலை " என்றும் "சுரம்" என்றால் காடு என்றும் பொருள் படும். முற்காலத்தில் இப்பகுதி உள்ளே நுழைந்தால் வெளியே செல்லமுடியாத அளவு ஒரு பெரும் காடாக இருந்ததை இப்பெயர் குறிப்பிடுகிறது. சிவபெருமானின் துவாரபாலகர்களான "திண்டி", "முண்டி" இருவருள் முண்டி வழிபட்ட தலமாகும் இது.
சிவபெருமான் "நடன பாதேஸ்வரர்", " ஆடும் அடிகள்", "" மன்றில் குனிக்கும் பெருமான் ""
,"பழி இல் புகழாளர் " என்னும் பெயர்களாலும், அம்மை 'ஹஸ்ததாளாம்பிகை" ,""கைத் தாளமிட்ட அம்மை ", "காணார்குழலி" ,"தளரும் கொடியிடையாள் " என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
ஆகையால் சுவாமி , அம்மையை "ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடன பாதேசுவரர் "என்று வட மொழியிலும், "தளரும் கொடியாள் உடனுறை ஆடும் அடிகள் "" என்று நற்றமிழிலும் அழைக்கலாம்.
கோவில் சற்றே சிறிய கோவில்தான். கோவிலுக்கு ராஜ கோபுரம் போன்ற அமைப்புகள் கிடையாது. . சுவாமி இங்கு மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் தனித்தனியாக அமர்ந்துள்ளனர்.ஆனால் அந்த சந்நிதிகள் நேர்கோட்டில் இல்லை. இப்படி சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருப்பது *அபிமுகம்* "என்னும் அபூர்வ அமைப்பாகும். இந்த அமைப்புக்கு அனுக்கிரக சக்தி மிக அதிகமாகும். அம்மன் சந்நிதிக்கு எதிரே ஒரு புஷ்காரிணி அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலில் மற்ற கோவில்களில் இல்லாத சில அபூர்வ அமைப்புக்கள் உள்ளன.
முதலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாவார். சுவாமி கிருத யுகத்திலிருந்தே இங்கு அமர்ந்துள்ளார். அவ்வளவு பழைமையான லிங்கம் இந்த ஆடும் அடிகள்.
சுவாமி விமானத்தில் மேற்கு பார்த்தவாறே யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். சிவன் கோவிலில் ஏன் நரசிம்மர் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனிக்கதை உள்ளது. அது கடைசியில் வருகிறது. அதே விமானத்தில் கிழக்கு பார்த்து இந்திரன் அமர்ந்துள்ளான். கௌதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் தன உடலில் இருந்த ஆயிரம் கண்கள் மறைய இறைவனை பிரார்த்தித்து நலம்பெற்ற தலம் இது. பிறகு இழந்த தன் இந்திரா பதவியையும் பெற்றுக்கொண்டான்.
இந்தக்கோவிலில் உள்ள துர்கை ""சாந்த துர்கை "" ஆகும். துர்கையில் பாதங்களின் கீழ் மகிஷம் கிடையாது.
கன்னி மூலையில் விநாயகர் ஒரு கையில் சிவலிங்கத்துடனும் மறுகையில் ஒரு நீலோத்பல மலருடனும் அமர்ந்துள்ளார். இங்கு விநாயகர் "மூலாதார கணபதி"யாக அமர்ந்துள்ளார்.
தக்ஷ யாகத்தில் வீரபத்திரரால் பற்கள் உடை பட்ட சூரிய பகவான் இத்தலத்தில் சுவாமியை வழிபட்டு தன் அழகிய பற்களை திரும்பப்பெற்றான்.
இங்கு பைரவர் ஆறு கரங்களுடன் இருக்கிறார். இது போன்ற அமைப்பு காசியில் உள்ளது.
இது மயன் , அருச்சுனன் வழிபட்ட தலம். மற்றும் மாந்தாதா மன்னர் வழிபட்ட தலம்.
ஒரு காலத்தில் ஐந்து தலைகள் கொண்டிருந்த பிரம்மன் ஆணவத்தால் இறைவனை அவமதிக்க இறைவன் அவனது ஒரு தலையை கொய்த போது , பிரம்மன் மயங்கி விழுந்து பிறகு தன் உணர்வு வரப்பெற்று இறைவனை வணங்கி தனது சிருஷ்டி தொழிலை மீண்டும் துவங்கிய இடம் இது.
கோவலன் , மாதவியின் மகளான மணிமேகலை ,ஒரு அமுத சுரபியின் உதவியால் "காய சண்டிகை " என்னும் பெண்ணின் பசி தீர்த்த கதையை நாம் அறிவோம். அந்த அமுத சுரபியை மணிமேகலைக்கு வழங்கியவர் விருச்சிக முனிவர் ஆவார். அவர் வாழ்ந்த தலம்,இத்திருத்தலம்.
இங்கு சுவாமி அகத்தியருக்கு தனது நடன கோலத்தை காட்டியருளியதால் அவர் நடன பாத ஈஸ்வரர் ஆகிறார். அச்சமயம் அம்பிகை கைத்தளமிட்டு இறைவனின் நடனத்தை ரசித்ததால் "கைத்தாளமிட்ட அம்மை "என்னும் பெயர் சூட்டப்பட்டது.
அந்தக்காலத்தில் அம்பிகையின் சந்நிதியில் பெண்கள் மட்டுமே வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர். மேலும் பரிசாரகம், மே ள வாத்தியங்கள் இசைப்பது, மற்ற குற்றேவல்கள் புரிவது அனைத்தும் பெண்களே. ஆனால் 1905 க்குப்பின் வழிபாட்டு சமஉரிமையை நிலை நாட்ட சிலர் சட்டத்தின் துணையை நாட,தற்போது ஆண்களும் வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது குருக்களாக இருக்கும் ஸ்ரீ சேனாதிபதி குருக்களின் கொள்ளுத்தாத்தா காலம் வரை அவரது கொள்ளுப்பாட்டி தான் பூஜைகள் செய்வாராம்.
இந்தக்கோவில் முதல் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கோவில். பிறகு ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன், இரண்டாம் ராஜராஜன் போன்ற தமிழ் மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சாளுக்கிய பொறையன் ஆகவமல்லன், சாளுவ நரசிம்மன் ,ஆந்திர தளபதி நரசிம்மய்யா போன்றவர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட கோவில்
மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும்போது, மீள முடியாத சில சந்தர்ப்பங்களில் முடிவில் அவர்கள் நாடுவது இறைவனை. அப்படி இந்தக்கோவிலுக்கு வருவதால் என்னென்ன வரங்களை இறைவன் வழங்குகிறார் என்று பார்ப்போம்.
பிரம்மனின் மயக்கத்தை தீர்த்ததால், *கோமா* நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீண்டு வர சுவாமி அருள் புரிகிறார். இதற்கு சாட்சியாக பலர் உள்ளனர்.
திருமணத்தடை நீங்கும். சந்தான பாக்கியம் உண்டாகும். வாராக்கடன் வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். எலும்பு, மஜ்ஜை பிரச்சினைகள் தீரும்.
இனி யோக நரசிம்மர் இங்கு வந்த கதையை பார்ப்போம்.
நரசிம்ம அவதாரம் எடுத்து மஹாவிஷ்ணு ஹிரண்யக சிபுவை அழித்து தனது கடும் சீற்றம் குறையாமல் நிற்க ,அவர் அருகே செல்ல மகாலட்சுமியே அஞ்சி நிற்க , சிறுவன் பிரஹலாதன் அவர் அருகே சென்று சாந்தமாகுமாறு பிரார்த்தனை செய்கிறான். தனது பக்தனுக்கு இரங்கி பெருமாளும் சீற்றம் குறைத்து பிரகலாதனுக்கு அருள் வழங்குகிறார். அப்போது பிரஹலாதன் நரசிம்மரிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் " சுவாமி , என் தந்தை "ஹரி எங்கே ஹரி எங்கே "என்று கேட்கும் போது நான் நீங்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்தேன். அவரும் அந்த தூணை பிளக்க நீங்களும் அந்த தூணிலிருந்து வெளிப்பட்டு என்தந்தையைக் கொன்றீர்கள். "என்ன இருந்தாலும் ஹிரண்யகசிபு நம் பக்தன் பிரகலாதனின்
தந்தை தானே என்று நீங்கள் என் தந்தைக்கு கருணை காட்டவில்லை. இந்த செயலின் மூலம் பெற்ற தந்தையைக் கொலை செய்ய உங்களைத் தூண்டி விட்டதால் , பித்ருஹத்தி பாவத்தை நான் சுமக்க வேண்டியதாகி விட்டதே ""என்று
கண்ணீர் விட , நரசிம்மர் அவனைத் தேற்றுகிறார். "கவலைப்படாதே ப்ரஹ்லாதா.உன் பாவத்தை நான் சுமக்கிறேன் "என்று சொல்லி திருக்கண்டீசுரத்து சிவனை வணங்கி யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார். இந்த தலம் அப்படி நரசிம்மராலேயே கிருதயுகத்தில் வழிபடப்பட்ட தலம் என்றால் இதன் பெருமையை என்னவென்று சொல்வது, இதன் காரணமாகத்தான் யோக நரசிம்மர் கோவில் விமானத்தில் வீற்றிருக்கிறார்.
மேலும் அவர் ப்ரஹ்லாதனுக்கு ஒரு வரம் அளிக்கிறார் "இனிமேல் நாம் உன் வம்சத்தில் யாரையும் கொல்ல மாட்டேன் "" என்று வாக்குறுதியும் அளிக்கிறார். கதை இத்துடன் முடியவில்லை.
ப்ரஹ்லாதனுக்குப்பின் அவனது மகன் விரோசனனும் அதன் பின் அவன் மகன் மஹாபலியும் ஆட்சி செய்கிறார்கள். அப்போது மஹாபலி இந்திர பதவி அடைய ஒரு யாகம் செய்கிறான். அந்த யாகத்தை தடுக்க மஹாவிஷ்ணு சிறுவன் வாமனராக
வந்து மூன்றடி நிலத்தை தானமாக கேட்கிறார். வந்திருப்பது மஹாவிஷ்ணு என்று தெரிந்தும் , தனது குலகுரு சுக்ராச்சாரியார் தடுத்தும் கேட்காமல் மஹாபலி வாமனாருக்கு மூன்றடி நிலம் தானமாக தர ஒத்துக்கொள்கிறான். வாமன்ராக வந்த விஷ்ணு விசுவ ரூபம் எடுத்து இரண்டு அடிகளில் எல்லா உலகங்களையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் கேட்க , மஹாபலி தன் தலையை தருகிறான். விஷ்ணு அவன் தலை மேல் கால் வைக்கிறார். அப்போது பிரஹலாதன் மறுபடி அவர் முன் தோன்றி "சுவாமி நீங்கள் செய்தது ஏமாற்று வேலை அல்லவா. வந்த கோலம் ஒன்று எடுத்த கோலம் ஒன்று என்று நீங்கள் செய்தது சரி அல்ல. இது பாவம் அல்லவா. இனிமேல்
இந்த பூவுலகத்தில் யாரும் உங்கள் செயலால் பயந்து தானம் செய்யவே முன் வர மாட்டார்கள் அல்லவா. மேலும் தானம் வாங்கும் பிராம்மணர்கள் தானம் கொடுப்பவர்களுக்கு ஏதேனும் திரும்ப தர வேண்டும் அல்லவா. அப்படி நீங்கள் என் பெயரனுக்கு என்னே செய்தீர்கள் "என்று கேட்கிறான். அப்போது வாமனர் ப்ரஹ்லாதனிடம் " உன் தந்தை பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அவனுக்கு அது கிடைக்கவில்லை. நீ என் பக்தன் ஆனாலும் உனக்கும் நான் அந்த வரம் தரவில்லை. உன் மகனுக்கும் அந்த வரம் தரவில்லை. ஆனால் தன்னையே எனக்கு தானமாக தந்த மஹாபலிக்கு நான் விதி விலக்காக சிரஞ்சீவித்துவம் வழங்குகிறேன் "என்று ஆசி வழங்குகிறார். ஆனால் ஏமாற்று வேலை செய்த பாவத்தை போக்க இத்தலத்து இறைவனை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.
இவ்வளவு பெருமை மிக்க இந்த திருத்தலத்தை இனிமேலும் பார்க்காமல் இருக்கலாமா . உடனே கிளம்புங்கள்...
View about temple
https://youtu.be/k_421sdGsfc
No comments:
Post a Comment