Thursday, June 30, 2022

இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !

இன்று ஜூன் 30-06-2022, சுபகிருது வருடம், ஆனி 16, வியாழக்கிழமை, சந்திர தரிசனம்!

இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காண வேண்டும் என்று கூறினார்கள்.


Monday, June 27, 2022

சிவன் கோயில்

சிவனின் தமிழ்ப் பெயர்கள்...
***********************************

சிவனின் தமிழ்ப் பெயர்களும்
அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.

1. அடியார்க்கு நல்லான் (வட)பக்தவத்சலன்

2. அம்மையப்பன் (வட) சாம்பசிவன்

3. உடையான் (வட) ஈஸ்வரன்

4. உலகுடையான் (வட) ஜகதீஸ்வரன்

5. ஒருமாவன் (வட) ஏகாம்பரன்

6. கேடிலி (வட) அட்சயன்

7. சொக்கன் (வட) சுந்தரன்

8. தாயுமானவன் (வட) மாத்ருபூதம்

9. தான்தோன்றி (வட) சுயம்பு

10. தூக்கிய திருவடியன் (வட) கொஞ்சிதபாதன்

11. பரமகுரு, (வட) தென்முகநம்பி, ஆலமரச்செல்வன் தட்சிணாமூர்த்தி

12. புற்றிடங்கொண்டான் (வட) வான்மீக நாதன்

13. நடனசிவம் (வட) நடராஜன்

14. பெருந்தேவன் (வட) மகாதேவன்

15. பெருவுடையான் (வட) பிரகதீஸ்வரன்

16. மாதொருபாகன் (வட) அர்த்தநாரி

17. மணவழகன் (வட) கல்யாணசுந்தரன்

18. வழித்துணையான் (வட). மார்க்க சகாயன்

19. அண்ணாமலையான் (வட) அருணாசலேசுவரன்

20. பிறைசூடன் (வட) சந்திரசேகரன்

சிவன்

உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?..

பிரதோஷ வழிபாடு

*பிரதோஷ வழிபாடு (26.06.2022) 

*பிரதோஷ வழிபாடு பலன்*

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் –  நல் எண்ணம், நல் அருள் தரும்.

*செவ்வாய் பிரதோஷம் –  பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்*

புதன் பிரதோஷம் –  நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் –  எதிரிகள், எதிர்ப்பு விலகும்.

சனிப் பிரதோஷம் –  அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம்.

2. ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.

3. குடும்ப செழிப்பை பெற திருமகளை வணங்கி வரலாம்.

4. யோக சக்தியையும், மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம்.

5. கலையை, கல்விச் செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம்.

6. யோகத்தில் சிறந்து விளங்க சிவசக்தியை வணங்கலாம்.

7. வெற்றிமேல் வெற்றி பெற ராஜகணபதியை வழிபடலாம்.

8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம்.

9. வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்பட பெருமாளை வழிபடலாம்.

10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் முக்தியையும் அடைய விரும்புபவர்கள் சிவபெருமானை வழிபடலாம்.

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

பிரதோஷம் என்பது சிவனை வழிபட உகந்த நேரம். வறுமை, பயம், பாவம், மரண பயம், மரண வேதனை, நஞ்சால் ஏற்படும் அபாயம் ஆகியவை இதனால் அகலும்.

*பிரதோஷ காலத்தில் சிவனை நினைத்தாலே நன்மை தான்*

பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும்.

அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். 

அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாக ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிரதோஷம், மகாப்பிரதோஷம், பிரளயப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும். சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும். கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

*தென்னாடுடைய சிவனே போற்றி…!*

*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!*

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!*

*"திருச்சிற்றம்பலம்''*

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...